அஜித்தின் 'வலிமை', சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படங்கள் வெளியீடு எப்போது? திணறும் கோலிவுட்

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் தமிழகம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், பல கோடி ரூபாய் செலவு செய்து தயார் நிலையில் இருக்கும் தமிழ்த் திரைப்படங்களின் வெளியீடு, கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் தள்ளிப்போயுள்ளது. தமிழ்த் திரையுலகை தற்போது சூழ்ந்துள்ள நெருக்கடி என்ன?

கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு பல தொழில்களின் வருவாய் பாதிக்கப்பட்டு, 'அடுத்தது என்ன?' என்பது தெரியாமல் முடங்கின. அதில் சினிமாவும் ஒன்று. சினிமா ஷூட்டிங் ரத்தாகி திரையரங்குகள் மூடப்பட்டு அதனை நம்பி இருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலை கேள்விக்குள்ளானது.

மேலும், பல முக்கிய படங்களின் வெளியீடும் கடந்த வருடம் தள்ளிப்போனது. சில படங்கள் பல மாத காத்திருப்புக்கு பிறகு நேரடியாக தியேட்டரில் வெளியாயின. சில படங்களோ நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி படங்கள் திரையீடுக்கான புதிய பாதை தொடங்கப்பட்டது.

இதனால், படத்தயாரிப்பாளர்கள் தரப்பிற்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே மனக்கசப்பு நிலவியது. முன்பெல்லாம், திரையரங்குகளில் படங்கள் வெளியாகும் போது ரசிகர்களுக்கு அந்த நாளே கொண்டாட்டமாக இருக்கும். அந்த கொண்டாட்டமும், மகிழ்ச்சியும் இன்னும் சில வருடங்களுக்கு திரையரங்குகளில் தென்படுமா என்பது சந்தேகம்தான்.

ஓடிடியில் வெளியான மாஸ் ஹீரோ படங்கள்

கடந்த வருடம் திரையரங்குகள் மூடப்பட்டு, வெளியாவதற்கு தயார் நிலையில் இருந்த 'மாஸ்டர்', 'சூரரைப்போற்று', 'தலைவி' போன்ற பல படங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் முடங்கின. இதில் பல படங்கள் ஓடிடி தளங்களை நோக்கி நகரத் தொடங்கின.

தியேட்டரில் வெளியான பிறகு 30 நாட்களுக்கு பிறகுதான் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடலாம் என்றிருந்த நிலை மாறி, இப்போதெல்லாம் நேரடியாகவே சில படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக சூர்யா போன்ற மாஸ் ஹீரோவின் 'சூரரைப்போற்று' நேரடியாக ஓடிடியில் வெளியானது, தியேட்டர் உரிமையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இன்னொரு பக்கம் சினிமா தயாரிப்பாளர்களும் நிலைமையை சமாளிக்க முடியாமல் தத்தளித்தனர். படப்பிடிப்புகளும் ரத்தாகி திரையுலகமே சில மாதங்கள் ஸ்தம்பித்தது.

மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்குகள்…வசூல் குவித்த படங்கள்

கொரோனாவால் சில மாதங்கள் முடங்கிய சினிமா உலகம், கட்டுப்பாடுகளோடு மெல்ல பழையபடி இயங்க தொடங்கியது. திரையரங்குகளில் சின்ன பட்ஜெட் படங்கள் வெளியானாலும் 'ஈஸ்வரன்', 'சுல்தான்' 'மாஸ்டர்' போன்ற படங்கள் நேரடியாக தியேட்டரில் வெளியாகி வசூல் செய்து சாதனை படைத்தன. இதனால் தியேட்டர்களில் பழையபடி கூட்டம், வசூல் என இந்த படங்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு புத்துயிர் பாய்ச்சின.

இதேபோல 'கர்ணன்' திரைப்படமும் அறிவித்தபடி தியேட்டரில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மூடப்பட்ட திரையரங்குகள்…பெரிய படங்களின் வெளியீடு எப்போது?

இதனையடுத்து 'டாக்டர்', 'மாநாடு', 'வலிமை' என அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களின் படங்கள் வெளியாக காத்திருக்க, தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பல படங்கள் முன்பே அறிவிப்பு தேதி வெளியிட்டிருக்க அவையெல்லாம் அறிவித்தபடி வெளியாவது சாத்தியமில்லாததாகி விட்டது. கடந்த வருடம் போலவே, இந்த வருடமும் வெளியாக தயாராக இருக்கும் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இன்னொரு பக்கம், எதிர்பார்ப்பில் இருக்கும் 'டான்', 'டி44', 'தளபதி65', 'அண்ணாத்த' என ஷூட்டிங் போய் கொண்டிருக்கும் பல படங்கள் மீண்டும் எப்போது தொடரும் என்பதும் தெரியாமல் இருக்கின்றன.

தியேட்டர் உரிமையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த நிலையில், தியேட்டர்களை மீண்டும் திறப்பதற்கு அக்டோபர் ஆகிவிடும் என்ற ஒரு தகவும் உள்ளது. அப்படியே அவை திறக்கப்பட்டாலும், இன்னும் சில காலத்திற்கு மக்கள் தியேட்டர்கள் பக்கம் பழையபடி வருவார்களா என்பதும் சந்தேகமே. கடந்த ஒரு வருடத்தில் தியேட்டர்கள் நிலை என்ன, ஓடிடியில் படங்கள் வெளியீடு என இவை குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினோம்.

"கொரோனாவுக்கு முன்னாடி இருந்தே தியேட்டர்களோட நிலை கஷ்டத்தில்தான் இருந்தது. கொரோனா காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடியிருந்தன. இதனால, தியேட்டரை மட்டுமே நம்பியிருந்த பல தொழிலாளர்களுடைய நிலை ரொம்ப மோசமானது. அத்துடன் பல படங்களும் அந்த சமயத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியானதால் பல பிரச்னைகள் ஏற்பட்டன. இந்த விவகாரத்தில் அப்போது யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. சூழ்நிலைதான் எல்லாவற்றுக்கும் காரணம். இக்கட்டான கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரையரங்குகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. இந்த மாதிரி பல பிரச்னைகள் இப்போது உள்ளன. இதில் படத்தின் டிக்கெட் விலையுடன் சேர்த்து வரக்கூடிய வரியும் மக்களுக்கு கூடுதல் சுமைதான். இந்த லாக்டவுன் சமயத்தில் தொழில்வரி, சொத்துவரி, குறைந்தபட்ச மின்சார கட்டணம் நீக்கம் போன்ற கோரிக்கைகளை அரசாங்காத்திடம் முன்வைக்க இருக்கிறோம்," என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கொரோனா முதல் அலைக்கு பிறகு மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டபோது நிலை எப்படி இருந்தது என்பது குறித்து கேட்டோம்.

"தியேட்டர்கள் மறுபடியும் திறந்த பிறகு படங்கள் நேரடி ஓடிடி வெளியீடு என்ற நிலையே தலைகீழாக மாறிவிட்டது. 'மாஸ்டர்', 'கர்ணன்', 'சுல்தான்', 'கிங்காங்' மாதிரியான பெரிய படங்கள் வெளிவந்த போது பெரிய வசூல் கிடைத்தது. இதனால, மறுபடியும் ஓடிடி பக்கம் தயாரிப்பாளர்கள் போவதை பெரும்பாலும் குறைத்துக் கொண்டனர். காரணம் இந்த அளவு வசூல் ஓடிடி தளங்களில் வராது. நேரடி ஓடிடி படங்களுக்கான விளம்பர செலவு 3 கோடி ரூபாய்க்கும் மேல ஆகும். தியேட்டருக்கு தருவதை விட பலமடங்கு விலை கொடுத்து படத்தை வாங்க வேண்டும். ஆனால், அதற்கேற்ப பார்வையாளர்கள் பெரிய அளவில் வரவில்லை. இப்போது மறுபடியும் நிலைமை எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்," என்கிறார் சுப்பிரமணியம்.

தயாரிப்பாளர்கள் தரப்பு என்ன சொல்கிறது?

படத்தயாரிப்பாளர்கள் தரப்பின் நிலையை அறிய தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரபுவிடம் பேசினோம்,

"கொரோனா முதல் அலையின் போது சினிமா தொழில் 60% பாதிப்பு ஏற்பட்டதென்றால், இந்த முறை 100% பாதிப்பு இருக்கு. இந்த சமயங்களில் ஓடிடி தளங்களுடைய வளர்ச்சியை கொரோனா வேகப்படுத்தியிருக்கிறது."

"மற்றபடி, நிலைமை சரியானதும் கண்டிப்பாக வெளிய செல்ல வேண்டும் ,இயல்புநிலை வேண்டும் என்றுதான் மக்கள் நினைப்பார்கள். அதனால, தியேட்டர்கள் எப்பவும் போல இயங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இடைப்பட்ட காலத்தில் யாரெல்லாம் சமாளிக்கறார்கள்? யாரால் முடியாமல் போகிறது என்பதுதான் சாராம்சம். ஆனால், இடையில் மறுபடியும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது பெரிய படங்கள் மட்டும்தான் நல்ல வசூலைக் கொடுத்தன. பெரிய அளவிலான போட்டிக்கு நிகராக படங்கள் இல்லாதபோது, இந்த சூழலில் சிறிய படங்களை வீட்டிலயே பார்த்துக் கொள்ளலாம் என மக்களிடையே தோன்றிய மனநிலையையும் மாற்றங்களையும் கவனித்தோம். இந்த இக்கட்டான கால கட்டத்தில் மக்களின் நலன்கள் தான் இங்கு முக்கியம். இந்த நிலைமை மாறும். அதுவரை பாதுகாப்போட இருங்கள்" என்கிறார் எஸ்.ஆர். பிரபு.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :