You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மத்திய பட்ஜெட் 2021-22: நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு என்ன பலன்?
இந்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என, இரு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி அரசின் கொள்கைகள் விவசாயிகளுக்கு எதிரானதாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அரசு விவசாயிகளுக்கானது என தெரிவித்தார். மேலும் 2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பருப்பு வகைகள், கோதுமை, அரசி மற்றும் பிற பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு என்ன பலன்?
2013 -14 ஆம் ஆண்டில் நெல் கொள்முதலுக்காக 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. அது ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது. இந்த வருடம் அது ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். கடந்த வருடம் இதனால் 1.2 கோடி விவசாயிகள் பலனடைந்தனர். இந்த வருடம் 1.5 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
"2013-14ஆம் ஆண்டு அரசாங்கம் கோதுமையை 33 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து கொள்முதல் செய்தது. 2019ஆம் ஆண்டு அதுவே 63 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அது 75 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2020-21ஆம் ஆண்டில் இதனால் 43 லட்சம் விவசாயிகள் பலனடைந்தனர்," என தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பெரிதும் பேசுவது குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்துதான். இந்த பட்ஜெட் உரையின் போது அரசு விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என தெரிவித்த நிர்மலா சீதாராமன், உற்பத்தில் விலையிலிருந்து 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டு, கோதுமை விளைவிக்கும் விவசாயிகளுக்கு 75,100 கோடி வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்டதில் 43.36 லட்சம் கோதுமை விவசாயிகள் பலனடைந்துள்ளனர். முன்னர் அது 35.57 லட்சமாக இருந்தது என்றார்.
நிதியமைச்சர் இதுகுறித்து உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே எதிர்க் கட்சியினர் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
வேறென்னென்ன அறிவிப்புகள்
கடலோரத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழகத்தில் கடற்பாசி பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் ஐந்து பெரிய மீன்பிடி துறைமுகங்கள் அமைப்பதற்காக நிதியமைச்சர் வெளியிட்ட ஊர்களின் பட்டியலில் சென்னையும் உள்ளது.
மேலும் 63,246 கோடி ரூபாய் செலவில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் செயல்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2021-2022 உரையில் அறிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- 'ஜாகிர் நாயக்கை ஒப்படைக்க வேண்டாம் என இந்தியா மலேசியாவிடம் கூறியது' - புயலை கிளப்பும் புதிய நூல்
- மரம் நடும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விதிகள்
- புதின் அரசுக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டம்: பல்லாயிரம் பேர் கைது
- டிஆர்பி முறைகேடு: அதிர்வலைகளை ஏற்படுத்திய வாட்சாப் உரையாடல் - பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: