வாஜ்பேயி அமெரிக்க எதிர்ப்பை மீறி முரசொலி மாறனை ஆதரித்தார் - நினைவுகூர்ந்த பழனிமாணிக்கம்

    • எழுதியவர், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
    • பதவி, முன்னாள் மத்திய இணையமைச்சர், திமுக

(திமுக-வை சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி இறந்தபோது அவரைப் பற்றிய தமது அனுபத்தை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார். அவரது நினைவு நாளை ஒட்டி இந்தக் கட்டுரையை நேயர்களுடன் மீண்டும் பகிர்கிறோம்).

1999-2004 காலகட்டத்தில் நான் நாடாளுமன்ற திமுக-வின் தலைமைக் கொறடாவாக இருந்தேன். என் ஞான குருவான முரசொலி மாறன் இந்திய தொழில்-வணிக அமைச்சராக இருந்தார். உலக வர்த்தக நிறுவனத்தின் தோஹா மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற முரசொலி மாறன், அம்மாநாட்டில் வளரும், பின் தங்கிய நாடுகளை ஒருங்கிணைத்து அவற்றின் உரிமையைப் பாதுகாக்க வளர்ந்த நாடுகளுக்கு எதிராக மிகவும் போராடினார்.

அப்போது நள்ளிரவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், வாஜ்பேயி-ஐ தொடர்பு கொண்டு "உங்கள் அமைச்சர் முரண்டு செய்கிறார். அவரை ஒத்துப் போகச் சொல்லுங்கள்," என்று கூறியுள்ளார். இதையடுத்து, வாஜ்பேயி அவர்கள், முரசொலி மாறனை தொடர்புகொண்டு, "எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் நாட்டுக்கு எது நல்லது என்று மனசாட்சி சொல்கிறதோ அதன்படி செயல்படுங்கள். யாருக்காகவும் நீங்கள் உங்கள் நிலையை மாற்றிக்கொள்ளவேண்டாம்" என்று கூறினார்.

கோத்ரா

பிரதமர் ஆவதற்கு முன்பு அவர் பற்றி பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் உண்டு. ஆனால், பிரதமரானபின், கோத்ரா சம்பவம் நடந்தபோது, இரவெல்லாம் தூங்காமல் துடித்துப்போய், விடியற்காலையில் சோனியா காந்தி தலைமையில், இரண்டு ஹெலிகாப்டரில் அனைத்துக் கட்சித் தலைவர்களை அங்கு அனுப்பி நிலவரத்தைத் தெரிந்து வரச்செய்து மிகவும் துயருற்றார்.

நெடுஞ்சாலையில் இந்தி

ஒருமுறை நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் இந்தியில் அறிவிப்பு எழுத வேண்டும் என்று முலாயம் சிங் கட்சியைச் சேர்ந்த கொறடா அகிலேஷ் யாதவ் என்பவர் முரட்டுத்தனமாக வாதம் செய்து நம் உறுப்பினர்களின் உணர்ச்சியைக் கிளப்பினார்.

அப்போது வெளியில் இருந்து அவைக்குள் வந்த நான், அவரை நோக்கி முன்னேறினேன். அப்போது யஷ்வந்த் சின்ஹாவிடம் சொல்லி என் இருக்கைக்கு போகச் சொல்லிய பிரதமர் வாஜ்பேயி, தாமே எழுந்து நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கச் சொன்னார். பிறகு, அவைத்தலைவர் அறையில் கூட்டம் நடந்தது.

அங்கு பேசிய வாஜ்பேயி தமிழ்நாட்டின் நெடுஞ்சாலை அறிவிப்புகளில் தமிழையும் எழுதவேண்டும் என்று கூறினார். அப்போது நான், "அண்ணா தலைமையிலான ஆட்சியில் இரு மொழிக் கொள்கைக்கு சட்டம் உருவாக்கப்பட்டுவிட்டது. எனவே, மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் இடமில்லை" என்று சொன்னேன்.

ஆனால், அவர் தாம் ஒரு பெரிய தலைவர் என்பதையெல்லாம் கைவிட்டு, "வடநாட்டு ஓட்டுநர்களுக்கு தமிழோ, ஆங்கிலமோ தெரியாது. எனவே, மூன்றாவது இடத்திலாவது இந்தியை எழுத அனுமதிக்கவேண்டும்" என்று வாஜ்பேயி கேட்டார். அவர் அவ்வாறு கேட்டதும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

அப்போது அவர் நடந்துகொண்ட முறை மெய்சிலிர்க்க வைத்தது. தாம் ஒரு பெரிய தலைவர் என்பதையோ, பிரதமர் என்பதையோ விட்டுவிட்டு மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர் என்பதை அது காட்டியது.

முரண்பட்ட கொள்கைகளை எப்படிக் கையாண்டார்?

1998-ல் சுப்ரமணியசாமி நடத்திய தேநீர் விருந்துக்குப் பின் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக வாபஸ் பெற்றது. வாஜ்பேயி கலைஞரை அழைத்து ஆதரவு கேட்டார். கட்சி மேலிடத் தலைவர்களை கலந்தாலோசித்து முரசொலி மாறன் மூலமாக திமுக-வின் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

1999 தேர்தலில், அவரவர் கட்சிக் கொள்கைகளை நிறைவேற்றப் பாடுபடாமல் பொதுவான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றமட்டுமே பாடுபடவேண்டும் என்ற அடிப்படையில் ஒரு ஒற்றுமை ஏற்பட்டது. 2004 வரை அந்த வாக்குறுதியை வாஜ்பேயி மீறவில்லை. பொடாவில் வைகோ கைது செய்யப்பட்டபோது மிகவும் துடித்துப்போய் அவரை வெளியே எடுக்கவும், சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் மிகவும் பாடுபட்டார் வாஜ்பேயி.

பிரதமராகும் முன்னர் மிகவும் சக்திவாய்ந்த ஜனசங்க பிரசாரகராக இருந்த வாஜ்பேயி, பிரதமரான பின்னர் நாட்டின் சிறுபான்மையினரை, எல்லாவித கருத்துகளை கொண்டவர்களையும் அரவணைத்து தலைமையேற்கவேண்டும் என்ற பொதுத் தன்மைக்குத் தம்மை மாற்றிக்கொண்டார்.

கார்கில் வெற்றி, பொக்ரான் அணு குண்டு சோதனை போன்ற வெற்றிகளுக்குப் பிறகு, இந்த வெற்றிகளைப் பெற்ற பிரதமர் சம நிலை மனதோடு, சாதாரண மனிதரைப் போல தம்மை வெளிப்படுத்திக்கொண்டார். எந்த இடத்திலும் தம்மை முன்னிலைப்படுத்திக்கொண்டு தம்மால்தான் இந்த வெற்றி ஏற்பட்டது என்று அவர் கூறியதில்லை.

அரைமணி நேரத்தில் பிரதமரை சந்திக்கலாம்

அப்போதெல்லாம் எங்களுக்கு அரசியல்ரீதியாக நிறைய பிரச்சினை இருந்தது. 2001-04 வரை தமிழகத்தில் ஜெயலலிதா அரசு இருந்தது. மக்களுக்கு நன்மை தரும் சட்டங்களை நிறைவேற்றவேண்டும் என்று நினைக்கும்போது, கட்சி சார்பில் என்றாலும், தனிப்பட்ட முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்றாலும் அரைமணி நேரம் செலவிட்டால் பிரதமரை சந்தித்துவிட முடியும்.

அப்போதெல்லாம் அவர் எங்களை வரவேற்கிற விதம், கலந்துரையாடும் விதம், வழியனுப்பும் விதம் எல்லாம் ஒவ்வொரு முறையும் நெஞ்சில் நீங்காத நிழலாக அமைந்திருக்கும்.

மாறனோடு சகோதர உறவு

உடல் நலம் குன்றி முரசொலி மாறன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது மருத்துவமனை சென்று அவருக்கு வேண்டிய மருத்துவ வசதிகளை செய்யச் சொன்னார் பிரதமர் வாஜ்பேயி. அவர் உடல் நிலை மோசமடைந்தபோது, அமெரிக்கா சென்று சிகிச்சை பெற எல்லா உதவிகளும் செய்த அவர், மாறனை அமைச்சராகவே அமெரிக்கா அனுப்பி வைத்தார்.

முரசொலி மாறன் மறைந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில், புராணிகர்கள் (புராணங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள்) விரும்பாதவிதத்தில், இடுகாடுவரை வந்திருந்து உற்ற உறவினரைப் போல, சகோதரனைப் போல மாறன் உடல் வைக்கப்பட்டிருந்த கட்டிலை அவரும் ஒரு கைப்பிடித்து எரிமேடைக்குள் தள்ளிவிட்டார். அந்த அளவுக்கு அந்த காலகட்டத்தில் எங்களுடன் இறண்டறக் கலந்திருந்தார்.

அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர் இடுகாட்டுக்கு வருவதையோ, ஒரு பிரதமர் இப்படி நடந்துகொண்டதையோ அதற்கு முன் நான் கேள்விப்பட்டதும், பார்த்ததும் இல்லை.

(எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துடன் பிபிசி தமிழின் அ.தா.பாலசுப்ரமணியன் நடத்திய உரையாடலின் எழுத்து வடிவம்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: