திரை பாலியல் காட்சிகளை எளிதாக்கும் இந்தியாவின் `இன்டிமஸி கோஆர்டினேட்டர்' - இப்படி ஒரு பதவியா?

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

1992ஆம் ஆண்டில் வெளியான "பேசிக் இன்ஸ்டிங்க்ட்" திரைப்படத்தின் ஒரு சர்ச்சைக்குரிய காட்சியில், தந்திரமாக தனது உள்ளாடை கழற்ற வைக்கப்பட்டதாக ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் சமீபத்தில் கூறியுள்ளார். காவல் துறை விசாரணை ஒன்றின் போது தனது கால்கள் விரிக்க வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அவரது நினைவுக் குறிப்பில், படப்பிடிப்பின் போது தனது வெள்ள நிற உள்ளாடை, வெள்ளை ஒளியைப் பிரதிபலிப்பதாகவும் பார்வையாளர்களுக்குத் தெரியாது என்றும் கூறி நம்பவைக்கப்பட்டு உள்ளாடையை அகற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் கூறுகிறார். ஆனால் பிறகு தான் அவருக்கும் உலகத்துக்கும் அது பொய் என்று தெரிந்தது. இயக்குநர் பால் வெர்ஹோவன் இவரது கூற்றை முற்றிலுமாக மறுத்துள்ளார். அவருக்குத் தெரிந்தே அனைத்தும் நடந்தன என்றும் இப்போது அவர் பொய் கூறுகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நடந்தவற்றை தான் மிகவும் தீவிரமாக எதிர்த்ததாகவும் அந்தச் சம்பவம் தன்னை மிகவும் பாதித்து விட்டதாகவும் மட்டும் ஸ்டோன் வலியுறுத்துகிறார். இந்த விரும்பத்தகாத சம்பவத்தைத் தவிர்த்திருக்க முடியாதா? "எளிதாகத் தவிர்த்திருக்கலாம்" என்கிறார், இந்தியாவின் முதல் மற்றும் ஒரே சான்றளிக்கப்பட்ட இன்டிமஸி கோஆர்டினேட்டர் (நெருக்க ஒருங்கிணைப்பாளர்) ஆஸ்தா கன்னா.

அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், தோல் நிற உள்ளாடைகளை அவருக்குக் கொடுத்திருப்பேன் என்றும் அவர் கூறுகிறார். 1990 களின் முற்பகுதியில், பேசிக் இன்ஸ்டிங்க்ட் திரைப்படம் படமாக்கப்பட்ட தருணத்தில், பாலியல் காட்சிகளில் கலைஞர்களுக்கு எளிதாகவும் இயல்பாகவும் இருப்பதை உறுதிப்படுத்தும் நெருக்க ஒருங்கிணைப்பாளர்(இன்டிமஸி கோஆர்டினேட்டர்) என்ற பெயரை யாரும் கேள்விப்பட்டதேயில்லை. ஆனால் உலகம் முழுவதும் பொழுதுபோக்குத் துறையில் பரவலாக நடந்து வரும் பாலியல் தொந்தரவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய #MeToo இயக்கம், 2017-ல் வேகம் பெற்றதையடுத்து, இது ஒரு தனித் தொழிலாகக் கருதப்படத் தொடங்கியது. 1970களில் நியூயார்க்கில் பாலியல் மற்றும் ஆபாசத் தொழில் குறித்த "த டியூஸ்" என்ற தொடருக்காக, நடிகை எமிலி மீடேவின் வேண்டுகோளின் பேரில் முதல் இன்டிமஸி கோஆர்டினேட்டரை நியமித்ததாக, 2018ஆம் ஆண்டில் HBO அறிவித்தது.

இந்த நெட்வொர்க் தன் நெருக்கமான காட்சிகளைக் கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளும் இத்தகைய ஒரு ஏற்பாட்டுடன் தான் தொடரும் என்றும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் உள்ளிட்ட பிற தளங்களும் இதைப் பின்பற்றின.அப்போதிலிருந்து, பல ஸ்டுடியோக்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இத்தகைய இன்டிமஸி கோஆர்டினேட்டர்களைப் பணியமர்த்தத் தொடங்கினர். கடந்த சில மாதங்களில், இந்தப் போக்கு இந்தியாவிலும் காணப்படுகிறது.

26 வயதான கன்னா, தனது வேலையை "ஒரு சண்டைப் பயிற்சி இயக்குநர் அல்லது நடன இயக்குநருடைய பணியைப் போன்றது- ஆனால் நெருக்கமான காட்சிகளுக்கு" என்று கூறுகிறார்."ஒரு சண்டைப் பயிற்சி இயக்குநர் சண்டைக்காட்சியின் போது பாதுகாப்பை உறுதி செய்வதைப் போலவே, ஒரு இன்டிமஸி கோஆர்டினேட்டரின் பணி, உருவகப்படுத்தப்பட்ட பாலியல், நிர்வாண மற்றும் பாலியல் வன்முறைக் காட்சிகளில் பாதுகாப்பாக நடிப்பதை எளிமைப்படுத்துவதாகும் " என்று மும்பையில் இருந்து தொலைபேசியில் என்னிடம் கூறினார்.ஒரு இன்டிமஸி கோஆர்டினேட்டர், இயக்குநருக்கும் கலைஞர்களுக்கும் இடையில் ஒரு இணைப்பாகச் செயல்படுகிறார் என்று அவர் விளக்குகிறார்."எனது வேலை என்னவென்றால், கலைஞர்களை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதி செய்வதும், ஸ்டுடியோக்களைப் பாதுகாப்பதும் ஆகும், எனவே எந்தவொரு நடிகரும் ஒரு ஐந்து வருடங்கள் கழித்துத் தாங்கள் மோசமான அனுபவத்தைச் சந்திக்க வேண்டியிருந்ததாகச் சொல்ல முடியாது."

கலைஞர்களுடன், அவர்களின் சம்மதம் மற்றும் எல்லைகளைப் பற்றி விவாதிக்கிறார் கன்னா. தவிர, படப்பிடிப்புத் தளத்திற்கு, அவர் கண்ணியமான ஆடைகளையும் கொண்டு வருகிறார்.அவரது கிட்டில், தொடைகளுக்கு இடையிலான பகுதியைப் பாதுகாக்கும் க்ரோட்ச் கார்ட்ஸ், மார்பக முலைகளைப் பாதுகாக்கும் நிப்பிள் பேஸ்ட்டீஸ், உடலில் ஒட்டிக்கொள்ளும் டேப்கள், மற்றும் பாலியல் காட்சிகளின் போது கலைஞர்களின் அந்தரங்க உறுப்புகளுக்கு இடையில் பயன்படுத்தும் டோநட் தலையணை ஆகியவை உள்ளன.ஆஸ்கார் விருது பெற்ற, மாதவிடாய் குறித்த குறும்படத் தயாரிப்பாளரான மந்தாகினி காக்கர், முற்றிலும் நெருக்கமான காட்சிகளைக் கொண்ட தனது அடுத்த படத்துக்குக் கன்னாவின் உதவியை நாடுகிறார்.

இந்தியாவில் திரைப்படங்கள், பாரம்பரியமாக பாலியல் மற்றும் நிர்வாணத்தைத் தவிர்த்து விட்டது - முத்தக்காட்சி கூட தடை செய்யப்பட்டுள்ளது - திரைப்பட தயாரிப்பாளர்கள் குடும்பத்தினருடன் பார்க்க முடியாத படம் தயாரிக்க விரும்பவில்லை என்று கூறுகிறார்கள் என்பது இவரின் கருத்து.கடுமையான அரசாங்க விதிமுறைகள் மற்றும் பொறுப்பான தணிக்கை வாரியம் இருப்பதால், பாலிவுட் திரைப்படங்கள் பாலியல் காட்சியைக் குறிக்க, இரண்டு பூக்கள் தொட்டுக்கொள்வது போலவோ, இரு பறவைகள் முத்தமிடுவது போலவோ, உணர்ச்சி மிகுதியைக் குறிக்க பால் கொதிக்கும் ஒரு பாத்திரத்தையோ கலைந்து கிடக்கும் படுக்கையையோ காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.கடந்த ஓரிரு தசாப்தங்களாக, முத்தக்காட்சிகள் திரைப்படங்களில் சாதாரணமாகி விட்டன. இப்போது இந்திய திரைப்படங்களில் பாலியல் மற்றும் நிர்வாணம் காணப்படுவது "ஆன் டிமாண்ட்" மற்றும் "ஸ்ட்ரீமிங்" தளங்களில் பிரபலமடைந்துள்ளது.ஆனால் கலைஞர்களுக்கு, குறிப்பாக இளம் பெண் புதுமுகங்கள் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வரும்போது, அவர்களுக்குப் பாலியல் தொல்லைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அண்மையில் நெட்ஃபிக்ஸ் தொடரான எலீட் படப்பிடிப்பைத் தொடங்கிய, மாடலாக இருந்து நடிகையாக மாறிய அஞ்சலி சிவராமன் கூறுகையில், இந்த செட்டில் கன்னா இருப்பது தனக்கு மிகவும் ஆறுதலளித்தது என்றும் தன் மீது அக்கறை கொள்ள ஒருவர் இருந்தது மகிழ்ச்சி அளித்தது என்றும் கூறினார்.

