You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடற்பயிற்சி செய்யாமல் எடைக் குறைப்பு சாத்தியமா? - ஊட்டச்சத்து நிபுணர் பதில்
- எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
- பதவி, பிபிசி தமிழ்
டயட் – சமகாலத்தில் பெரிதும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தை என்று சொல்லலாம். உடல் எடையை குறைக்க டயட்டை பின்பற்ற வேண்டும். டயட் என்றால் உணவு உட்கொள்வதை குறைத்து கொள்வது என்ற பரவலான எண்ணம் உள்ளது. இது முற்றிலும் தவறு என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மினாக்ஷி பஜாஜ். உடல் எடை குறைப்பது, சத்தான உணவை எடுத்துக் கொள்வது குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினோம்.
கேள்வி: ஒரு வாரத்தில் 10 கிலோ வரை எடைகுறைக்கலாம். உடற்பயிற்சி தேவையில்லை. உணவு கட்டுப்பாடுகள் தேவையில்லை என பல விளம்பரங்களை சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் காண முடிகிறது. அதை மக்கள் பலரும் நம்பி செல்கிறார்கள். உண்மையில் அது சாத்தியமா?
பதில்: அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அதை நம்புவது சரியில்லை. ஆனால், இங்கு இது மட்டும் பிரச்னை இல்லை. சிலர் தாங்களே இதுதான் டயட் என்று நினைத்துக் கொண்டு அதனை பின்பற்றுகிறார்கள். உதாரணமாக இப்போது மிகவும் பிரபலமாக இருப்பது கீட்டோ டயட்.
கீட்டோ டயட்டை ஊட்டச்சத்து நிபுணரின் உதவி இல்லாமல் தாங்களே எடுத்துக் கொள்கிறார்கள். காலையில் வெண்ணையுடன் தேநீர் அருந்த வேண்டும், 70 பாதாம் பருப்பு, காலிஃபிளவர், சிக்கன், மட்டன், சீஸ், முட்டை ஆகியவற்றை மட்டுமே எடுத்துக் கொண்டால் உடல் எடை குறைந்துவிடும் என்பதுதான் அவர்கள் எண்ணம்.
அப்போது அவர்களுக்கு ஒரு மாதத்தில் 6 அல்லது 7 கிலோ எடை குறைகிறது. ஆனால், இதனை அதிக காலம் பின்பற்றுவது கடினமாக இருக்கிறது. மூன்று மாதத்திற்கும் மேல் இந்த டயட்டை பின்பற்றினால், அதற்கு பிறகு சிக்கன், மட்டன் போன்றவற்றை பார்த்தால் ஒரு மாதிரியான வெறுப்பு வரலாம். மேலும், தேவையான நார் சத்தை எடுத்துக் கொள்ளாததால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அடுத்து, மனக்குழப்பம் வருகிறது.
உடல் சோர்வடைந்துவிடும். ஒரு கட்டத்தில், டயட்டையும் பின்பற்ற முடியாமல், வழக்கமான உணவு சாப்பிட்டால் எடை அதிகரித்து விடுமோ என்ற அச்சத்திலும் அவர்களது வாழ்வு ஒரு மோசமான நிலையை அடைகிறது. இதுதான் பெரும்பாலாக நிகழும் நிகழ்வாக இருக்கிறது.
சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சி இரண்டையும் நீங்கள் பின்பற்றினால் மட்டுமே உடல் எடைக்குறைப்பு என்பது சாத்தியம்.
கேள்வி: பெண்கள் இதுபோன்ற டயட்டை பின்பற்றுவது அவர்களது மாதவிடாய் சுழற்சியை பாதிக்குமா?
பெண்கள்தான் அதிகளவில் டயட் கடைபிடிப்பதை பார்க்க முடிகிறது. சைஸ் 0 வர வேண்டும் என்ற ஆசை இப்போதும் பலருக்கு இருக்கிறது. காலையில் இருந்து மாலை வரை நீராகாரமாக மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். மூன்று நாள் Liquid diet எடுத்துக் கொண்டு நான்காவது நாள் வெறும் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் எப்படி மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படும் என்று நீங்கள் கேட்கலாம். இதுபோன்ற உணவு பழக்கத்தால் இரும்பு சத்து அவர்கள் உடலில் குறையலாம். அதே போல புரதச்சத்து, வைட்டமின் சி-யும் குறையலாம். இதனால் ரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஒருவரின் மாதவிடாய் பாதிக்கப்படும்.
கேள்வி: காய்கறிகளுக்கு பதில் சந்தைகளில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து மாவு அல்லது பானங்கள் (Supplements) எடுத்துக் கொள்வது அதிகமாகி இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
முதலில் காய்கறிகளில் என்ன இருக்கிறது என்பதை உங்களுக்கு கூறுகிறேன். உதாரணமாக கீரையை எடுத்துக் கொண்டால், அதில் பீட்டா கேரட்டின், பி வைட்டமின் ஆகிய சத்துகள் இருக்கின்றன. அதே போல ஒவ்வொரு காய்கறி, பழங்களிலும் ஒவ்வொரு மாதிரியான ஊட்டச்சத்து இருக்கிறது. உங்கள் உடல் செயல்பட வேண்டும் என்றால் இதுபோன்ற ஊட்டச்சத்துகள் தேவை. அதாவது வைட்டமின்கள், தாதுப் பொருள்கள், நார்சத்து அனைத்தும் உடலுக்கு தேவை.
இதயம் நன்றாக செயல்பட வேண்டும் என்றாலோ, மலச்சிக்கல் வராமல் இருக்க வேண்டும் என்றாலோ நார்சத்து உடலுக்குள் செல்ல வேண்டும். பி வைட்டமின் உடலுக்குள் சென்றால்தான், சாப்பிட்ட உணவு செரிக்கும் வேலை நடக்கும். இதெல்லாம் நாம் சாப்பிடும் சோறு, காய்கறிகளில் மட்டுமே இருக்கிறது.
இதற்கு மாற்றாக இந்த உலகத்திலேயே மாத்திரைகள் ஏதும் இல்லை. அதாவது, உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுப் பொருள்கள், நார்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் என அனைத்தும் வருகிற ஒரு மாத்திரை இல்லை.
எடுத்துக்காட்டாக, சந்தைகளில் ஒமேகா 3 கேப்ஸ்யூல்ஸ் கிடைக்கின்றன. அவற்றை சாப்பிட்டால் நல்லதுதான். நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதற்கு ஏற்றாற்போல நாம் உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாதிரியான மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு ஒரு எல்லை இருக்கிறது. ஒருவரின் உடல் எடை, வயதுக்கு ஏற்றாற்போல் தான் ஒமேகா 3 எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே சமயம் நீங்கள் மற்றொன்றை கவனிக்க வேண்டும். இதே ஒமேகா 3 சத்து, நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளிலும் இருக்கிறது. வெந்தயம், கீரை, சுண்டல் ஆகியவற்றில் இது அதிகம் உள்ளது. இதை நீங்கள் சாப்பிடும்போது, ஒமேகா 3 மட்டும் அல்லாது, மேலும் பல சத்துக்கள் உங்கள் உடலுக்கு கிடைக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.
இயற்கையான சத்தான காய்கறி, பழங்களுக்கு மாற்று இல்லை என்பதே உண்மை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: