You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயிகள் போராட்டம்: செங்கோட்டையில் பறக்கவிடப்பட்டது காலிஸ்தான் கொடியா?
விவசாயிகளால் அறிவிக்கப்பட்ட டெல்லியை நோக்கி படையெடுக்கும் டிராக்டர் பேரணியில் இன்று பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ள நிலையில், டெல்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் காலிஸ்தான் கொடியை ஏற்றினர் என சமூக ஊடகங்களில் பலர் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.
டெல்லிக்கு வெளியே பல்வேறு இடங்களிலிருந்து புறப்பட்ட டிராக்டர் பேரணி டெல்லிக்குள் நுழைய முற்பட்டபோது பல இடங்களில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் சில இடங்களில் கைகலப்பு போன்ற சம்பவங்களும் நடைபெற்றன. பல இடங்களில் போராட்டக்காரர்களை தடுக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டை பயன்படுத்தினர்.
இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணியளவில் போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர் டெல்லி செங்கோட்டை பகுதியை அடைந்தனர். அங்கு இருகொடிகளை ஏற்றினர். சிலர் செங்கோட்டையின் சுவர்களின் மீதும் ஏறமுற்பட்டனர். தற்போது அந்த கொடிகள் குறித்துதான் சமூக ஊடகங்களில் பேசி வருகின்றனர். ஆம், ஒரு தரப்பினர் டெல்லி செங்கோட்டையில் உள்ள தேசியக் கொடியை அகற்றி, போராட்டக்காரர்கள் அவர்களின் கொடியை ஏற்றினர் என்றும் சிலர் அவர்கள் ஏற்றியது `காலிஸ்தான்` கொடி என்றும் கூறி வருகின்றனர்.
மற்றொரு தரப்பினரோ, ஏற்றப்பட இரு கொடிகளில் ஒன்று விவசாய சங்கத்தின் கொடி என்றும் மற்றொன்று சீக்கிய மத கொடி என்றும் சமூக வலைதளங்களில் விளக்கம் அளித்து வருகின்றனர்.
"டெல்லி செங்கோட்டையிலுள்ள சிறிய கொடி கம்பம் ஒன்றில் போராட்டக்காரர்களால் ஏற்றப்பட்ட கொடியில் ஒன்று, சீக்கிய மதத்தின் கொடியாகும். இது அனைத்து குருத்வாராக்களிலும் காணப்படும். மற்றொன்று விவசாய சங்கத்தினரின் கொடி. ஆனால், அது எந்த குறிப்பிட்ட சங்கத்தினரின் கொடி என்று இதுவரை உறுதி செய்ய முடியவில்லை," என பிபிசி பஞ்சாபி சேவையின் செய்தியாளர் குஷால் லாலி தெரிவித்துள்ளார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் பலர் தங்கள் கைகளில் மூவர்ண கொடியை ஏந்தி வந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஆல்ட் நியூஸ் செய்தி தளத்திலும் இந்த செய்தி குறித்து உண்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் சீக்கிய மதத்தை குறிக்கும் கொடி, காலிஸ்தான் கொடி என்று தவறாக குறிப்பிடப்பட்டு வருவதாகவும் அது குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு கூற்றான தேசிய கொடியை அகற்றியது குறித்து பார்த்தோமானால், சமூக வலைதளங்களில் வலம் வரும் காணொளிகளில் தேசிய கொடி அதே இடத்தில் பறப்பதையும், செங்கோட்டைக்கு எதிரில் உள்ள காலி கம்பத்தில் போராட்டக்காரர் ஒருவர் கொடியேற்றுவதையும் நம்மால் காண முடிகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்