"நான் முன்பு சந்தித்திராத ஒரு நடிகருடன் நான் இதற்கு முன்பு செய்யாத ஒரு பாலியல் காட்சியில் நான் நடிக்க வேண்டியிருந்தது. நான் ஒரு ஸ்போர்ட்ஸ் ப்ரா மற்றும் உள்ளாடை மட்டுமே அணிய வேண்டிய காட்சி அது. அதனால் நான் கிட்டத்தட்ட நிர்வாணமாக உணர்ந்தேன். நான் மிகவும் பதற்றமாக இருந்தேன்.என் சக நடிகர் ஒரு முற்றிலும் அந்நியமாக இருந்ததால், முத்தக்காட்சியில் கூட நான் சங்கடப்பட்டேன். இயக்குநர் ஒரு ஆண் என்பதால் அவரிடம் பேசுவதும் எனக்கு அவ்வளவு சுலபமல்ல. ஆனால் ஆஸ்தா என் பணியை மிகவும் எளிதாக்கி விட்டார்.

அவர் என் பயத்தை இயக்குநரிடம் விளக்கியதில் முத்தக்காட்சி கைவிடப்பட்டது. செக்ஸ் காட்சியின் போது, அவர் எங்களுக்கிடையில் ஒரு டோநட் குஷனை வைத்தார், அதனால் எங்கள் அந்தரங்க உறுப்புகள் ஒன்றை ஒன்று தொடாமல் இருக்கும். அது விநோதமாக இருந்தாலும், அது எனக்கு வசதியாக இருந்தது" என்று கூறிச் சிரிக்கிறார் அவர். பாலிவுட் நட்சத்திரமாக மாறிய திரைப்படத் தயாரிப்பாளர் பூஜா பட் முந்தைய நாட்களில், நடிகைகள் தங்கள் அம்மாக்கள் அல்லது நிர்வாகிகளுடன் தான் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார்கள். அவர்கள் ஒரு வகையில் இந்தப் பணியைத் தான் செய்தார்கள் என்று கூறுகிறார். திரைப்படங்களை இயக்கித் தயாரிக்கத் தொடங்கியபோது ஒரு நடிகையாகத் தனது சொந்த அனுபவங்களைக் கொண்டு இன்டிமஸி கோஆர்டினேட்டரின் பணியையும் அவரே செய்ததாக அவர் கூறுகிறார்.

"நெருக்கமான காட்சிகளைப் பொறுத்தவரை, ஒரு நடிகையை அசௌகரியமாக உணர வைக்காத ஒரு குழுவினரைத் தான் நியமிக்கிறேன். 2002 ஆம் ஆண்டில், ஜிஸ்ம் என்றா ஒரு திரில்லர் திரைப்படத்தை நான் தயாரிக்கும் போது, நான் பிபாஷா பாசுவிடம் சொன்னேன் பெண் மற்றும் ஒரு நடிகராக நான் உங்களுக்குச் சங்கடமான எதையும் செய்யும் படி நான் உங்களைக் கட்டாயப்படுத்த மாட்டேன் என்று கூறினேன்.

படத்தில் ஆபாச காட்சி எதுவும் இல்லை. ஆனால் இயல்பான பாலியல் காட்சி இருந்தது. அவர் ஜான் ஆபிரகாமை மயக்க வேண்டும். இது தயக்கத்துடனோ, இயல்புக்கு மாறுபட்டோ இருக்கக்கூடாது. உங்களால் எப்படிச் செய்ய முடியுமோ அப்படிச் செய்யுங்கள் என்று நான் அவரிடம் சொன்னேன்" என்று அவர் நினைவு கூருகிறார்.அண்மையில் வெளியான நெட்ஃபிக்ஸ் தொடரான பாம்பே பேகம்ஸ் தொடரில் நடித்த பட், இந்தப் படப்பிடிப்பில், இன்டிமஸி கோஆர்டினேட்டர் யாரும் இல்லை, ஆனால் அந்த இயக்குநர் ஆலங்கிருதா ஸ்ரீவாஸ்தவா சங்கடமில்லாமல் என்னை நடிக்க வைத்தார் என்று கூறுகிறார்.

"நாங்கள் நெருக்கமான காட்சிகளை எப்படிப் படமாக்கப் போகிறோம் என்று அலங்கிருதாவும் நானும் மிக விரிவாக விவாதித்தோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நம்பினோம், இயக்குநரையும் சக நடிகர்களையும் நம்பினோம். நான் வீட்டிற்குச் செல்லும்போது எந்த அசௌகரியமான உணர்வும் எனக்கு ஏற்படவில்லை" என்று அவர் கூறுகிறார்.ஆனால் தளத்தில் ஒரு இன்டிமஸி கோஆர்டினேட்டர் இருப்பது மிகவும் உதவியாக இருப்பதாக அவர் ஒப்புக்கொள்கிறார்.

"நெட்வொர்க்குகள் இப்போது, ஒரு இன்டிமஸி கோஆர்டினேட்டரி இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது வரவேற்கத்தக்க மாற்றமாகும். நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. இன்று உங்களுக்கு அசௌகரியமாக உணர்ந்தாலோ, யாராவது உங்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்தாலோ, புகார் செய்ய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இது மிகவும் நல்ல விஷயம். இது முந்தைய காலங்களை ஒப்பிடும் போது மிகப்பெரிய மாற்றமாகும்" என்று அவர் கூறுகிறார். இருப்பினும், செட்டில் எப்போதும் தான் வரவேற்கப்படுவதில்லை என்றும் கன்னா கூறுகிறார்.இதற்கு மிக அடிப்படையான காரணம் என்னவென்றால், அவரைப் பணியமர்த்துவது என்பது கூடுதல் செலவு தான். ஆனால், இது ஒன்றும் அத்தனை எளிதான பணியல்ல என்று அவர் கூறுகிறார். கலைஞர்கள் அவரை முழுமையாக நம்புவார்கள் என்று உறுதியாகக் கூற முடியாது. தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இவர் தங்கள் பணிகளில் குறுக்கிடுவாரோ என்ற ஐயம் கொள்ளவும் வாய்ப்புள்ளது. "ஒரு இயக்குநர் என்னிடம் 'என் நடிகர்களைப் பற்றி நான் நுட்பமாக அறிவேன், அவர்கள் அனைவரும் எனது சிறந்த நண்பர்கள், நான் அவர்களுடன் பேசிவிட்டேன், அவர்களது குடும்பத்தினரிடமிருந்து அனுமதி பெற்று விட்டேன்' என்று கூறினார்," என்கிறார் அவர்."ஸ்டுடியோ பரிந்துரைத்ததாலும், தயாரிப்பாளர்கள் என்னை வேலைக்கு அமர்த்தியதாலும் அவர் எனக்குப் படப்பிடிப்புத் தளத்தில் அனுமதி மறுக்க முடியவில்லை. படப்பிடிப்புக்கு வெளியூருக்கு என்னையும் அழைத்துச் சென்றார். ஆனால், படப்பிடிப்பு முழுவதும் என்னை வெறுமனே வேனில் தான் அமரவைத்திருந்தார்" என்று அவர் நினைவு கூருகிறார். "அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், படப்பிடிப்புத் தளத்தில் கத்தி வைத்திருக்கும்போது உங்களுக்கு ஒரு ஸ்டன்ட் இயக்குநர் தேவைப்படுவது போல, உங்கள் ஸ்கிரிப்ட்டில் நெருக்கமான காட்சி இருந்தால் உங்களுக்கு நான் தேவை" என்று அவர் கூறுகிறார்.

பல பாரம்பரிய இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு "நான் சொல்வதைக் கேட்டால் கேள், இல்லையென்றால் வெளியேறு" என்ற மனோபாவம் தான் இருக்கிறது. எனவே இதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் தொழிலில் நிலைக்க வேண்டுமானால், மாற்றங்களை ஏற்றுக்கொள்வது அவசியம் என்கிறார்.

மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் மெதுவாகத் தான் நடக்கிறது. இந்தத் தொழிலில், ஒரு சிலர் புரிதல் இல்லாத, சங்கடப்படுத்துபவராக, பிற்போக்கு சிந்தனை உள்ளவராக, மாற்றத்திற்குத் தயாராக இல்லாதவராக உள்ளனர்.

ஆனால் நாம் ஒருவருக்கொருவர் உதவியாகவும் ஆதரவாகவும் இருப்பது அவசியம். அது சில நேரங்களில் அதிகாரம் நிறைந்தவர்களை முகம் சுளிக்க வைத்தாலும் கூட பரவாயில்லை" என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: