You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பட்ஜெட் 2021: அரசு நிறுவன பங்குகள் விற்பனை அறிவிப்பால் மூழ்கிய மோதி அரசு - சமூக ஊடகங்கள்
இந்திய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் இந்த நிதியாண்டில் அரசு நிறுவனங்களில் பங்கு விற்பனையின் இலக்கு ரூ .1.75 லட்சம் கோடி என்று கூறினார்.
2020-21 நிதியாண்டில் அரசு தனது பங்குகளை விற்று 2.1 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் இலக்கை கொண்டிருந்தது. ஆனால் அதை பூர்த்தி செய்ய முடியவில்லை.
கடந்த ஆண்டு பெரிய அளவில் பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது என்றும் எல்.ஐ.சியின் பங்குகளை விற்பனை செய்வது பற்றிய பேச்சும் இதில் அடங்கும் என்றும் கூறிய அமைச்சர், இந்த திட்டத்தை இந்த ஆண்டு முடிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
2019-20 நிதியாண்டில் ரூ. 1.05 லட்சம் கோடி மற்றும் 2018-19 நிதியாண்டில் ரூ. 80 ஆயிரம் கோடி மதிப்பிலான அரசு பங்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கை அடைய இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம் உட்பட பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை இப்போது அரசு விற்கப்போகிறது.
பட்ஜெட்டில் வெளிநாட்டு முதலீடு மற்றும் பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனைக்கு முக்கியத்துவம்
ஐடிபிஐ வங்கி, பிபிசிஎல், இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன், நீலாஞ்சல் இஸ்பத் நிகாம் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்ட அரசு விரும்புகிறது.
நாடாளுமன்றத்தில் தனது பட்ஜெட் உரையில் பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை பற்றி நிதியமைச்சர் பேசும்போது, மக்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தினர்.
அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார ஆய்வாளர்கள் முதல் பொது மக்கள் வரை அனைவரும் இப்போது பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல சமூக ஊடக தளங்களில் பட்ஜெட்டைப் பற்றி விவாதித்து வருகின்றனர்.
ட்விட்டரில் மொத்தம் 22 ட்ரெண்டுகள், பட்ஜெட்டுடன் தொடர்புடையவை. மேலும் கூகுள் ட்ரெண்டுகளிலும் பட்ஜெட்டே ஆதிக்கம் செலுத்தியது.
இந்த நேரத்தில், பட்ஜெட் தொடர்பாக மிகவும் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் முக்கியமானது பெரிய அளவிலான பங்கு விற்பனைக்கான அரசின் அறிவிப்பாகும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை 49% இல் இருந்து 74% ஆக உயர்த்த யோசனை கூறப்பட்டுள்ளது என்று கூறினார்.
இது தவிர, ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி)பங்குகளை பங்குச் சந்தையில் இறக்கப்போவதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார்.
"2021-22 ஆம் ஆண்டில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஐபிஓவைக் கொண்டு வருவோம், இதற்காக இந்த அமர்வில் தேவையான திருத்தங்கள் செய்யப்படுகின்றன" என்று அவர் கூறினார்.
இது மட்டுமல்லாமல், இந்த வரவுசெலவுத் திட்டத்தில் மாநில அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையும் அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் பங்குவிற்பனை மேலும் விரிவடையும். இந்த திசையில் செயல்படுத்தப்பட வேண்டிய கொள்கை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள் விற்கப்படும்
நீண்ட காலமாக நஷ்ட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவது குறித்து நிர்மலா சீதாராமன் நீண்ட காலமாக பேசிவருகிறார்.
பிபிசிஎல் (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்), ஏர் இந்தியா, ஐடிபிஐ, எஸ்சிஐ (ஷிப்பிங் கார்பரேஷன் ஆஃப் இண்டியா), சிசிஐ (இந்திய காட்டன் கார்ப்பரேஷன்), பிஇஎம்எல் மற்றும் பவன் ஹன்ஸ் ஆகியவற்றின் தனியார்மயமாக்கல் இதில் அடங்கும்.
வருவாயை அதிகரிக்க அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு அரசுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்தும் பேசப்பட்டது. இந்த நிறுவனங்களின் பங்கு விற்பனை செயல்முறை 2022 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
"பயனற்ற சொத்துக்கள் தற்சார்பு இந்தியாவை உருவாக்க பங்களிக்காது. 2021-22 ஆம் ஆண்டிற்குள்ளாக இந்த பங்கு விற்பனை மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று நான் மதிப்பிடுகிறேன்" என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
நஷ்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களின் பங்கு விற்பனையானது, அவற்றை நஷ்டத்திலிருந்து மீட்க உதவுவதோடு மட்டுமல்லாமல் அவற்றின் வருவாயையும் அதிகரிக்க உதவும் என்று மத்திய அரசு கூறுகிறது.
அரசு மீதான விமர்சனம்
இருப்பினும் அரசு நிறுவனங்களை தனியாரிடம் அளிப்பதான அறிவிப்பிற்கு மாறுபட்ட கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஆனால் இது நடக்கும் என்று எல்லோரும் நம்பவில்லை.
பங்கு விற்பனை தொடர்பான இந்த முடிவு பற்றி எதிர்கட்சிகளும் அரசை விமர்சிக்கின்றன. ட்விட்டரில், #LICIPO மற்றும் PSU போன்றவை டாப் ட்ரெண்டிங்குகளில் அடங்கும்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரெய்ன், "இந்தியாவின் முதல் paperless (ஆன்லைன்) பட்ஜெட் 100% 'நெடுநோக்கு பார்வை இல்லாதது' என்று ட்வீட் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டின் கருப்பொருள் 'SALE India'. ரயில்வே: விற்கப்பட்டது, விமான நிலையம்: விற்கப்பட்டது, துறைமுகங்கள் விற்கப்பட்டன, காப்பீடு: விற்கப்பட்டது, 23 அரசு நிறுவனங்கள்: விற்கப்பட்டன. "என்று அவர் கூறுகிறார்.
"பொது மக்களும் விவசாயிகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆகியுள்ளனர். நடுத்தர வர்க்கத்திற்கு எதுவும் இல்லை, ஏழைகள் மேலும் ஏழைகளாகிவிட்டனர்" என்று அவர் கூறுகிறார்.
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பீயூஷ் கோயல் பட்ஜெட்டில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதை வரவேற்றார். ஆனால் "எல்.ஐ.சி மற்றும் ஜி.ஐ.சி போன்ற லாபகரமான நிறுவனங்களை விற்கும் முடிவு தேசிய நலனுக்கு எதிரானது" என்று காங்கிரஸ் தலைவர் ஆனந்த் ஷர்மா ட்வீட் செய்துள்ளார்.
வாட்ஸ்அப் யுனிவர்ஸிடி என்ற ட்விட்டர் பதவில், "பொதுத்துறை நிறுவனம் எதுவும் விற்கப்படாத நாள், அந்த நாள் பயனற்றது - நிர்மலா சீதாராமன்"என்று ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை தொடர்பான அறிவிப்பு குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான மீம்ஸ்கள் பகிரப்படுகின்றன.
"இது அரசா அல்லது ஓ.எல்.எக்ஸா, விற்பனை செய்ய?"என்று பத்திரிகையாளர் ராகுல் கோட்டியல் வினவுகிறார்.
ஏறக்குறைய ஒவ்வொரு பட்ஜெட்டிலும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்கப்படும் என்ற அறிவிப்பை அரசு கட்டாயமாக வெளியிடுகிறது , ஆனால் அவற்றை விற்பனை செய்வதில் அரசு வெற்றிபெறும் என்பது கட்டாயமில்லை என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கான சமீபத்திய உதாரணம் ஏர் இந்தியா ஆகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: