You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எகிப்தின் "தொலைந்துபோன தங்க நகரம்" கண்டுபிடிப்பு: பொக்கிஷங்களைத் தேடும் ஆய்வாளர்கள்
எகிப்தில் பாரோ மன்னன் துத்தன்காமுனின் கல்லறையைப் போல மிகவும் மதிப்பு மிக்க மற்றொரு இடம் கண்டறியப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்திருந்த 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் அது.
இதை "தொலைந்துபோன தங்க நகரம்" என்கிறார் புகழ்பெற்ற எகிப்து தொல்லியல் நிபுணர் ஸாஹி ஹவாஸ்.
இந்த நகரத்தின் பெயர் ஆட்டென். ஹவாஸின் கூற்றுப்படி எகிப்தில் இதுவரை கண்டறியப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய நகரம் இது. பல வெளிநாட்டு அமைப்புகள் கண்டுபிடிக்க முயற்சி செய்து தோல்வியடைந்த இடம்.
கடந்த செப்டம்பரில்தான் இந்த இடம் தோண்டப்பட்டது. சில வாரங்களிலேயே பழமையான நகரம் மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டுவிட்டது.
கி.மு. 1391 முதல் 1353 வரை எகிப்தை ஆண்ட அதிகாரம் மிக்க பாரோ மன்னர்களுள் ஒருவரான ஆமென்ஹோடெப் காலத்தைச் சேர்ந்தது இந்த நகரம்.
அவரது காலத்துக்குப் பிறகு அய் மற்றும் துத்தன்காமுன் ஆகியோரால் இந்த நகரம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
1922-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட துத்தன்காமுன் கல்லறைக்குப் பிறகு இதுவே முக்கியமான கண்டுபிடிப்பாகும் என்கிறார் எகிப்து வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பெஸ்டி பிரியன்.
எகிப்தியப் பேரரசு செல்வச் செழிப்பில் மிதந்துக் கொண்டிருந்தபோது மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இந்த நகரம் நமக்கு எடுத்துக் காட்டும் என்கிறார் பெஸ்டி.
நகைகள், வண்ணம் பூசப்பட்ட மண்பாண்டங்கள், உருள்வண்டு பொறிக்கப்பட்ட தாயத்துகள், மூன்றாம் ஆமென்ஹோடெப் மன்னரின் இலச்சினையைக் கொண்ட செங்கற்கள் போன்றவை இந்த நகரத்தில் இருந்து கிடைத்திருக்கின்றன.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் லக்சர் நகருக்கு அருகே இந்தத் தொன்மையான நகரம் அமைந்திருக்கிறது.
தோண்டத் தொடங்கியது முதலே தென்பட்ட பொருள்களைக் கண்டு ஆய்வாளர்கள் திகைத்துப் போனார்கள். சில வாரங்களிலேயே இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. "சேதமடையாத முழுமையான சுவர்கள், சேமிப்புக் கிடங்குகள், தினசரி வாழ்வில் பயன்படும் கருவிகள் நிறைந்திருந்த அறைகள் என மிக நாகரீகமான நகரம் அவர்களுக்குக் கிடைத்தது.
"தோண்டும் பணி தொடங்கி 7 மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. நகரத்தைச் சுற்றிய பல இடங்கள் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கின்றன. மக்கள் வசிக்கும் ஒரு பகுதி, நிர்வாக மாவட்டம், பேக்கரி என அந்தக்கால நகர வாழ்க்கையின் அம்சங்கள் தென்பட்டிருக்கின்றன" என்கிறார் ஹவாஸ்.
பொக்கிஷங்கள் நிறைந்த கல்லறைகள் பல கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஹவாஸ் கூறுகிறார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தனது தொன்மையான வரலாற்றை பிரபலப்படுத்துவதற்கு எகிப்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாட்டின் பண்டைக்கால மம்மிகள் கெய்ரோ நகரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. 18 மன்னர்கள் மற்றும் 4 அரசிகளின் உடல்கள் இவற்றில் அடங்கும்.
பிற செய்திகள்:
- மகாராஷ்டிராவில் ஏப்ரல் 14 முதல் முழு பொது முடக்கம் - 15 நாட்களுக்கு 144 தடை
- தமிழ்நாடு தேர்தல் 2021: வேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தலுக்கு உத்தரவு
- தமிழக தேர்தல்: 3 ரகசிய அறிக்கைகள்! அமைச்சர்களுக்கு நம்பிக்கையூட்டிய எடப்பாடி
- பாலியல் கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் மனக் குமுறல்
- காது கேட்காது, ஆனால் சைகை புரியும் - ஆச்சரியப்படுத்தும் மேய்ப்பு நாய்
- மேற்கு வங்க தேர்தல்: மமதா பானர்ஜி பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: