You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஜாகிர் நாயக்கை மலேசியா வெளியேற்றி இருந்தாலே இந்தியா மகிழ்ந்திருக்கும்': முன்னாள் அட்டர்னி ஜெனரல் டோமி தாமஸ்
மதபோதகர் ஜாகிர் நாயக் விவகாரத்தில் அவரை நாடு கடத்தாவிட்டாலும், மலேசியாவில் இருந்து வெளியேற்றி இருந்தாலே இந்திய அரசு மனநிறைவு அடைந்திருக்கும் என்று இந்தியத் தரப்பில் கூறப்பட்டதாக மலேசியாவின் முன்னாள் சட்டத்துறை தலைவர் (அட்டர்னி ஜெனரல்) டோமி தாமஸ் தாம் எழுதிய புத்தகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜாகிர் நாயக்கை தங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்தியத் தூதர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கோரிக்கைப்படி ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் விஷயம் குறித்து முன்னாள் பிரதமர் மகாதீர் பதவியில் இருந்தபோது தாம் அவரிடம் பேசியதாகவும், அதற்கு, "ஜாகிர் விவகாரத்தை என்னிடம் விட்டுவிடுங்கள்," என மகாதீர் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும் டோமி தாமஸ் தெரிவித்துள்ளார்.
"My Story: Justice in the Wilderness", என்ற தலைப்பிலான புத்தகத்தில் அவர் மேலும் பகிர்ந்து கொண்டுள்ள பல்வேறு தகவல்கள் மலேசிய அரசியல் மற்றும் சமூக தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற யோசனையை ஏற்க மகாதீர் மறுத்துவிட்டதாக டோமி தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகிர் நாயக் தற்போது மலேசியாவில் வசித்து வருகிறார். அவருக்கு நிரந்தர வசிப்பிட தகுதி வழங்கப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டுமென மலேசிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது இந்தியா. ஆனால், மலேசிய அரசு இதற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து டோமி தாமஸ் பரபரப்புத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
"மலேசியாவுக்கான இந்திய தூதருடன் கடந்த 2018ஆம் ஆண்டு பேசியபோது, ஜாகிர் நாயக்கை நாடு கடத்தாவிட்டாலும் பரவாயில்லை. மலேசியாவில் இருந்து வெளியேற்றினாலே போதும், இந்திய அரசு மகிழ்ச்சி அடையும் என்று என்னிடம் அவர் தெரிவித்தார். நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் ஜாகிர் நாயக் எங்கு சென்றார் என்று மலேசியா கவலைப்படத் தேவையில்லை. எனினும் அவர் வெளியேற்றப்பட்டாலே இருதரப்பு உறவுகளில் இடறும் ஒரு முள் காணாமல் போனதாக இந்தியா மகிழ்ந்திருக்கும்.
"இது தொடர்பாக அன்றைய மலேசியக் காவல்துறை தலைவரிடமும் நான் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது ஜாகிர் நாயக் நாட்டை விட்டு வெளியேற்றறப்படுவதை காவல்துறை எதிர்க்கவில்லை என தெரிவிக்கப்பட்டது," என்று டோமி தாமஸ் தமது புத்தகத்தில் கூறியுள்ளார்.
மேலும் ஜாகிர் நாயக் குறித்து அன்றைய பிரதமர் மகாதீரிடம் தாம் பேசியதாகவும் அப்போது ஜாகிர் நாயக்கை வெளியேற்ற வேண்டும் பரிந்துரை குறித்து விவாதித்தாகவும் அவர் கூறியுள்ளார்.
"பிரதமர் மகாதீரிடம் பேசியபோதெல்லாம் ஒரே பதில்தான் கிடைத்தது. எந்தவொரு மூன்றாவது நாடும் ஜாகிர் நாயக்கை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை. இதைத்தான் பிரதமர் மகாதீர் தொடர்ந்து குறிப்பிட்டார்.
"இதையடுத்து காவல்துறை தலைவர் அப்துல் ஹமீட் படோரிடம் மேற்கொண்டு விவாதித்தேன். அப்போது பங்களாதேஷ், இரான், பாகிஸ்தான், கத்தார் மற்றும் சௌதி அரேபியா உள்ளிட்ட எந்த இஸ்லாமிய நாடும் அவரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றே என்னிடம் தெரிவிக்கப்பட்டது," என தாமஸ் தமது புத்தகத்தில் மேலும் விவரித்துள்ளார்.
நஜீப் தலைமையிலான கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் துணைப் பிதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த சாகிட் ஹிமிடிதான், மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு நிரந்தரக் வசிப்பிட உரிமையை வழங்கினார் என்றும், காவல்துறை சிறப்புப் படையின் ஆலோசனையையும் மீறி ஜாகிருக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டதாகவும் டோமி தாமஸ் கூறியுள்ளார்.
"இந்தியத் தூதர் வெளிப்படையாக இருந்தார். ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுக்கு திருப்தியளிக்கும் வகையில் தீர்வு காணப்படாவிட்டால் இந்திய, மலேசிய உறவு முழுமையாக சீரடையாது என்று தெரிவித்தார். அதேவேளையில் ஜாகிர் நாயக்கை நாடு கடத்தவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மலேசிய நீதிமன்றங்களில் அது பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் அவர் ஒப்புகொண்டார்.
"இதையடுத்து பிரதமர் மகாதீருடன் இதுகுறித்து விவரித்தேன். என்ன விலை கொடுத்தேனும் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் இதைத்தான் ஜாகிர் நாயக் விரும்புவார் என்றும் தனது விஷத்தைத் கக்க அவருக்கு ஒரு தளம் தேவைப்படுகிறது என்றும் மகாதீர் என்னிடம் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் ஜாகிர் நாயக் விவகாரத்தை இனி என்னிடம் விட்டுவிடுங்கள் என்று மகாதீர் திட்டவட்டமாகக் கூறினார். அதன்பிறகு மீண்டும் இதுகுறித்துப் பேசியபோதெல்லாம் இதே பதில்தான் கிடைத்தது.
ஜாகிர் நாயக் குறித்து தாம் கூறிய ஆலோசனையை பிரதமராக இருந்த மகாதீர் ஏன் ஏற்கவில்லை என்பது தமக்குப் புதிராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தாமஸ், அச்சமயம் ஜாகிர் நாயக்கை வெளியேற்றுவதால் மத மற்றும் இன ரீதியில் எதிர்மறை உணர்வுகள் எழுக்கூடும் என்ற கவலையில் மகாதீர் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
"சர்ச்சைக்குரிய ஒருவருக்கு மலேசியாவில் நிரந்தரமாக வசிக்கும் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. பிற மதங்கள் குறித்து வெளிப்படையாக தாக்கிப் பேசினார் என்பதுதான் ஜாகிர் மீதான முதன்மை விமர்சனம். மேலும் உள்நாட்டு அரசியலிலும் குறுக்கிட்டார். ஒரு வெளிநாட்டவராக இவ்விரு செயல்பாடுகளிலும் ஈடுபட அவருக்கு அனுமதி இல்லை," என்றும் டோமி தாமஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- பெங்களூரு மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் - அதிமுக கொடியால் சர்ச்சை
- "வெளிநாட்டவர்களுக்கும் இனி குடியுரிமை" - ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பால் யாருக்கு பயன்?
- பாக்ஸிங் க்ளவுஸ் வாங்க காசில்லை; முதல் போட்டியிலேயே தங்கம் - மஞ்சு ராணியின் கதை
- தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா - ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: