You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சகாயம் உடல்நிலை: 3வது பரிசோதனையில் மீண்ட நெகிழ்ச்சி தருணம்
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், புதன்கிழமை (ஏப்ரல் 14) சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பினார். அப்போது `அரசு மருத்துவர்களின் சேவை அளப்பறியது' என நெகிழ்ந்து போய் பாராட்டியிருக்கிறார் சகாயம்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான அணியின் சார்பில் 20 தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறங்கினர்.
`சகாயம் அரசியல் பேரவை' என்ற பெயரில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரத்தை சகாயம் மேற்கொண்டார். இதற்காக, கடலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்துவிட்டு சென்னை திரும்பியவர், கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார்.
தொடர்ந்து காய்ச்சல் குறையாமல் இருந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.அதன் முடிவில், `கொரோனா பாசிட்டிவ்' என வந்ததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப் பிறகு, இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையிலும் `பாசிட்டிவ்' என வந்தது.
இதைத் தொடர்ந்து ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே சென்றது. மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூடியதால் சகாயத்தின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, தனி மருத்துவ குழு ஒன்று சகாயத்துக்கு தீவிர சிகிச்சை அளித்தது. இதன் பலனாக பத்து நாள்களைக் கடந்த பிறகு கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டார்.
இன்று காலை அவருக்கு மூன்றாவது முறையாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் `நெகட்டிவ்' என முடிவு வந்தது. அவரது ரத்த அழுத்தமும் சீராக இருந்தது. மேலும், சர்க்கரையின் அளவும் 360 என்ற அளவில் இருந்து 220 ஆக குறைந்து விட்டது பரிசோதனையில் தெரிய வந்தது.
`இன்னும் ஒரு வாரத்தில் சர்க்கரையின் அளவு சீராகிவிடும்' என மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் பேசிய மருத்துவர்கள், `இனி வீட்டிலேயே உங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையைத் தொடரலாம். எந்த பிரச்னையும் இல்லை' என உற்சாகப்படுத்தியுள்ளனர்.
இதன் பின்னர், அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த சகாயம், மருத்துவ கல்லூரி முதல்வர் தேரணி ராஜனைத் தொடர்பு கொண்டு உருக்கமாகப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ` என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டீர்கள். மக்களுக்காக உழைக்கும் உங்களின் பணி சிறப்பாக இருக்கிறது' என்றார். தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நலனுக்காக ரூ.10,000 நன்கொடையையும் அளித்தார்.
`தற்போது எப்படியிருக்கிறார் சகாயம்?' என அவரது ஆதரவாளரும் சகாயம் அரசியல் பேரவையின் தலைமை பொறுப்பாளருமான பாஷாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து விட்டார். கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து விட்டதால் வீட்டில் இருந்தே சிகிச்சை எடுக்கலாம் என மருத்துவர்கள் கூறி விட்டனர். தனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். அரசு மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் விரைவில் குணமடைந்து விட்டார். விரைவில், அவர் சமூகப் பணிகளை விரைவில் முன்னெடுக்க இருக்கிறார்" என்றார் உற்சாகத்துடன்.
பிற செய்திகள்:
- ஐபேக்கின் தேர்தலுக்குப் பிறகான கணிப்பு: 10 கேள்விகள்; 5 அறிக்கைகளால் குழம்புகிறதா அறிவாலயம்?
- இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிப்பு: அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு
- எகிப்தின் "தொலைந்துபோன தங்க நகரம்" கண்டுபிடிப்பு: பொக்கிஷங்களைத் தேடும் ஆய்வாளர்கள்
- தமிழ்நாடு தேர்தல் 2021: வேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தலுக்கு உத்தரவு
- மகாராஷ்டிராவில் ஏப்ரல் 14 முதல் முழு பொது முடக்கம் - 15 நாட்களுக்கு 144 தடை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: