You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்: "தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்… நாடு கொரோனாவில் இருந்து மீளுவதே தற்போது முக்கியம்" - தயாரிப்பு நிறுவனம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'டாக்டர்' பட வெளியீடு குறித்து தற்போது பேசுவது சரியாக இருக்காது என தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் கூறியுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் 'டாக்டர்'. பிரியங்கா கதாநாயகியாக நடிக்க, வினய், யோகிபாபு, அர்ச்சனா உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அனிருத். படத்தில் 'செல்லம்மா', 'ஓ பேபி', 'நெஞ்சமே' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. டியூப் தளத்தில் இந்த பாடல்கள் மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரமலான் வெளியீடு
'நம்ம வீட்டு பிள்ளை', 'ஹீரோ' படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஆக்ஷன் - காமெடி கலந்த கமர்ஷியல் சினிமாவாக 'டாக்டர்' உருவாகியுள்ளது. இதனை அடுத்து இந்த மாதம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக அது தள்ளி போனது.
ஓடிடியில் நேரடி வெளியீடா?
இதற்கிடையில், படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் 'டாக்டர்' படத்தின் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
"கொரோனாவில் இருந்து மீளுவதே முக்கியம்"
அதில், 'தினமும் 'டாக்டர்' பட வெளியீடு குறித்து ரசிகர்கள் கேட்டு கொண்டே இருக்கிறீர்கள். கொரோனாவின் இக்கட்டான சூழ்நிலையில், அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ள படத்தை வெளியிட முடியாமல் இருப்பது படத்தின் தயாரிப்பாளராக எனக்கு எந்த அளவிற்கு கடினமான ஒன்று என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். வெளியீடு தள்ளி போவதால் படத்திற்கான நிதிசுமையும் அதிகரிக்கும். ஆனாலும், இந்த சூழலில் படத்தை வெளியிடுவது என்பது சரியாக இருக்காது. அதற்கான சரியான நேரத்தைதான் நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்.
அதுமட்டுமல்லாமல், இந்த கொரோனா தொற்றால் நமக்கு நெருக்கமான பலரையும் இழந்து வருவதும் வேதனையளிக்கிறது. எதுவுமே நிரந்தரம் இல்லாத இதுபோன்ற சமயத்தில் 'டாக்டர்' பட வெளியீடு குறித்தும் அதன் கொண்டாட்டம் குறித்தும் நான் பேச விரும்பவில்லை. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக உங்களது குடும்பத்துடன் இருங்கள். கொரோனாவுக்கான அனைத்து விதிமுறைகளையும் தவறாமல் கடைப்பிடியுங்கள். ஒரு படத்தின் வெளியீட்டை விட நம் நாடு கொரோனாவில் இருந்து மீளுவதே தற்போது முக்கியம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
'வலிமை', 'மாநாடு' நிலை என்ன?
கொரோனா தொற்று காரணமாக பல படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், 'வலிமை', 'மாநாடு' உள்ளிட்ட பல முக்கிய படங்களின் வெளியீடும் எப்போது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் பல படங்கள் நேரடி ஓடிடி வெளியீடு என்ற தகவலும் வெளியாகிறது. கடந்த வருடம் இதே நேரம் கொரோனா முதல் அலை காரணமாக, 'மாஸ்டர்', 'சூரரைப்போற்று' என பல முக்கிய படங்களின் வெளியீடு தள்ளி போனதும், நேரடியாக ஓடிடியில் வெளியானது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- தமிழ்நாட்டில் கொரோனா மரணங்களைக் குறைக்க புதிய சிகிச்சை நெறிமுறை
- சிக்கல் தரும் சீன மக்கள்தொகை: குறையும் பிறப்பு விகிதம்; அதிகரிக்கும் முதியவர்கள்
- ஆக்சிஜன் தட்டுப்பாடு, சடலங்களின் குவியல்: இந்தியாவை பிரதிபலிக்கும் நேபாளம்
- சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி
- தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :