சகாயம் உடல் நிலை: சீரற்ற ரத்த அழுத்தம்; விடாத காய்ச்சல் - முழு விவரம்

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா தொற்று காரணமாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலை அவருக்கு ரத்த அழுத்தம் குறைவதாக வெளியான தகவல்கள் பொதுவெளியில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. எப்படி இருக்கிறார் சகாயம்?

தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்த சகாயம், விருப்ப ஓய்வு கோரி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசுக்கு விண்ணப்பத்திருந்தார். இதை ஏற்று, கடந்த ஜனவரி மாதம் அவருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. இதன்பிறகு, தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

`சகாயம் அரசியல் பேரவை' என்ற பெயரில் தமிழக தேர்தலில் 20 தொகுதிகளில் வேட்பாளர்களையும் அவர் களமிறக்கினார்.

விடாத காய்ச்சல்!

சட்டமன்ற தேர்தலுக்கு குறைவான நாட்களே இருந்ததால், 20 தொகுதிகளிலும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தேர்தல் பிரசாரம் நிறைவடைவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அவர் கடலூர், விருத்தாச்சலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இதன் பிறகு சென்னை திரும்பியவர், வேளச்சேரி, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய தொகுதிகளில் இறுதிகட்ட பிரசாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால், காய்ச்சல் காரணமாக அவரால் பிரசாரத்தை முன்னெடுக்கவில்லை. தொடர்ந்து மூன்று நாட்கள் 101, 102 டிகிரி அளவில் காய்ச்சல் அதிகரித்ததால், `கொரோனா பாதிப்பாக இருக்குமோ?' என அவர் கருதினார்.

இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக, அவரால் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கவும் முடியவில்லை. ஐந்து நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தபோது, மீண்டும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அப்போதும் பாசிட்டிவ் என வந்துள்ளது. இதன் காரணமாக ஒன்பது நாட்களைக் கடந்த பிறகும் தொடர் சிகிச்சையில் சகாயம் இருக்கிறார்.

அதிர்ச்சி கொடுத்த சர்க்கரை குறைபாடு

இதில், சகாயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. தினசரி உடற்பயிற்சி, சுவாசப் பயிற்சி, உணவு முறை போன்றவற்றில் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வருவதால் எந்தவித உடல் உபாதைகளுக்கும் ஆட்படாமல் இருந்தார் சகாயம். ஆனால், கொரோனா தொற்றுக்காக அவருக்கு நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில், அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு 360 ஆக கூடியது தெரிய வந்தது.

இதனை எதிர்பார்க்காத அவர், ` எனது உடல்நிலை நன்றாக உள்ளது. ஆனால், சர்க்கரை குறைபாடு ஏன் வந்தது எனத் தெரியவில்லை. மருத்துவமனைக்குள் வரும்போது சர்க்கரை குறைபாடு இல்லாத மனிதனாக வந்தேன். மருத்துவ சிகிச்சை முடிந்து செல்லும்போது சர்க்கரை குறைபாடு இல்லாத மனிதனாகச் செல்ல முடியுமா?' என குடும்பத்தினரிடம் வேதனையுடன் பேசியுள்ளார்.

"யாரும் வர வேண்டாம்"

தொடர்ந்து, அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையில் இருந்து உறவினர்கள் வருவதாகக் கூறியபோதும், `யாரும் வர வேண்டாம்' என உறுதிபடக் கூறிவிட்டார். நேற்று இரவு அவரது உடல்நிலையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. உடலில் ரத்த அழுத்தத்தின் அளவு குறைந்து கொண்டே வந்துள்ளது. இதனால், தனி மருத்துவக் குழு ஒன்று சகாயத்துக்கு சிகிச்சையளித்து வருகிறது.

இதனை கேள்விப்பட்டு உலக நாடுகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள், அவரது ஆதரவாளரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது பேசிய அவர்கள், `அவருக்கு உலகத்தரமான சிகிச்சை கொடுக்க வேண்டும். உடனே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். செலவுகளை நாங்கள் ஏற்கிறோம்' என கூறியுள்ளனர்.

இந்த தகவல் சகாயத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதும், `அரசு மருத்துவமனையை விட்டு நகர மாட்டேன். அரசு மருத்துவமனையின் மீது நம்பிக்கை கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை. என் உடல்நலன் குறித்து விசாரிப்பவர்களிடமும் இதையே வலியுறுத்துங்கள்' என கூறிவிட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலையை அறிய அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மூன்றாவது பரிசோதனை

`தற்போது எப்படியிருக்கிறார் சகாயம்?' என அவரது ஆதரவாளரும் சகாயம் அரசியல் பேரவையின் தலைமை பொறுப்பாளருமான பாஷாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``இன்றோ, நாளையோ மூன்றாவது முறையாக கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள இருக்கிறார்கள். அதன்பிறகே வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்பது தெரியவரும். அரசு மருத்துவமனையின் டீன் தேரணி ராஜனின் நேரடி பார்வையில் சிறப்பான சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் சிகிச்சை முறைகளால் நல்லபடியாக அவரது உடல்நிலை தேறி வருகிறது" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` திரவ உணவுகளை மட்டுமே எடுத்து வந்தவர், தற்போது இட்லி உள்பட திட ஆகாரங்களையும் சாப்பிடுகிறார். தொடக்கத்தில், தனக்கு கொரோனா இருக்காது என நம்பினார். வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்தபோது, வாகனத்தில் செல்லாமல் நடந்தே சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்காததால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாகக் கருதுகிறோம். தற்போது ரத்த அழுத்தமும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாள்களில் அவர் தனது வீட்டுக்குச் செல்வார்" என்றார் நம்பிக்கையுடன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: