விவசாயிகள் போராட்டம்: போலீஸ் கைது செய்தவர்கள் எங்கே? கேள்வி கேட்கும் விவசாயிகள்

டெல்லியில் ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியைத் தொடர்ந்து காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்ட பலரது விவரம் தெரியவில்லை என்று ஐக்கிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

யுனைடெட் கிசான் மோர்ச்சா என்ற அந்த விவசாய சங்கத்தின் சார்பில் டெல்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய தலைவர்கள், "விவசாயிகள் போராட்டத்தின்போது விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 என காவல்துறை கூறுகிறது. ஆனால், எங்கள் கணக்குப்படி மேலும் 29 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை," என்று தெரிவித்தனர்.

காவல்துறையினர் பிடித்துச் சென்ற விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களிடம் மருத்துவ பரிசோதனை செய்ய குழு அமைக்குமாறு மத்திய உள்துறையை கேட்டுக் கொள்ளவுள்ளோம் என்றும் விவசாயிகள் சங்க தலைவர்கள் குறிப்பிட்டனர்.

சக விவசாயிகளை காவல்துறை பிடியில் இருந்து வெளியே கொண்டு வர தொடர்ந்து போராடுவோம் என்று அவர்கள் கூறினர்.

"போராட்டம் ஓயாது"

. இதற்கிடையே, இந்திய விவசாயிகள் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகெய்த், வேளாண் சட்டங்கள் முழுமையாக திரும்பப் பெறப்படும்வரை விவசாயிகள் ஓய மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் குடியரசு தினத்தின்போது செங்கோட்டையில் கொடியேற்றும் நிலைக்கு சென்ற இளைஞர்கள், விவசாயிகளுக்கு எதிரான மன நிலையை உருவாக்கவே அப்படி செய்ததாக ராகேஷ் திகெய்த் குற்றம்சாட்டினார்.

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக டெல்லி, காஸிபூர், சிங்கு எல்லைகளில் போராடும் விவசாயிகளை சந்திக்க பல இடங்களில் இருந்தும் விவசாயிகள் வந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை காவல்துறையினர் கடுமையாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எது நடந்தாலும் விவசாயிகள் சங்கங்களின் போராட்டம், பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும்வரை ஓயக்கூடாது என்று வலியுறுத்திய அவர், அக்டோபர் - நவம்பர் மாதம்வரை கூட போராட்டத்தைத் தொடர விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விவசாயிகளின் போராட்டத்தை பலவீனப்படுத்த அரசு மேற்கொள்ளும் உத்திகள் ஈடேறாது என்றும் அது அரசுக்கே பின்விளைவாக மாறும் என்றும் ராகேஷ் திகெய்த் எச்சரித்தார். எது எப்படி இருந்தாலும் தங்களின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் இந்த போராட்டம் ஓயாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: