You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
The Family Man - Season 2 தமிழர்களுக்கு எதிரான வெப் சீரீஸ் தொடரா?
அமெஸானில் வெளியாகவிருக்கும் தி ஃபேமிலி மேன் - சீஸன் 2ல் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. தமிழர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கிறதா ஃபேமிலி மேன் தொடர்?
அமெஸான் ஓடிடி தளத்தில் வெளிவந்த தி ஃபேமிலி மேன் தொடர், பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு தொடர். மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடித்த இந்தத் தொடர், ஒரு உளவு அதிகாரியின் சாகசங்களைச் சொல்லும் தொடராக வெளியானது.
முதல் சீஸன் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்த சீஸன் எப்போது என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இரண்டாவது சீஸன் ஜூன் 4ஆம் தேதி வெளியாகுமென அமெஸான் அறிவித்துள்ளது. இரண்டாவது சீஸனுக்கான ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது.
முதல் சீஸனின் பெரும் பகுதி கதை மும்பையில் நடப்பதாகக் காட்டப்பட்ட நிலையில், இந்த சீஸனில் கதையின் ஒரு பகுதி சென்னையில் நடப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், இது தொடர்பாக ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்த ட்ரெய்லரில் வரும் அதிகாரி ஒருவர், "நமக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின்படி ஐஎஸ்ஐஎஸ்க்கும் அங்குள்ள கலகக்குழுக்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் திட்டமென்ன என்பதைக் கண்டறிய வேண்டும்" என்று பேசுகிறார். தமிழ் போராளியைப் போலக் காட்டப்படும் சமந்தா, "நான் எல்லோரையும் சாககொல்லுவேன்" (சாகடிப்பேன் அல்லது கொல்லுவேன்?) என்று பேசுகிறார். இலங்கையின் வரைபடமும் சீருடையில் போராளிக் குழுக்கள் பயிற்சி பெறும் காட்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.
இதையடுத்து, இந்த இரண்டாவது சீஸனில் கலகக் குழு என்று சொல்வது, தமிழ் போராளிகளைத்தான் என பலரும் தங்கள் கண்டனங்களை ட்விட்டரில் பதிவுசெய்து வருகின்றனர்.
"இந்திய இயக்குநர்களே, ஏற்கனவே இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று சொல்லுமளவுக்குச் செய்து வலதுசாரிகளுக்கு உதவினீர்கள். இப்போது தமிழர்களுக்கும் இதைச் செய்ய விரும்புகிறீர்களா?" என கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் பலர் யு ட்யூபில் இந்த ட்ரெய்லரை dislike செய்யும்படி கோரிவருகின்றனர். மேலும் பலர் அமெஸானுக்கு சந்தா கட்டுவதை நிறுத்த வேண்டுமென்ச் சொல்லியிருக்கின்றனர்.
இந்த இரண்டாவது சீஸன் தொடர்பாக இயக்குநர் ராஜ் நிதிமோருவும் கிருஷ்ணா டி.கேவும் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர். அதில் சமந்தாவின் பாத்திரம் மிகத் தீவிரமான பாத்திரம் என்றும் கதாநாயகனான ஸ்ரீகாந்த் திவாரியின் பாத்திரத்திற்கு மாறுபட்ட பார்வையைக் கொண்ட பாத்திரமென்றும் சொல்லியிருக்கின்றனர்.
"எந்த வன்முறையையும் நியாயப்படுத்தவில்லை. மாறாக அதற்குப் பின்னால் இருக்கும் சித்தாந்தத்தை சொல்கிறோம். நாங்கள் இதில் எந்த நிலைப்பாடும் எடுக்க விரும்பவில்லை. பார்வையாளர்களாகவே இருக்க விரும்புகிறோம். நாளிதழ்களில் வெளிவந்த தகவல்களை வைத்து ஒரு உலகை உருவாக்கியிருக்கிறோம்" என்கிறார்கள் இயக்குநர்கள்.
The Family Man தொடர் என்பது தேசியப் புலனாய்வு முகமையில் அச்சுறுத்தல் ஆய்வு மற்றும் கண்காணிப்பு அணியில் (இது ஒரு கற்பனை அணி) பணியாற்றும் அதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரியின் சாகசங்களைச் சொல்லும் கதை. முதல் சீஸனில் ஐஎஸ்ஐஎஎஸ் குழுவால் தூண்டப்பட்ட இஸ்லாமியவாத தீவிரவாத தாக்குதல்களை ஸ்ரீகாந்த் திவாரியின் அணி முறியடிப்பதாகக் காட்டப்படும். மற்றொரு பக்கம், ஸ்ரீகாந்தின் குடும்ப வாழ்க்கை மோசமடைந்து கொண்டே போவது குறித்த காட்சிகளும் இடம்பெற்றன. ஸ்ரீகாந்தாக மனோஜ் பாஜ்பாயும் அவரது மனைவி சுசித்ராவாக பிரியாமணியும் நடித்திருந்தனர்.
இந்த இரண்டாம் பாகத்தில் ராஜி பெண் போராளி பாத்திரத்தில் சமந்தா நடித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு 'கொரோனா வார் ரூம்' - அவசர உதவி பெறுவது எப்படி? எவ்வாறு செயல்படுகிறது?
- இஸ்ரேல் - பாலத்தீன மோதலைத் தடுக்க செளதி கடைப்பிடிக்கும் உத்தி என்ன?
- தமிழக சிறைகளில் கொரோனா அதிகரிக்கிறதா? - கள நிலவரம் என்ன?
- கி.ரா என்னும் கரிசல்காட்டு நெடுங்கதை
- கொரோனா தடுப்பை விட கைதுக்கு முன்னுரிமை தந்ததா டெல்லி காவல்துறை?
- `லிவ்-இன்' ஜோடி பாதுகாப்பு கோரி வழக்கு: பஞ்சாப் உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
- இஸ்ரேல்-காசா மோதல்: சண்டை நிறுத்த அழுத்தத்துக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்
- கி.ரா. மறைவு- "பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட படைப்பாளி" திரையுலக பிரபலங்கள் உருக்கம்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :