நிழல் - திரைப்பட விமர்சனம்

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர்கள்: குஞ்சகோ போபன், நயன்தாரா, இஸின் ஹஷ், லால், திவ்யா பிரபா, ரோனி டேவிட்; இசை: சூரஜ் எஸ். க்ரூப்; இயக்கம்: அப்பு என். பட்டாத்ரி.

மலையாளத்தில் கடந்த சில மாதங்களில் திரையரங்குகளிலும் ஓடிடிகளிலும் பல த்ரில்லர் படங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்த நிழல் படத்தையும் வைக்கலாம். ஏற்கனவே திரையரங்கில் வெளியாகி விட்டாலும் தற்போது அமெஸானில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம்.

நீதிபதியாக இருக்கும் ஜான் பேபி ஒரு விபத்தில் சிக்கி மீள்கிறான். அந்த விபத்தால் ஏற்பட்ட மன நல பாதிப்புகளில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்போது நிதின் என்ற சிறுவனின் அறிமுகம் கிடைக்கிறது.

6-7 வயதே ஆகும் அந்தச் சிறுவன் கொலை கதைகளைச் சொல்கிறான். அந்தக் கொலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தவையாக இருக்கின்றன.

அந்தக் கொலைகள் குறித்து அந்தச் சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது என்ற புதிரை விடுவிக்க முயல்கிறான் ஜான் பேபி. ஆனால், அதற்குப் பிறகுதான் ஒன்றின் பின் ஒன்றாக பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன.

சாதாரணமான ஒரு சைக்கோ த்ரில்லராகத் துவங்கி, பேய்க் கதையைப் போல மாறி, மீண்டும் சைக்கோ த்ரில்லராகவே முடிகிறது படம். பேய்ப் படங்களில் வருவதைப் போல, சட்டென தூக்கிவாரிப் போடும் காட்சிகள் ஒன்றிரண்டு இருக்கின்றன. ஆனால், அமைதியாக அமர்ந்து ரசிக்கக்கூடிய நல்ல சைக்கலாஜிகல் த்ரில்லர் இந்தப் படம்.

ஒரு காட்சியில் ஜான் பாபியைச் சந்திக்கும் ஒரு பெண்மணி, "இந்தக் கொலையைப் பற்றி செத்துப்போன நபர்தானே சொன்னார்?" என்று கேட்பதுபோல ஒரு காட்சி வருகிறது. சாதாரணமாகத் துவங்கும் அந்தக் காட்சி, ஒரு விசித்திரமான திகிலை ஏற்படுத்தி முடிகிறது. இதுபோல, இந்தப் படத்தில் பல தருணங்கள் இருக்கின்றன.

படத்தின் நாயகனாக வரும் குஞ்சக்கோ போபனுக்கு வைரஸ், நாயாட்டு என தொடர்ச்சியாக நல்ல படங்கள் அமைகின்றன. அதில் இந்தப் படமும் ஒன்று. எந்த அலட்டலும் இல்லாமல் சிறப்பாக அதைச் செய்கிறார் போபன். இவருக்கு அடுத்தபடியாக படத்தில் கலக்கியிருப்பது சிறுவன் நிதினாக வரும் இஸின் ஹஷ். நிதினின் தாய் ஷர்மிளாவாக வரும் நயன்தாராவுக்கு பெரிய சவாலான பாத்திரமில்லை. அந்த ரோலில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார்.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் ஆற, அமர ரசிக்க நல்ல த்ரில்லர் இந்தப் படம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :