You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விளாடிமிர் புதினுக்கு எதிராக அலெக்ஸே நவால்னி ஆதரவாளர்கள் ரஷ்யாவில் போராட்டம்: பல்லாயிரம் பேர் கைது
ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னியை விடுதலை செய்யக்கோரி அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மைனஸ் 40 டிகிரி அளவுக்கு மிகவும் குளிர் நிறைந்த இடங்களில் கூட ரஷ்ய அரசுக்கு எதிராக நவால்னியின் ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர்.
இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று ஓ.வி.டி - இன்ஃபோ மானிட்டரிங் எனும் செய்திகள் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 4,000 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அலெக்ஸே நவால்னி - கைதும் பின்னணியும்
கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அலெக்ஸே நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது. சைபீரியாவின் டாம்ஸ்கில் இருந்து மாஸ்கோவுக்குச் செல்லும் விமான பயணத்தின்போது நவால்னி அப்படியே மயங்கி விழுந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, கோமா நிலையில் இருந்த நவால்னி அவசர சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார்.
தமக்கு நச்சு கொடுக்கப்பட்டதற்கு புதின்தான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார். அதை ரஷ்ய அரசு கடுமையாக மறுத்தது.
நவால்னிக்கு 'நோவிசோக்' என்கிற, ரஷ்யா பனிப் போர் காலத்தில் உருவாக்கிய விஷம் கொடுக்கப்பட்டதாக ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் கூறினர். முழுமையாக குணமடைந்த பின், தான் ரஷ்யா செல்ல வேண்டுமென நவால்னி கூறி வந்தார்.
இந்த நிலையில், நவால்னி ரஷ்யா சென்றால் தரையிறங்கிய உடன் மீண்டும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுச் செல்லப்படலாம் என்ற எச்சரிக்கைக்கு பிறகும், ஜனவரி 17 அன்று பொபெடா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் மூலம் ரஷ்யாவுக்கு புறப்பட்டார்.
அலெக்ஸே நவால்னி ரஷ்யாவில் நுழைந்த உடனேயே, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அலெக்ஸே நவால்னி மீது கையாடல் வழக்கொன்று பதியப்பட்டு அதில் அவருக்கு ஏற்கனவே தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது. இந்த வழக்கு அரசியல் காரணங்களால் தன் மீது தொடுக்கப்பட்டதாக நவால்னி கூறுகிறார். இந்த தண்டனை காலத்தில் நவால்னி தொடர்ந்து விதிமீறல் செய்ததால் கடந்த டிசம்பர் 29 முதல் தேடப்பட்டு வருகிறார் என ரஷ்யாவின் சிறைத்துறை, கடந்த ஜனவரி 17 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இது மட்டுமின்றி ரஷ்ய அரசுத் தரப்பு, நவால்னி பல்வேறு அமைப்புகளுக்குச் செய்த பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஒரு குற்றவியல் வழக்கையும் பதிந்திருக்கிறது. தான் ரஷ்யாவுக்கு வருவதைத் தடுக்க, புதின் வழக்குகளை தனக்கு எதிராக ஜோடிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார் நவால்னி.
ஞாயிறன்று நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நவால்னியின் மனைவி யூலியாவும் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என நவால்னியின் குழு தெரிவித்துள்ளனர். முன்னதாக தான் பேரணிக்கு செல்வதாக தனது சமூக ஊடக பக்கத்தில் புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்திருந்தார்.
10,000 கோடி ரூபாய் சொகுசு மாளிகை யாருடையது? - சர்ச்சையில் விளாடிமிர் புதின்
இதனிடையே கருங்கடலில் உள்ள மாளிகையான 'பிளாக் சீ மேன்ஷன்' ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடையது அல்ல, அந்த மாளிகை தன்னுடையது என புதினுக்கு நெருக்கமான ரஷ்யப் பணக்காரர் ஆர்காடி ரோட்டன்பெர்க் கூறியுள்ளார்.
இந்த பிரம்மாண்ட மாளிகை தொடர்பாக, புதினை கடுமையாக விமர்சிக்கும் அலெக்ஸே நவால்னி வெளியிட்ட காணொளி ரஷ்யா முழுமைக்கும் வைரலானது. அது 10 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது.
இந்த சொகுசு மாளிகை தன்னுடையது அல்ல என கடந்த வாரம் கூறியிருந்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.
கருங்கடலின் கரையில் அமைந்திருக்கும் இந்த சர்ச்சைக்குரிய ஆடம்பர மாளிகை தன்னுடையதுதான் என கடந்த 2021 ஜனவரி 30 அன்று பொது வெளியில் கூறினார் புதினுடைய பணக்கார நண்பர் ஆர்காடி ரோட்டன்பெர்க்.
"சில ஆண்டுகளுக்கு முன் நான் இந்த மாளிகையின் உரிமையாளர் ஆகிவிட்டேன்" என ஆர்காடி ரோட்டன்பெர்க் தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த மாளிகையின் கட்டுமானம் நிறைவடையும் எனவும், இது அடுக்குமாடி விடுதியாகலாம் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார் ஆர்காடி ரோட்டன்பெர்க்.
ஏன் 'பிளாக் சீ மேன்ஷன் செய்திகளில் அடிபடுகிறது?
சமீபத்தில் ரஷ்ய அரசால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவரான அலெக்ஸே நவால்னியின் அணி, இந்த மாளிகை குறித்த ஆவணப் படத்தை வெளியிட்டனர். அதிலிருந்து இந்த மாளிகை குறித்த சர்ச்சைகள் ரஷ்யாவில் அதிகரித்து வருகின்றன.
அலெக்ஸே நவால்னியின் தரப்பில் நடத்திய விசாரணையில் இந்த மாளிகையைக் கட்ட 137 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 10,000 கோடி ரூபாய்) செலவழிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
கருங்கடலின் கரையில் விளாடிமிர் புதினின் சொந்த பயன்பாட்டுக்காக, ஒரு பிரம்மாண்டமான மாளிகை கட்டப்படுவதாகவும், அதற்கு அரசின் நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுவதாக கடந்த 2012 மே மாதத்தில் டிம் வெல் என்கிற பிபிசி செய்தியாளர் ஒரு செய்தியைப் பதிவு செய்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்த ஊழல் குற்றச்சாட்டு, நவால்னிக்கு ஆதரவாக பரவி வருகிறது. கடந்த வாரம், நவால்னியை விடுவிக்கக் கோரி மக்கள் திரண்டதும், அதில் 4,000-த்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நவால்னியை தடுப்புக் காவலில் வைத்திருப்பது மற்றும் அவருக்கு ஆதரவாக நடந்த மக்கள் போராட்டத்தை ரஷ்ய காவல் துறை கையாண்ட விதம் இரண்டுமே சர்வதேச அளவில் பெரும் விமர்சனங்களைப் பெற்றது.
யார் இந்த ஆர்காடி ரோட்டன்பெர்க்?
ஆர்காடி ரோட்டன்பெர்க் ஒரு பிரபலமான கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர். பாலங்கள், எரிவாயுக் குழாய்களைப் பதிப்பது போன்றவைகளை இந்நிறுவனம் மேற்கொள்கிறது. இவர் புதினின் பாலிய நண்பர் என்பதும், புதினோடு ஜூடோ விளையாடுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்காடி ரோட்டன்பெர்க் மற்றும் அவரது சகோதரர் குறித்த செய்திகள் கடந்த ஆண்டு வெளியான ஃபின்சென் பைல்ஸ் ஆவணங்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய வங்கிகள் மூலம் 150 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடான பணிப்பரிவர்த்தனை நிகழ்ந்துள்ளதை வெளிப்படுத்திய ஃபின்சென் பைல்ஸ் ஆவணங்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஆர்காடி ரோட்டன்பெர்க் அமெரிக்க அரசின் தடையின் கீழ் இருக்கிறார் என்பதும் நினைவுகூரத்தக்கது. அவரால் அமெரிக்காவுக்கு பயணிக்கவோ, தொழில் முதலீடு செய்யவோ முடியாது.
பிற செய்திகள்:
- பெங்களூரு மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் - அதிமுக கொடியால் சர்ச்சை
- "வெளிநாட்டவர்களுக்கும் இனி குடியுரிமை" - ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பால் யாருக்கு பயன்?
- பாக்ஸிங் க்ளவுஸ் வாங்க காசில்லை; முதல் போட்டியிலேயே தங்கம் - மஞ்சு ராணியின் கதை
- தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா - ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: