You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகேந்திர சிங் தோனி: புயலாக தொடங்கி கவிதையில் முடிந்த கிரிக்கெட் பயணம் - சாதித்தது என்ன?
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக எண்ணற்ற இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் தொடர்ந்து விவாதித்த விஷயம் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஒய்வு அறிவிப்பு எப்போது என்பது தான்.
நேற்று (ஆகஸ்ட் 15, 2020) இரவு 7.29 மணியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஒய்வு பெற்றுவிட்டதாக அறிவித்த தோனி, நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்ட கேள்விக்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பாலிவுட் பாடல் ஒன்றை பதிவிட்டு கவிதை நடையில் பதிலளித்துள்ளார்.
மே பல் தோ பல்... என தொடங்கும் அந்த பாலிவுட் பாடலின் பொருள், ஓரிரு தருணங்களுக்கு மட்டுமே நான் ஒரு கவிஞன், எனது கதை இன்னும் ஓரிரு தருணங்களே நீடிக்கும் என்பதாக தொடரும்.
கவிதை நடையில் ஓய்வுபெறும் முடிவை அறிவித்த தோனியின் கிரிக்கெட் பயணத்தின் தொடக்கம் புயல் போல் இருந்தது என்றே கூறலாம்.
ராஞ்சியில் மிகவும் சாதாரண பின்னணியில் பிறந்து வளர்ந்த தோனிக்கு சர்வதேச கிரிக்கெட் வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடவில்லை.
முதலில் பிகார், ஜார்க்கண்ட், கிழக்கு மண்டலம் என பல பிராந்திய அணிகளில் விளையாடி வந்தார் தோனி. இந்திய அணி மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி ஆகியவற்றில் இடம்பெற வாய்ப்புள்ளவர்கள் பற்றிய செய்திகளில் 2000-மாவது ஆண்டு முதலே தோனியின் பெயர் தொடர்ந்து அடிபட்டது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு தான், 2004 டிசம்பரில் ஆரம்பித்த தோனியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் சிறப்பாக இருக்கவில்லை.
வங்கதேச அணிக்கு எதிரான தனது அறிமுக ஒருநாள் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட்டாகி தோனி வெளியேறினார்.
தொடர்ந்து விளையாடிய போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் எடுக்காத தோனி, 2005-இல் விசாகப்பட்டினத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி 148 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதற்கு பிறகு அவருக்கு எல்லாமே ஏறுமுகம் தான்.
இலங்கையுடன் நடந்த இருதரப்பு ஒருநாள் போட்டி தொடரில், ஜெய்பூரில் நடந்த போட்டியில் 183 ரன்களை எடுத்த தோனி இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்.
2011-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், சற்றும் எதிர்பாரா விதமாக ஐந்தாம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்கி தனது அதிரடி பேட்டிங்கால் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒர் உலக கோப்பையை இந்தியா வெல்ல தோனி முக்கிய காரணமாக இருந்தார்.
பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட்கீப்பராக சிறப்பாக பங்களித்த தோனிக்கு சிறப்பு சேர்த்தது அவரது கேப்டன்ஷிப் தான். 2007 டி20 மற்றும் 2011 ஐசிசி உலக கோப்பைகளை தோனியின் தலைமையில் இந்தியா வென்றது.
அதேபோல், 2013 ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பையையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. மேலும் அவர் தலைமையேற்ற இந்திய அணி இருமுறை ஆசிய கோப்பையை வென்றது.
தோனிக்கு எண்ணற்ற ரசிகர்கள் உருவானது எப்படி?
அதேபோல் ஐபிஎல் தொடரிலும் தோனியின் வெற்றி பயணம் தொடர்ந்தது. 2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று ஐபிஎல் தொடர்களை அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வென்றது.
கிரிக்கெட் மைதானங்கள் மட்டுமல்லாமல் சமூகவலைத்தளங்களில் தோனிக்கு தனியான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
கேப்டன் கூல், தல, எம்எஸ்டி என ரசிகர்களால் வெவ்வேறு பெயர்களால் அவர் அழைக்கப்பட்டார்.
அதிரடி பேட்டிங், மிகவும் விரைவாக ஓடி ரன்கள் எடுப்பது ஆகியவை தோனியை ஆரம்ப காலத்தில் ரசிகர்களுக்கு பிடித்ததற்கான காரணங்களாக கூறப்பட்டன.
ஹெலிகாப்டர் ஸ்டைல் சிக்ஸர்
அவரது விக்கெட் கீப்பிங் பாணி, உலக கோப்பைகளை வென்ற கேப்டன் ஆகியவையும் ரசிகர்களின் கனவு நாயகன் அந்தஸ்தை தோனிக்கு அளித்தன.
அதேபோல் ஹெலிகாப்டர் ஸ்டைல் என அழைக்கப்படும் தோனியின் பந்தை லாவகமாக சுழற்றி சிக்ஸர் அடிக்கும் பாணியும் அவருக்கு எண்ணற்ற ரசிகர்களை தந்தது.
அதேபோல் மோட்டார் பைக்குகள் மீது அவருக்கு இருந்த விருப்பம் இளைஞர்களை அவரை நோக்கி மேலும் ஈர்த்தது.
ஆரம்ப காலத்தில் தோனிக்கு நீளமான தலைமுடி இருக்கும். இது அவரை மிகவும் கவனிக்க வைத்தது.
2006-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இந்த தொடரில் மிக சிறப்பாக விளையாடிய தோனி வெகுவாக பாராட்டப்பட்டார். அந்த தொடரின் கடைசி போட்டியில் விருதுகளை வழங்கி பேசிய அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், தோனியின் அதிரடி ஆட்டத்தை பாராட்டினார்.
அது மட்டுமல்லாமல் முஷாரப் மேலும் பேசியது சுவாரஸ்யமான விஷயம். தோனியின் நீளமான ஹேர்ஸ்டைல் பற்றி குறிப்பிட்ட அவர் ''இங்கு சிலர் நீங்கள் தலைமுடியை குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், நான் கூறுகிறேன் நீங்கள் உங்கள் தலைமுடியை வெட்ட வேண்டாம். இந்த ஹேர் ஸ்டைலில் உங்களை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது தோனி'' என்று கூறினார்.
இது மைதானத்தில் பலத்த கைத்தட்டலை ஏற்படுத்தியது.
தோனியும், சென்னையும் - நெருங்கிய பந்தத்துக்கு காரணம் என்ன?
அதேபோல் தோனிக்கு சென்னையில் எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. சிஎஸ்கே ஐபிஎல் அணிக்காக தோனி சிறப்பாக விளையாடியது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பெரிதும் ஈர்த்தது.
சென்னை இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தோனி குறித்து அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிடுவதை காணமுடியும்.
ஆனால் இவை அனைத்தையும் தாண்டி தோனிக்கு உலக அளவில் பல ரசிகர்களை தந்தது அவரது நிதானமான பாணியே.
இன்று தோனி குறித்து பேசுபவர்கள் பலரும் அவரின் நிதானமான அணுகுமுறையை வெகுவாக பாராட்டுவதுண்டு. கேப்டன் கூல் என்றும் அவர் அழைக்கப்பட்டார்.
ஆட்டத்தின் பரபரப்பான தருணங்களின்போது தோனியின் முகத்தில் எந்த பதற்றமும் தென்படாது. இலக்கே குறியாக இருந்தாலும், மிக இயல்பாக தோன்றும் அவரது பாணியே அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது எனலாம்.
பிற செய்திகள்:
- எடப்பாடி பழனிசாமி Vs ஓ. பன்னீர்செல்வம்: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்?
- இலங்கை : மஹிந்த ராஜபக்ஷவுடன் சமரசமாக செல்வேனா? - அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேட்டி
- இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த 'ரகசிய வானொலி நிலையம்'
- இஸ்ரேல் - பாலத்தீனம்: என்ன பிரச்சனை? - 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: