You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
9 தீர்ப்பாயங்களுக்கு இந்திய அரசு மூடுவிழா: நீதி கிடைப்பது கடினமாகிறதா?
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியாவில் ஒன்பது மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களைக் கலைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நீதித்துறை தொடர்புடையவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தீர்ப்பாயங்கள் கலைக்கப்பட்டதால் என்ன நடக்கும்?
9 மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்கள்
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. புவிசார் குறியீடு, வணிகச் சின்னம், காப்புரிமை, உரிமை மீறல் உள்ளிட்டவற்றின் மேல்முறையீட்டு வழக்குகளை இந்தத் தீர்ப்பாயம் விசாரித்து வந்தது.
இதேபோல், சினிமாட்டோகிராப் சட்டம் 1952-ன்படி அமைக்கப்பட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், வருமான வரிச் சட்டம் 1961-ன்படி அமைக்கப்பட்ட அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையகம், இந்திய விமான நிலைய ஆணையகச் சட்டம் 1994-ன்படி அமைக்கப்பட்ட விமான நிலைய மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், தாவர வகை மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் 2001-ன்படி அமைக்கப்பட்ட தாவர வகைப் பாதுகாப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உள்பட 9 மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களை மத்திய அரசு கலைத்துவிட்டது.
இதுவரையில் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களே விசாரிக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்துவிட்டது. இதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுவிட்டதால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
வாஜ்பேயி கொடுத்த ஒப்புதல்
அதில், ` இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் (Intellectural Property Appeals Board - IPAB) தலைமையகம் 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னையில் அமைக்கப்பட்டது. அப்போதைய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறனின் முயற்சியால் அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி ஒப்புதலுடன் ஐ.பி.ஏ.பி. தலைமையகம் சென்னையில் திறக்கப்பட்டது.
வர்த்தக முத்திரை மற்றும் காப்புரிமை தொடர்பான வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும் பணியை 'அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்' மேற்கொண்டு வருகிறது. இதனை வேறு மாநிலத்திற்கு மாற்றும் முயற்சிகள் நடப்பதாகத் தகவல்கள் வந்தபோது நான் மாநிலங்களவையில் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினேன். அதற்கு பிப்ரவரி 4, 2020 அன்று பதில் அளித்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், `ஐ.பி.ஏ.பி. தலைமையிடத்தை வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை' என்று தெரிவித்தார். இந்நிலையில் சென்னையில் இந்தியத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உள்பட 9 முக்கியத் தீர்ப்பாயங்களை அவசர சட்டத்தின் மூலமாகக் கலைத்துவிட்ட மத்திய அரசு, அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது' என்கிறார்.
மேலும், `மத்திய அரசு பிறப்பித்துள்ள மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களைக் கலைக்கும் அவசர சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், சென்னையில் வாஜ்பாய் அரசால் திறக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைமையகம் தொடர்ந்து இயங்கிட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்
`மத்திய அரசின் முடிவு சரிதானா?' என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தீர்ப்பாயங்கள் குறித்து பல காலமாகவே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், சில தீர்ப்பாயங்கள் அவற்றுக்கான அதிகாரங்களைப் பொறுத்து அமைச்சகங்களின்கீழ் வருகின்றன. உதாரணமாக, சுற்றுச்சூழல் தொடப்பான தீர்ப்பாயம் என்றால் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வரும். இவ்வாறு செயல்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவித்தது.
அதில், `தீர்ப்பாயங்கள் எல்லாம் அந்தந்த அமைச்சங்களின்கீழ் இருக்கும்போது அழுத்தத்துக்கு ஆட்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, அனைத்து தீர்ப்பாயங்களும் சட்ட அமைச்சகத்தின்கீழ் கொண்டு வாருங்கள்' என அறிவுறுத்தியது. இந்த அறிவுறுத்தல் ஒருபுறம் இருந்தாலும் மத்திய அரசானது, தீர்ப்பாயங்கள் மிக மிக மெதுவாக செயல்படுவதாக ஆட்சேபனைகளைக் கூறிக் கொண்டிருந்தது" என்கிறார்.
மத்திய அரசின் அதிகாரம்
தொடர்ந்து பேசுகையில், `` மத்திய அரசின் விமர்சனங்களுக்குப் பதில் கொடுத்த தீர்ப்பாயங்களும், `எங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் இருந்தால் எங்களால் எப்படிப் பணிபுரிய முடியும்' எனக் கேட்டன. இப்போது தீர்ப்பாயங்களைக் கலைத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் மத்திய அரசு பெற்றுவிட்டது.
இவ்வாறு கலைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், தீர்ப்பாயங்களுக்கான அதிகாரங்களை உயர் நீதிமன்றத்துக்குக் கொடுக்கிறார்கள். அங்கு ஏற்கெனவே வழக்குகள் தேங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் மேலும் வழக்குகள் தேங்கவே செய்யும். இதற்குப் பதிலாக தீர்ப்பாயங்களின் அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு, அவைகளை சட்ட அமைச்சகத்தின்கீழ் கொண்டு வந்து விரைந்து செயல்படும் திறனைக் கண்காணித்துக் கொண்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். மத்திய அரசின் முடிவு ஏற்புடையதல்ல" என்கிறார்.
இந்திரா காந்தியின் முன்னெடுப்பு
`` இந்தியாவில் நெருக்கடி நிலை காலத்தில் உயர் நீதிமன்றங்களில் வழக்குகளின் தேக்கம், நீதிபதிகளுக்கு ஏற்பட்ட பணிச்சுமை ஆகியவற்றைக் குறைக்கும் வகையிலும் நிர்வாகங்களுக்கு இடையே ஏற்படக் கூடிய சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகவும் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதன்படி, 1976 ஆம் ஆண்டு நிர்வாகத் தீர்ப்பாயங்கள் என்ற ஒன்றை கொண்டு வர முடிவு செய்தார். இதற்காக, 42 வது திருத்தச் சட்டத்தினால் தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டன" என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சு.குமாரதேவன்.
பிபிசி தமிழுக்காக மேலும் சில விவரங்களைப் பட்டியலிட்டார் அவர். `` தீர்ப்பாயங்கள் என்பது அந்தந்த நிர்வாகங்களில் ஏற்படக் கூடிய குளறுபடிகளை மாற்றுவதற்காக அமைக்கப்பட்டது. அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் பார்க்க முடியாது என்பதால் அவர்களின் பணிச்சுமையைக் குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. இவை முழுக்க முழுக்க நிர்வாகக் காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை. இதனை எதிர்த்து 1987 ஆம் ஆண்டு சம்பத்குமார் எஸ்.பி Vs யூனியன் ஆஃப் இந்தியா என்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முடிவில், `நிர்வாக தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது சரியானதுதான்' எனத் தீர்ப்பு வெளியானது.
உற்சாகப்பட வைத்த தீர்ப்பு
இந்தத் தீர்ப்பாயத்தில், ஓர் ஓய்வுபெற்ற நீதிபதி இருக்க வேண்டும் எனவும் தீர்ப்பாயத்துக்கேற்ற உறுப்பினரைக் கொண்டு அமைக்க வேண்டும் எனவும் முடிவானது. தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு அடுத்தபடியாக மேல்முறையீடுகளை மட்டுமே உயர் நீதிமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கிலும் இவை உருவாக்கப்பட்டன. ஆனால், தற்போது ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து தீர்ப்பாயங்களைக் கலைத்துவிட்டு உயர் நீதிமன்றத்துக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் தீர்ப்பாயங்களைக் கலைத்துவிட்டு அந்தந்த மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் அளித்துள்ளனர். 1997 ஆம் ஆண்டு சந்திரகுமார் Vs யூனியன் ஆஃப் இந்தியா என்றொரு வழக்கு வந்தது. அந்த வழக்கில், `தீர்ப்பாயங்களில் கொடுக்கப்படும் உத்தரவுகளை உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றுதான் மேல்முறையீடு செய்ய வேண்டும்' என்ற பிரிவை மாற்றி, `தீர்ப்பாயங்களில் கொடுக்கும் உத்தரவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலேயே தீர்வு பெற்றுக் கொள்ளலாம்' என்ற உத்தரவு வெளியானது. இதனால் வழக்காடிகள் உற்சாகப்பட்டனர்.
தேங்கப்போகும் வழக்குகள்
ஆனால், இப்போது தீர்ப்பாயங்களே இருக்கக் கூடாது, அந்தத் தீர்ப்புகளை உயர் நீதிமன்ற நீதிபதிகளே வழங்கலாம் எனக் கொண்டு வந்துள்ளனர். இதனால் உயர் நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகும். ஏற்கெனவே, நீதிபதிகள் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர். வழக்கறிஞர்களாலும் வழக்குகளை நடத்த முடிவதில்லை. அதிகபட்சமாக 72 நீதிபதிகள் தேவை என்றால் சென்னை உயர் நீதிமன்றத்தில் 62 நீதிபதிகள்தான் உள்ளனர். இதனை நிரப்புவதற்கும் வழியில்லை. இந்த ஆண்டில் பல பேர் ஓய்வு பெற உள்ளனர். அடுத்த ஆண்டு 5 பேர் ஓய்வு பெற உள்ளனர். இப்படியுள்ள சூழலில், அனைத்து வழக்குகளும் சென்னை உள்பட அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களுக்கு வர உள்ளது.
மத்திய அரசின் புதிய நடைமுறை காரணமாக, தீர்ப்பாயங்களில் பணியாற்றிய ஊழியர்கள் எல்லாம் எங்கே போவார்கள் என்பதற்கு தெளிவான வரையறைகள் இல்லை. தீர்ப்பாய வழக்குகளைக் கையாண்டவர்கள் எல்லாம் அதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். அங்கே தவறு ஏற்பட்டால் மட்டுமே உயர் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். தீர்ப்பாயத்தில் ஓரிரு ஆண்டுகளில் வழக்கு முடிந்துவிடும். இனி அந்த வழக்குகளை எல்லாம் உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்குக் கொண்டு வர 3, 4 ஆண்டுகள் ஆகிவிடும். இதுதொடர்பாக, எந்த விசாரணையும் நடத்தாமல் மத்திய அரசு முடிவெடுத்திருப்பது சரியானதல்ல. இதனால் பெரிய மாற்றங்கள் வந்துவிடப் போவதில்லை. மேலும், மேலும் காலதாமதம் ஏற்படவே வழிவகுக்கும்" என்கிறார் ஆதங்கத்துடன்.
தீர்ப்பாயங்களால் பலன் கிடைத்ததா?
தீர்ப்பாயங்கள் கலைப்பு தொடர்பாக எழும் விமர்சனங்களுக்கு மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் மூத்த வழக்கறிஞர் சீனிவாசனிடம் பிபிசி தமிழுக்காக விளக்கம் கேட்டோம். `` தீர்ப்பாயங்கள் கலைக்கப்பட்டதால், அதற்குப் பதிலாக உயர் நீதிமன்றத்திலேயே ஒரு அமர்வு போடப்படும். அதாவது, தீர்ப்பாயத்தில் என்ன வேலை செய்தார்களோ, அதே வேலையை உயர் நீதிமன்றத்தில் மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` தீர்ப்பாயங்களுக்கான கட்டட வாடகை, சம்பளம் உள்பட இதர செலவுகள் என அரசுக்கு விரயம் ஏற்படுகிறது. அங்கு வழக்குகளும் மெதுவாகவே நகர்கின்றன. இதனால் நேரமும் வீணாகிறது. உதாரணமாக, நுகர்வோர் நீதிமன்றங்களில் 90 நாள்களில் வழக்குகளை முடிக்க வேண்டும் என்றார்கள். ஆனால், அங்கு சிவில் வழக்கு போலவே தாமதம் ஏற்படுகிறது. நுகர்வோர் நீதிமன்றங்களும் தீர்ப்பாயத்தைப் போலவேதான் அமைக்கப்பட்டன. குறிப்பாக, எந்த நோக்கத்துக்காக தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டனவோ, அதற்கான பலன் கிடைக்கவில்லை.
எனவே, சட்டத்தில் மாற்று வழியை யோசித்தும் நிபுணர் குழுவின் அறிக்கையை ஆராய்ந்தும் தீர்ப்பாயங்கள் கலைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுக்கவில்லை. தீர்ப்பாயங்களைவிடவும் மக்களுக்கு சிறப்பானதாகவும் எளிதானதாகவும் தீர்வைக் கொடுக்கும் வகையில் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது" என்கிறார்.
பிற செய்திகள்:
- கொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன?
- சம்ஸ்கிருதத்தை இந்தியாவின் அலுவல் மொழியாக்க திட்டம் தயாரித்தார் அம்பேத்கர்: தலைமை நீதிபதி பாப்டே
- ரெம்டெசிவீர் மருந்தை பதுக்குகிறதா பாஜக? - குஜராத்தில் புதிய சர்ச்சை
- உடற்பயிற்சி செய்யாமல் எடைக் குறைப்பு சாத்தியமா? - ஊட்டச்சத்து நிபுணர் பதில்
- கர்ணன் திரைப்படத்தில் திருப்தியளிக்காத திருத்தம்: உதயநிதி என்ன சொன்னார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: