You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்ணன் திரைப்படத்தில் திருப்தியளிக்காத திருத்தம்: உதயநிதி என்ன சொன்னார்?
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த கொடியங்குளம் சம்பவம், கர்ணன் திரைப்படத்தில் தி.மு.க. ஆட்சியில் நடந்ததைப்போல காட்டப்பட்டிருந்தது சர்ச்சையாகியிருக்கிறது. இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடும்படி தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தின் கதை 1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் என்ற கிராமத்தில் போலீஸ் நடத்திய தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால், திரைப்படத்தில் இந்த சம்பவம் 1997ல் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த தி.மு.கவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், "1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்' என உறுதியளித்தனர்" என்று கூறியிருந்தார்.
இதற்குப் பிறகு, கர்ணன் படத்தில் வருடம் திருத்தப்பட்டு, "90களின் பிற்பகுதியில்" என்று காட்டப்பட்டது. கொடியங்குளம் சம்பவம் 1995ல் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்திருக்கும் நிலையில், அதனை மீண்டும் தி.மு.க. ஆட்சியில் நடந்ததுபோல குறிப்பிட்டிருப்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இது தொடர்பாக மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், "கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன.
எனினும் '90களின் இறுதியில்' என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கர்ணன் படக்குழுவோ, இயக்குனர் மாரி செல்வராஜோ இந்த சர்ச்சை தொடர்பாக இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: