சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் மீண்டும் துவக்கம் - வதந்திகளை பரப்ப வேண்டாமென எச்சரிக்கை

சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 100 தொலைப்பேசி இணைப்புகளைக் கொண்ட கொரோனா கட்டுப்பாட்டு மையம் செயல்பட தொடங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தடுப்பூசி குறித்த தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுக்க வேண்டும் என்றும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பிரகாஷ், ''தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 044-46122300, 25384520 எண்களில் அழைக்கலாம். தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாகவும், தடுப்பூசி செலுத்துவது தவறானது உள்ளிட்ட பல வதந்திகளை சமூகவலைத்தளங்களில் பரவுவதைக் கவனித்து வருகிறோம். அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை சுமார் மூன்று லட்சம் தடுப்பூசிகள் நம்மிடம் உள்ளன. அதனால் எந்த தட்டுப்பாடும் இல்லை,'' என்றார்.

நடிகர் விவேக் மரணம் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்த ஆணையர், ''அவரது மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என ஏற்கனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கிவிட்டார்கள். தடுப்பூசி பற்றி அவதூறாக பேசிவரும் நடிகர் மன்சூர் அலிகான் குறித்து காவல்துறையில் புகார் கொடுத்துள்ளோம்'' என்றார்.

மேலும் பொதுமக்கள் அடிக்கடி வெளியில் செல்வதை தங்களாவே குறைத்துக் கொள்ளவேண்டும் என்றும், பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றவேண்டும் என்றும் தெரிவித்தார். ''விரைவில் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். கொரோனா பரவலை தடுக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம். துக்க நிகழ்வுகள், திருமணம் மற்றும் பிற பொது நிகழ்வுகளில் மக்கள் கூட்டமாகப் பங்கேற்பதை குறைத்துக் கொள்ளவேண்டும்,'' என்றும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: