You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது ஏன்? - நிர்மலா சீதாராமன் விளக்கம்
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று 2021-2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சக அதிகாரிகளுடன் இணைந்து டெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகள் அளித்த பதில்கள் மற்றும் தகவல்களின் முக்கியமானவற்றை பிபிசி தமிழ் தொகுத்து வழங்குகிறது.
நிதிப் பற்றாக்குறை அதிகரித்தது ஏன்?
’நடப்பு நிதியாண்டுக்கான இந்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 9.5 சதவிகிதமாக இருக்கிறது. இது வேண்டுமென்றே 10 சதவீதத்தை விட குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு தரவுகள் வெளியிடப்பட்டதா?’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையான ஆட்சேபனையை தெரிவித்தார்.
எதற்கெல்லாம் நாங்கள் செலவழிக்க வேண்டுமா, அதற்கு செலவழித்தோம். அதேசமயத்தில் பற்றாக்குறையை சமாளிப்பதற்கான தெளிவான வழியையும் நாங்கள் கொடுத்துள்ளோம் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
இது குறித்து பதிலளித்த நிதியமைச்சக அதிகாரிகள், நடப்பு நிதி ஆண்டில் கொரோனா வைரஸ் முடக்கநிலை காரணமாக அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் குறைந்தது.
மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி நிலுவை தொகையை மத்திய அரசு தன் வசம் இருந்த பணத்தின் மூலம் மாநிலங்களுக்கு கொடுத்தது, முடக்க நிலைக்கு பின்பு இந்திய அரசு அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் உதவித்தொகை ஆகியவற்றின் காரணமாக இந்திய அரசுக்கான நிதி பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் அதிகரித்தது என்று தெரிவித்தனர்.
இந்திய அரசு அளிக்கும் புள்ளி விவரங்கள் அனைத்தும் மிகவும் வெளிப்படையாக இருப்பதாகவும் நிதிப்பற்றாக்குறை 9.45 சதவிகிதம் முதல் 9.5 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பட்ஜெட் 2021 - 22 முக்கிய விஷயங்கள்
"இந்த பட்ஜெட்டில் இரண்டு முக்கியமான விஷயங்களை குறிப்பிட வேண்டுமானால் சாலைகள், பாலங்கள், மின் வியோகம் துறைமுகங்கள் உள்ளிட்ட பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் செலவிட நாங்கள் முடிவு செய்தோம்.
அடுத்தது கடந்த ஆண்டு கிடைக்கப்பெற்று அனுபவங்கள் மூலம் சுகாதார மேலாண்மைக்காக சுகாதாரத்துறையில் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது," என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சுகாதாரத் துறைக்கு இந்திய அரசு செலவிடும் தொகையை இந்த பட்ஜெட்டில் 137 சதவீதம் அதிகரித்துள்ளது.
பங்கு விற்பனை இலக்கு குறைக்கப்பட்டது ஏன்?
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 2.10 லட்சம் கோடி ரூபாய் திரட்ட வேண்டும் என்று கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது.
ஆனால் இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அந்த இலக்கு 1.75 லட்சம் கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு குறைக்கப்பட்டது ஏன் என்பது குறித்தும் நிதி அமைச்சக அதிகாரிகள் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தனர்.
1.75 லட்சம் கோடி ரூபாய் என்பது எட்டக்கூடிய இலக்காக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். பங்கு விற்பனை மூலம் நிதி திரட்டுவது இந்த ஆண்டு மட்டுமல்லாமல் அடுத்த மூன்று - நான்கு ஆண்டுகளுக்கும் தொடரும். எனவே ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை இருக்காது. அதன் பின்பும் தொடர்வதற்கான திட்டம் இருக்கிறது என்று தெரிவித்தனர்.
தனியார்மயமாக்கலுக்கு அமைச்சரவை ஒப்புதல்
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் மிகக் குறைந்த பட்ச எண்ணிக்கையிலான பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே அரசால் வைத்துக் கொள்ளப்படும்.
பிற துறைகளில் இருக்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்படும்.
இதற்கு இந்திய அமைச்சரவையின் ஒப்புதல் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து இன்றைய பட்ஜெட் உரையிலும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: