You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எகிப்தில் தங்க நாக்குகள் கொண்ட 2,000 ஆண்டுகள் பழமையான மம்மிகள் கண்டெடுப்பு
எகிப்தின் வடக்குப்பகுதியில், வாய்க்குள் தங்கத்தினாலான நாக்குகள் வைக்கப்பட்ட சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.
எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள 'தபோசிரிஸ் மேக்னா' கோவிலில் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் எகிப்திய - டொமினிகன் குழு ஒன்று, கிரேக்க மற்றும் ரோமானிய காலங்களில் பிரபலமாக இருந்த பாறைகளை குடைந்து அமைக்கப்பட்ட கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்ட 16 மம்மிகளை கண்டுபிடித்தது.
கல்லறைகளுக்குள் மோசமான முறையில் பாதுகாக்கப்பட்ட மம்மிகள் இருந்தன.
இறப்புக்கு பிறகான வாழ்க்கையில் ஒசைரிஸ் கடவுளின் நீதிமன்றத்தில் பேசுவதற்காக நாக்குகளின் வடிவிலான தங்கப் படலம் போன்ற தாயத்துக்கள் சடலத்துடன் புதைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
ஒசைரிஸ் பாதாள உலகத்தின் அதிபதி என்றும் அவரே இறந்தவர்களுக்கு நீதிபதி என்றும் பண்டைய எகிப்தியர்கள் நம்பினர்.
தற்போது கண்டறியப்பட்டுள்ள மம்மிகளில் ஒன்றின் மீது மூடப்பட்டிருந்த பிளாஸ்டர், கைத்தறி மற்றும் பசை அடுக்குகளால் ஆன மூடியில் பதியப்பட்ட அலங்காரத்தில் கடவுளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததாக இந்த ஆய்வில் ஈடுபட்ட சாண்டோ டொமிங்கோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த தொல்பொருள் ஆய்வாளரான கேத்லீன் மார்டினெஸ் கூறியதாக எகிப்தின் தொல்பொருள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு மம்மியின் தலையைச் சுற்றியுள்ள மூடிப் போன்ற அமைப்பில், கிரீடம், கொம்புகள் மற்றும் ஒரு நாக பாம்பை சித்தரிக்கும் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அவர் மேலும் கூறுகிறார். மார்பில், கடவுள் ஹோரஸை சித்தரிக்கும் வகையில் கழுத்தணி போன்ற அலங்காரம் சித்தரிக்கப்பட்டிருந்தது.
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில் உள்ள தொல்பொருள் ஆய்வுத்துறையின் மூத்த அதிகாரியான கலீத் அபோ எல் ஹம்ட், தபோசிரிஸ் மாக்னாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்பொருள் ஆராய்ச்சியின்போது, இறந்த பெண்ணிற்கு அணிவிக்கப்படும் ஒரு முகமூடி, ஒரு தங்க மாலையின் எட்டு தங்க செதில்கள் மற்றும் கிரேக்க மற்றும் ரோமானிய காலத்திற்கு முந்தைய எட்டு பளிங்கு முகமூடிகள் ஆகியவையும் கண்டறியப்பட்டதாக கூறுகிறார்.
இதே கோயிலுக்குள் அரசி ஏழாம் கிளியோபாட்ராவின் பெயர் மற்றும் உருவப்படம் கொண்ட பல நாணயங்கள் முன்பு கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்து அரசு மேலும் தெரிவித்துள்ளது.
கிமு 51-30 இடைப்பட்ட காலத்தில் எகிப்தை ஆண்ட கிரேக்க மொழி பேசும் டோலமிக் வம்சத்தின் கடைசி அரசியாக ஏழாம் கிளியோபாட்ரா இருந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு, எகிப்து ரோமானிய ஆதிக்கத்தின் கீழ் வந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: