You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிம் கர்தாஷியன் எனும் சென்சேஷனல் கோடீஸ்வரி: அந்தரங்க காணொளி முதல் 7,400 கோடி ரூபாய் சொத்து வரை
- எழுதியவர், கெளதமன் முராரி
- பதவி, பிபிசி தமிழுக்காக
இன்று இணைய வெளியை தன் படங்களால் வசீகரித்துக் கொண்டிருக்கும் 'கிம் கர்தாஷியன்' என்கிற பெயர் 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிக பிரபலமில்லை.
2000-ம் காலகட்டத்தில், பாரிஸ் ஹில்டன் என்பவரின் ஸ்டைலிஸ்டாக இருந்ததால் பத்திரிகைகள் மெல்ல கிம்மைத் திரும்பிப் பார்த்தன. 2003 - 06 கால கட்டத்தில் பாரிஸ் ஹில்டன் கலந்து கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொண்டார்.
2006-ம் ஆண்டு தன் சகோதரிகள் கோர்ட்னி கர்தாஷியன் மற்றும் க்ளோ கர்தாஷியன் உடன் DASH என்கிற பெயரில் 'ஃபேஷன் போடிக்' அதாவது விலையுயர்ந்த ஃபேஷன் பொருள்கள் விற்கும் கடை தொடங்கினர். அப்போது எல்லாம் வராத புகழும் ஊடக வெளிச்சமும், 2007-ம் ஆண்டு ரே ஜே என்கிற பாடகருடன், கிம் கர்தாஷியன் நெருக்கமாக இருந்த அந்தரங்க காணொளி வெளியானதும் கிடைத்தது.
அதே சூட்டோடு சூடாக, 2007-ம் ஆண்டு Keeping Up with the Kardashians என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த கர்தாஷியன் குடும்பமும் களமிறங்கியது. கிம் கர்தாஷியன் அமெரிக்க வீடுகளில் எல்லாம் பிரபலமடைந்தார். ப்ளேபாய் இதழின் அட்டைப் படத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.
இந்த புகழை வைத்துக் கொண்டு சில சினிமா படங்களில் நடித்தார். பல விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மெல்ல காசு பார்க்கத் தொடங்கினார். 2014-ம் ஆண்டு பேப்பர் என்கிற பத்திரிகையின் அட்டைப் படத்தில், பின் பக்கம் திரும்பி நின்று அரை நிர்வாணமாக கொடுத்த போஸ் அவரை புகழின் மற்றொரு உச்சத்துக்குக் கொண்டு சென்றது. அப்படத்துக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன, அவர் மீது ஊடக வெளிச்சம் அதிகம் படத் தொடங்கியது. இணையம் அவரது அரை நிர்வாணப் படத்தை தேடிப் பிடித்துப் பார்த்தது. 'பேப்பர்' பத்திரிகையின் வலைதளம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.
தன் புகழை மேலும் காசாக்கிக் கொள்ள, 'KIM KARDASHIAN: HOLLYWOOD' என்கிற பெயரில் ஒரு வீடியோ கேமை வெளியிட்டார். அதுவும் ஹிட் அடித்தது. செல்ஃபி படங்கள் கொண்ட 'Selfish' என்கிற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இத்தனை பணிகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மறு பக்கம் சமூக வலைதளங்களில் தன் படங்களை களமிறக்கி இணையத்தை சகட்டு மேனிக்கு வசீகரித்துக் கொண்டிருந்தார்.
2011 காலத்தில் கிம் கர்தாஷியனுக்கு சுமார் 66 லட்சம் பேராக இருந்த ட்விட்டர் ரசிகர்களின் எண்ணிக்கை, 2014-ம் ஆண்டு சுமார் 2.1 கோடியைக் கடந்தது. தற்போது 6.97 கோடி பேர் கிம் கர்ஷாஷியனை ட்விட்டர் தளத்தில் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் மட்டும் 21.3 கோடி பேர் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் 3.3 கோடி பேரும், யூ டியூபில் 18.2 லட்சம் பேரும் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். மொத்தம் சமூக ஊடகங்களில் சுமார் 31.2 கோடி பேர் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது அவரது அடுத்த கட்ட வியாபாரத்துக்கு வலுவான அடித்தளமாக அமைந்துவிட்டது.
2017-ம் ஆண்டு, தன் சகோதரி கெய்ல் ஜென்னரின் வெற்றியைப் பார்த்து, KKW Beauty என்கிற அழகு சாதன நிறுவனத்தைத் தொடங்கினார் கிம் கர்தாஷியன். தன் அழகு சாதனப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தளமாக சமூக ஊடகப் பிரபலத்தை அவர் பயன்படுத்தினார்.
தன்னை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களையே வாடிக்கையாளர்களாகவும் வெற்றிகரமாக மாற்றினார் கிம்.
முதல் கட்டமாக 3,00,000 கான்டூர் கிட்களை அறிமுகப்படுத்தினார். அது வெறும் இரண்டே மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது. வியாபாரம் தாறுமாறான ஹிட். மெல்ல தன் அழகு சாதனப் பொருட்கள் விற்பனைப் பட்டியலில் ஐ ஷேடோக்கள் (eyeshadows), கன்சீலர்கள் (concealers), லிப்ஸ்டிக், வாசனை திரவியங்கள் என எல்லாவற்றையும் சேர்த்து தன் வியாபாரத்தை பெரிதாக்கினார் கிம். விளைவு, அவர் வியாபாரத்திலிருந்து வரும் வருவாய் 100 மில்லியன் டாலரைத் தொட்டது.
அது நாள் வரை மற்றவர்களின் பொருட்களை விற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த கிம் கர்தாஷியன், முதலாளியாக தன் பொருட்களை தானே நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்று லாபம் பார்க்கத் தொடங்கினார்.
2019-ம் ஆண்டு, பெண்களின் உடலமைப்பை அழகாக காட்ட உதவும் 'ஷேப்வேர்' ஆடைகள், வீட்டில் ஓய்வாக இருக்கும் போது அணியும் ஆடைகள், பெண்கள் உள்ளாடைகள் போன்றவைகளை விற்கும் SKIMS என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். இதற்கு நெட் அ போர்டர் நிறுவனத்தின் நடாலி மஸ்ஸான் மற்றும் ஆண்ட்ரூ ரோசன் போன்றவர்களிடமிருந்து பணத்தைத் திரட்டியதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
ஸ்கிம்ஸ் பிராண்ட் சட்டென கிம் கர்தாஷியனைப் பின் தொடர்பவர்கள் மத்தியில் வேர்விட்டு நின்றது. அந்நிறுவனத்தில் கிம் கர்தாஷியன் கணிசமான பங்குகளை வைத்திருப்பதாகவும், அதன் மதிப்பு 225 மில்லியன் டாலராக இருக்கலாம் என மதிப்பீடு செய்திருக்கிறது ஃபோர்ப்ஸ்.
KKW Beauty என்கிற நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை காடி (Coty) என்கிற பெரிய அழகு சாதன பொருட்கள் கம்பெனிக்கு 200 மில்லியன் டாலருக்கு விற்று காசாக்கினார் கிம்.
இந்த பங்கு விற்பனையின் போது, KKW Beauty நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதை ஃபோர்ஸ் பத்திரிகை அதிகப்படுத்தப்பட்ட மதிப்பீடு என கூறுகிறது.
சரி கிம் கர்தாஷியனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும்?
ஃபோர்ப்ஸ் கணக்குப் படி, 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சமாக 10 மில்லியன் டாலரை (வரிக்கு முன்) ஈட்டி இருக்கிறார் கிம். இதில் Keeping Up With the Kardashians நிகழ்ச்சி, வணிக விளம்பர ஒப்பந்தங்கள், மொபைல் வீடியோ கேம் போன்றவைகள் அடக்கம். கலபசாஸ், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய இடங்களில் இவருக்கு ரியல் எஸ்டேட் சொத்துக்கள் இருக்கின்றன. அது போக டிஸ்னி, அமேசான் நெட்ஃப்ளிக்ஸ், அடிடாஸ் போன்ற நிறுவன பங்குகளை கைவசம் வைத்திருக்கிறார் கிம் கர்தாஷியன்.
இவை எல்லாம் கிம் கர்தாஷியனின் சொத்தில் ஒரு சிறு பகுதி தான். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பில்லியனர்கள் பட்டியலில் கிம் கர்தாஷியனைக் கொண்டு வந்து சேர்த்தது, அவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களை நம்பி தொடங்கிய நிறுவனங்கள்தான் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.
உலக அளவில் 2021-ம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் 2,674-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் கிம் கர்தாஷியன். இவரது சொத்து மதிப்பு ஏப்ரல் 2021 கணக்குப் படி ஒரு பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் 7,400 கோடி ரூபாய். அடுத்து கிம் கர்தாஷியன் என்ன திட்டம் வைத்திருக்கிறார்? வருங்காலத்தில் அவரது சொத்து மதிப்பு இன்னும் அதிகரிக்குமா? என்பதை எல்லாம் அவரது வணிக நடவடிக்கைகள்தான் தீர்மானிக்கும்.
ஆனால் இப்போதும், ஏதோ ஒரு காரணத்துக்காக கிம் கர்தாஷியன் மீது ஒரு ஊடக வெளிச்சம் விழுந்து கொண்டே தான் இருக்கிறது அல்லது கிம் தன் மீது ஊடக வெளிச்சத்தை விழ வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
பிற செய்திகள்:
- கொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன?
- சம்ஸ்கிருதத்தை இந்தியாவின் அலுவல் மொழியாக்க திட்டம் தயாரித்தார் அம்பேத்கர்: தலைமை நீதிபதி பாப்டே
- 9 தீர்ப்பாயங்களுக்கு இந்திய அரசு மூடுவிழா: நீதி கிடைப்பது கடினமாகிறதா?
- உடற்பயிற்சி செய்யாமல் எடைக் குறைப்பு சாத்தியமா? - ஊட்டச்சத்து நிபுணர் பதில்
- கர்ணன் திரைப்படத்தில் திருப்தியளிக்காத திருத்தம்: உதயநிதி என்ன சொன்னார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: