பட்ஜெட் 2021: "இந்த பட்ஜெட் பொருளாதாரத்தை மீட்காது": ஜோதி சிவஞானம்

திங்கட்கிழமையன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் தலைவர் ஜோதி சிவஞானம், பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். அதிலிருந்து:

கே. 2020 - 21ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை குறித்து ஒட்டுமொத்தமாக உங்களுடைய பார்வை என்ன?

ப. பொதுவாக நம்முடைய அரசு அளிக்கும் புள்ளிவிவரங்கள் குறித்த நம்பகத்தன்மை இல்லாமல் இருந்தது. பொருளாதாரம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது, வேலை வாய்ப்பின்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதெல்லாம் குறித்து சரியான புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டுமெனக் கோரப்பட்டு வந்தது. இந்த முறை அதைச் சரியாக செய்திருக்கிறார்கள். நம்முடைய பொருளாதாரத்தின் நிலையை ஒரே ஒரு எண் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம். நம்முடைய நிதிப் பற்றாக்குறை எவ்வளவு என்பதுதான் அது. அதாவது, இந்த ஆண்டு அரசு தன்னுடைய செலவை ஈடுகட்ட வருவாய்க்கு மேல் எவ்வளவு கடன் வாங்குகிறார்கள் என்பதுதான் இந்த பற்றாக்குறை. இது இந்த ஆண்டு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதம் என அறிவித்திருக்கிறார்கள். Fiscal responsibility and budget Management actன் படி, இந்தப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தைத் தாண்டக்கூடாது.

ஏனென்றால் ஒரு அரசு தன் விருப்பத்திற்குக் கடன்வாங்கி செலவழித்துவிட்டால், அடுத்துவரும் அரசுகள் திணற வேண்டியிருக்கும் என்பதால், இந்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இப்போது பற்றாக்குறை 9.5 சதவீதமாக இருக்கிறது.

இதற்கு முக்கியமான காரணம், கோவிட் தாக்கத்திற்கு முன்பிருந்தே வரி வருவாய் தொடர்ந்து சரிந்துவந்தது. 30 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடப்பட்டது. 24 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வரும் எனச் சொன்னார்கள். ஆனால், 15.5 லட்சம் கோடி ரூபாய்தான் வருவாய் வந்தது. அடுத்ததாக, 30 லட்சம் கோடி ரூபாய் என்றிருந்த செலவு 34 லட்சம் கோடி ரூபாயாகத் திருத்தப்பட்டது. ஆகவே, நடப்பு ஆண்டுக்கு (2019- 20) 18.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கவிருக்கிறார்கள்.

இதற்கு முக்கியமான காரணம், ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் வர வேண்டிய வரி வருவாய் வரவில்லை. நேரடி வரி வருவாயில் மட்டும் நான்கரை லட்சம் கோடி ரூபாய் வரவில்லை. இந்த காலகட்டத்தில்தான் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வருவாய், சொத்து மதிப்பு, லாபம் ஆகியவை அதிகரித்திருக்கிறது. ஆனால், அரசுக்கு வரி வருவாய் குறைந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அறிவிக்கப்பட்டது. வரி சதவீதம் 32லிருந்து 22ஆக குறைக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 1.45 லட்சம் கோடி என்றார்கள். பிறகு இது 1.55 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. முதலில் இந்தச் சலுகை அந்த ஆண்டுக்கு மட்டும் என்றுதான் கருதப்பட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துண்டு விழுந்தது.

நம்முடைய பொருளாதாரம் ஏற்கனவே வீழ்ச்சியில் இருக்கிறது. இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.7 என என்எஸ்ஓ கணித்திருக்கிறது. ஆனால், மற்ற அமைப்புகள் மைனஸ் 10 சதவீதம் என்று சொல்கிறார்கள். நம் வாழ்நாளில் இவ்வளவு வீழ்ச்சியை நாம் சந்தித்ததில்லை. ஆனால், அதே நேரம் விலைவாசி உயர்ந்துவருகிறது. ரிசர்வ் வங்கி பல முறை வட்டி விகிதத்தைக் குறைத்தும், அது கடனாக மக்களிடம் சென்று சேரவில்லை. ஆகவே விலைவாசி உயர்ந்திருக்கிறது. இப்போது அரசாங்கம் 15 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவதால், விலைவாசி மேலும் உயரும். பொருளாதாரம் மீளாது. அதற்கு அரசு செலவுசெய்ய வேண்டும். ஆனால், செலவுசெய்ய வாய்ப்பே இல்லை.

இந்த பட்ஜெட் குறித்து ஏதேதோ சொன்னார்கள். ஒன்றும் இல்லை. இதுபோலத்தான் ஊக்க நடவடிக்கைகள் பற்றிப் பேசினார்கள். 30 லட்சம் கோடி ரூபாய் என்றார்கள். ஏதும் இல்லை என்று ஆகிவிட்டது. கல்வி, சுகாதாரத்திற்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. பட்டினி, வறுமை, வேலை இழப்பு அதிகமாகியிருக்கிறது. வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் ஏதும் இல்லை. இது பெரிய ஏமாற்றம்.

கே. கடந்த ஆண்டு இந்தியப் பெருளாதாரம் சந்தித்த பிரச்சனைகளுக்கு இந்த பட்ஜெட்டில் தீர்வு இருக்கிறதா?

ப. நம் பொருளாதாரம் கீழே சென்றதற்கு முக்கியமான காரணம், தேவை குறைந்ததுதான். அதாவது சாதாரண மக்களின் செலவு வெகுவாகக் குறைந்தது. நிறுவனங்கள் முடக்கப்பட்டதால் அவர்கள் முதலீட்டுச் செலவு எதையும் செய்யவில்லை. ஏற்றுமதி - இறக்குமதி பாதிக்கப்பட்டது. இம்மாதிரி சூழலில் அரசாவது செலவுசெய்ய வேண்டும். அரசும் செலவுசெய்யாத நிலையில் பொருளாதாரம் கீழே சென்றது.

இந்த கோவிட் காலகட்டத்தில் பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி 48 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே, இந்த அரசு பதவியேற்றதிலிருந்து எரிபொருள் மீதான வரி 250 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. டீசலுக்கு மட்டும் 1,000 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

கே. நீங்கள் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரி குறித்து குறிப்பிட்டீர்கள். இந்த நிதிநிலை அறிக்கையில், பெட்ரோல் மீதும் டீசல் மீதும் சிறப்பு வரி - செஸ் - விதிக்கப்பட்டிருக்கிறது.

ப. இது மிகவும் தவறு. இப்படி மறைமுக வரியை அதிகரித்துக்கொண்டே செல்லக்கூடாது. இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கையும் அவர்களிடம் குவியும் சொத்துகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஆகவே, அவர்களுக்கு wealth tax விதிக்கலாம். தவிர, கார்ப்பரேட் முதலீடுகள் சரிந்துகொண்டே வருகின்றன. அவர்கள் முதலீடுகளைச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் வரிச்சலுகை அளிக்கப்பட்டது. அப்படி முதலீடுகள் ஏதும் நடக்காத நிலையில், இந்த வரிச்சலுகைகள் எதற்காக? நிதிநிலை அறிக்கையை அளித்த பிறகு, ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு சலுகையை அறிவிக்கிறார்கள். இந்த ஒன்றரை லட்சம் கோடி ரூபாயும் சேர்ந்துதான் நம்முடைய கடன் அதிகரிக்கிறது. அந்த வரிச் சலுகைகளை திரும்பப்பெற்றிருக்கலாம்.

மேலும், 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு 5 சதவீதம் சிறப்பு வரி விதித்திருக்கலாம். ஆனால், அப்படி ஏதும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, மறைமுக வரியை அதிகரிக்கிறார்கள். பெட்ரோலின் அடிப்படை விலை 30 ரூபாய்தான். நாம் 100 ரூபாய்க்கு வாங்குகிறோம். இது உலகத்தில் எங்குமே இல்லாத நிலை.

இந்தக் கோவிட் தாக்குதலால் 40 சதவீதம் பேர் வறுமையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பொருளாதார அடுக்கின் கீழ்தட்டில் உள்ள 40 கோடிப் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். இவர்களுக்கு நேரடியாக ஏதாவது செய்ய வேண்டாமா? அப்படி எதுவுமே இல்லை.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றவுடன் 100 நாள் வேலை திட்டத்தை நாடாளுமன்றத்தில் எள்ளி நகையாடினார். "இந்தத் திட்டத்தை நான் நிறுத்தமாட்டேன். காங்கிரஸின் மிகப் பெரிய தோல்வியின் சின்னமாக இதைக் காண்பிப்பதற்காக வைத்திருப்பேன்" என்று கேலி செய்தார். இன்றைக்கு அந்தத் திட்டம்தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியிருக்கிறது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து திரும்பிச் சென்றவர்கள் இப்போது 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், பல மாநிலங்களில் 100 நாட்கள் வேலை அளிக்காமல் 45 நாட்கள் வேலைதான் தருகிறார்கள். கீதா கோபிநாத்கூட இதனைப் புகழ்ந்திருக்கிறார். அந்தத் திட்டத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கியிருக்கலாமே... உணவு மானியத்தை அதிகரித்திருக்கலாமே..

கே. கடந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டபோது 'V' வடிவில் பொருளாதாரம் மீளும் என்றார்கள். அது நடக்கும் சாத்தியம் தென்படுகிறதா..

ப. முதல் காலாண்டில் 24 சதவீதம் பொருளாதார வீழ்ச்சி. இரண்டாவது காலாண்டில் மைனஸ் 7.5 சதவீதம் வீழ்ச்சி. மைனஸ் 24 சதவீதத்திலிருந்து மைனஸ் 7.5 என வீழ்ச்சி குறைந்திருப்பதை வைத்து, V வடிவில் இந்தியப் பொருளாதாரம் மீளும் என்கிறார்கள். பட்ஜெட்டின்போது மூன்றாவது காலாண்டின் புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்க வேண்டும். இப்போதுவரை வெளியிடவில்லை. என்ன காரணம்? நிலைமை மோசமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

இரண்டாவது காலாண்டில், கோவிட் முடக்கத்திலிருந்த கடைகள் திறக்கப்பட்டன. பண்டிகைக் காலம் வந்தது. இந்த காலாண்டில் நிலைமை என்னவென்று தெரிந்துவிடும். யாருமே செலவுசெய்யாதபோது எப்படி பொருளாதாரம் மீளும்?

கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் அதிகரித்திருக்கிறது. ஆனால், மற்ற அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வேலை இழப்பு நடந்திருக்கிறது. சம்பளம் இழந்திருக்கிறார்கள். சம்பளம் குறைந்திருக்கிறது. வேலை நேரம் அதிகரித்திருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் விற்பனை அதிகரிக்கவில்லை. மாறாக, அவர்கள் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய சம்பளம் லாபமாக மாறியிருக்கிறது.

கே. வரவிருக்கும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதம் இருக்கும் என்கிறார்கள். அது சாத்தியமா?

ப. வரவிருக்கும் காலாண்டு வளர்ச்சியைப் பார்த்தால் அது தெரியும். ஆனால், அப்படி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், உச்சியிலிருந்து கீழே விழுந்தவர்கள் எழும்போது, வளர்ச்சியைப் போலத்தான் இருக்கும். அதற்குப் பிறகு தொடர்ந்து வளர்கிறீர்களா என்பதுதான் கேள்வி. நம் பொருளாதாரம் இரண்டு ஆண்டுகள் பின்னுக்கு சென்றுவிட்டது. இந்த ஆண்டின் ஜிடிவி 225 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என கருதினோம். ஆனால், அது 195 லட்சம் கோடி ரூபாயாகத்தான் இருக்கிறது. ஆகவே நாம் பின்னோக்கிச் சென்றிருக்கிறோம். இந்த 11 சதவீத வளர்ச்சிக்குப் பிறகு, 6.8 சதவீத வளர்ச்சிதான் இருக்குமென்று சொல்லியிருக்கிறது ஐஎம்எஃப். இந்த வருட வளர்ச்சி - 10 சவீதம் என்கிறது ஐஎம்எஃப். இந்த இரண்டு எண்களை விட்டுவிட்டு, 11.5 சதவீதத்தை மட்டும் பேசுவது எப்படி?

நாம் மீண்டும் 80களில் இருந்த வளர்ச்சி விகிதத்திற்குச் செல்லவிருக்கிறோம். ஐ.மு.கூ. ஆட்சியில் இருந்ததைப் போன்ற வளர்ச்சியெல்லாம் இனி சாத்தியமே இல்லை. பதினொரு சதவீத வளர்ச்சிக்குப் பின்பாக, 6 - 5 - 4 சதவீத வளர்ச்சி என்று போனால், நாம் 70 ஆண்டுகளுக்குப் பின்னால் செல்கிறோம்.

கே. மத்திய அரசு செயல்படுத்திவந்த நேரடித் திட்டங்களின் நிலை (Centrally sponsered schemes) என்ன?

ப. திட்டக் குழு தேவையில்லை என்று சொல்லி இவர்கள் அதை மூடினார்கள். திட்டக் குழு இருந்தபோது முதல்வர்கள் அதில் கருத்துக்களைச் சொல்ல முடியும். கலந்தாலோசனை இருக்கும். அந்த வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. மாநில அரசுகளோடு கலந்தாலோசிக்கக்கூடிய எந்த ஒரு நிறுவன அமைப்பும் இப்போது இல்லை. ஆனால், மத்திய அரசே செயல்படுத்தும் திட்டங்களை அப்படியே வைத்திருந்தார்கள்.

மூன்று - நான்கு லட்சம் கோடி ரூபாயை அவற்றுக்காக ஒதுக்கீடு செய்வார்கள். ஆனால், இப்போது அது முடியவில்லை. 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்றவையும் இதில் வருவதுதான் சிக்கல். இதில் மாநிலங்கள் 40 சதவீதத் தொகையைத் தர வேண்டும். முதலில் மாநிலங்கள் இந்தத் திட்டத்திற்கு செலவழிப்பது நின்றது. இப்போது மத்திய அரசும் கொடுப்பதில்லை. இப்படி இருதரப்பிலும் நிதி இல்லாமல், இம்மாதிரித் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. தவிர, உணவு மானியம் கடந்த ஆண்டு 1.45 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு குறைந்திருக்கிறது. ஆகவே, இனி மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை நிறுத்திவிடலாம்.

கே. வழக்கமாக உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து பெரிதாக பேசப்படும். இந்த முறை அந்த ஒதுக்கீடு எப்படியிருக்கிறது?

ப. 2019ல் செங்கோட்டையிலிருந்து பிரதமர் பேசினார். 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்காக 100 லட்சம் கோடி ரூபாயை அடிப்படைக் கட்டுமானத் திட்டங்களில் முதலீடு செய்வோம் என்றார்கள். அதில் அரசின் பங்கு என்ன, தனியாரின் பங்கு என்ன என்பதெல்லாம் குறித்து நிதியமைச்சர் விளக்கினார். தவிர, இந்தத் திட்டத்திற்கான முதலீடு 11 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து 111 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றார் நிதியமைச்சர்.

ஆனால், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 4.12 லட்சம் கோடி ரூபாயைத்தான் ஒதுக்கீடு செய்தார்கள். அதில் செலவுசெய்தது 2.1 லட்சம் கோடி ரூபாய் மட்டும்தான். வரும் ஆண்டில் 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்கிறார்கள். 111 லட்சம் கோடி ரூபாய் எங்கே... 5 லட்சம் கோடி ரூபாய் எங்கே...?

பல அறிவிப்புகளை "அடுத்த ஐந்தாண்டுகளில்.. அடுத்த ஐந்தாண்டுகளில்" என்கிறார்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் இவர்களே நீடிப்பார்கள் என்பது என்ன உறுதி? இவர்கள் ஐந்தாண்டுகளுக்கு பட்ஜெட் போட முடியாது.

கே. பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பான இலக்குகள் கடந்த ஆண்டு எட்டப்பட்டதா? புதிதாக என்ன சொல்லியிருக்கிறார்கள்?

ப. அது ஒரு பேரழிவு என்றுதான் சொல்ல முடியும். பொதுத் துறை நிறுவனங்களை விற்பதன் மூலம் 2.15 லட்சம் கோடி ரூபாயை திரட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. 15 ஆயிரம் கோடி ரூபாய்தான் திரட்ட முடிந்தது. காரணம், அந்த நிறுவனங்களை வாங்க யாரும் தயாரில்லை. ஏர் இந்தியாவை விற்கத் திட்டமிட்டார்கள். ஆனால், அது நடக்கவில்லை. இந்த ஆண்டு அந்த இலக்கை 1.76 லட்சம் கோடி ரூபாயாக குறைத்திருக்கிறார்கள். பொதுப் பங்கு விற்பனை இலக்குக் குறைக்கப்படுவது இதுதான் முதல் முறை. திரும்பவும் எல்ஐசியின் பங்குகளை விற்போம் என்கிறார்கள்.

கடந்த ஆண்டு எச்பிசிஎல்லை விற்க முடிவுசெய்தார்கள். அதை யாரும் வாங்கவில்லையென்றவுடன் ஓஎன்ஜிசியை வலியுறுத்தி அதனை வாங்கச் செய்தார்கள். ஒரு அரசு நிறுவனம் இன்னொரு அரசு நிறுவனத்தை வாங்குவது எப்படி பொதுப் பங்குகளை விற்பதாகும்? இதனால், ஓஎன்ஜிசியின் பங்கு விலை குறைந்தது. இப்படியாக, அரசு நிறுவனங்களை யாரும் வாங்க முன்வருவதில்லை.

கே. ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு சரியாக இருக்கிறதா?

ப. இதிலும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு என்றுதான் சொல்கிறார்கள். முதலீட்டுச் செலவுகளைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு 4.12 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2.12 லட்சம் கோடி ரூபாய்தான் செலவழிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் கோடி ரூபாய் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு லட்சம் கோடிதான் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில்தான் ரயில்வேயும் வரும். ஆகவே, வெறும் அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை.

கே. இந்த பட்ஜெட்டின் விளைவு என்னவாக இருக்கும்?

ப. நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வந்தது. கோவிட் அதனை இன்னும் அதள பாதாளத்தில் தள்ளியது. கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்து, வருமானமிழந்து பாதிக்கப்பட்டார்கள். வளர்ச்சி விகிதம் மைனஸ் 10ஆக உள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது. இவைதான் நம் பிரச்சனைகள். இவற்றைச் சந்திக்க நம் பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை. இவை அதிகமாகத்தான் வாய்ப்பு உள்ளது. 15 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, வட்டி மட்டும் 8 லட்சம் கோடி ரூபாய் கட்டப்போகிறோம். இதைக் கற்பனையாவது செய்ய முடிகிறதா? இந்தச் சூழல் எப்படி பொருளாதாரத்தை மேம்படுத்தும்? ஒரே நல்ல விஷயம் கோவிட் தடுப்பூசிக்கு 32 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுதான். ஆனால், யாருக்கெல்லாம் அது கிடைக்கும் என்பது தெளிவாக்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: