You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐபேக்கின் தேர்தலுக்குப் பிறகான கணிப்பு: 10 கேள்விகள்; 5 அறிக்கைகளால் குழம்புகிறதா அறிவாலயம்?
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்த பிறகும், `தி.மு.க ஆட்சியமைக்குமா... அ.தி.மு.கவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?' என்ற விவாதங்களுக்குப் பஞ்சமில்லை. அதிலும், வாக்குப் பதிவு சதவிகிதங்களால் தி.மு.க நிர்வாகிகள் சற்று குழப்பமான மனநிலையில் இருப்பதாவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது தி.மு.கவில்?
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கூடுதல் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர். வானத்தில் ஹெலிகாப்டர் சென்றால்கூட, `வாக்குப் பதிவு இயந்திரத்தில் புரோகிராம் செய்து மாற்றிவிடுவார்களோ?' எனக் கட்சி நிர்வாகிகள் சந்தேகம் எழுப்பும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 17 நாள்களே இருப்பதால், வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் உறக்கம் இல்லாமல் வலம் வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், `இந்தமுறை ஹாட்ரிக் வெற்றியைப் பெறுவோம்' என அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக் கொண்டிருக்கிறார். அதற்கேற்ப, முதல்வரின் தேர்தல் ஆலோசனை நிபுணர், மத்திய, மாநில உளவுத்துறை ஆகியவற்றின் அறிக்கைகளை மையமாக வைத்து நம்பிக்கையோடு அமைச்சர்களிடம் பேசி வருகிறார்.
அதேநேரம், தி.மு.க தலைமையும் ஐபேக் அறிக்கை உள்பட 5 வெவ்வேறு அறிக்கைகளை மையமாக வைத்து வேட்பாளர்களுடனும் மாவட்டச் செயலாளர்களுடனும் தொடர் சந்திப்புகளை தி.மு.க தலைவர் நடத்தி வருகிறார். இந்தச் சந்திப்புகளின்போது கிடைக்கும் தரவுகளையெல்லாம் தனக்குக் கிடைத்த அறிக்கையோடு அவர் பொருத்திப் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
எங்கே அந்த 1 லட்சம் வாக்குகள்?
`வாக்குப் பதிவுக்குப் பிறகு தி.மு.க தலைமையின் மனநிலை என்ன?' என அக்கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். தனது அடையாளத்தைக் குறிப்பிட விரும்பாமல் கட்சிக்குள் நடக்கும் பல்வேறு விஷயங்களை பிபிசி தமிழிடம் பட்டியலிட்டார். "ஐபேக் நிர்வாகிகள் ஒரு பக்கம், அறிவாலயத்தில் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையிலான `வார் ரூம் மறுபக்கம்' எனத் தேர்தல் பணிகள் களைகட்டின. தொடக்கத்தில் இருந்தே தேர்தல் பணிகளை சரிவரக் கையாளவில்லை என்ற எண்ணம் நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டது. அதிலும், வாக்குப் பதிவு சதவிகிதங்களால் சற்று குழப்பமான சூழலே ஏற்பட்டுள்ளது" என்கிறார்.
தொடர்ந்து பேசியவர், "வாக்குப் பதிவு சதவிகிதத்தைப் பொறுத்தவரையில், எடப்பாடி தொகுதியில் 85.6 சதவிகித வாக்குகள் பதிவானது. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூரில் 60.52 சதவிகிதமும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் 58.41 சதவிகித வாக்குகளும் பதிவாயின. இதன்மூலம், `தி.மு.க தலைமைக்கு மக்கள் விரும்பி வந்து வாக்களித்திருப்பது உண்மையாக இருந்தால், கொளத்தூரில் வாக்கு சதவிகிதம் உயர்ந்திருக்க வேண்டும். எடப்பாடி தொகுதியில் 85 சதவிகிதம் பதிவாகியுள்ளது என்றால் அறிக்கைகள் சொல்வது உண்மைதானா?' எனத் தலைவர் குடும்பத்தில் உள்ள ஒருவர் கேள்வியெழுப்பினார். அதாவது, `தமிழகத்தில் ஸ்டாலின் அலைதான் வீசுகிறது என்றால், கொளத்தூரில் ஒரு லட்சம் பேர் ஓட்டுப் போடவே வராமல் போனதற்கு என்ன காரணம்?' என்ற கேள்விக்கு யாராலும் பதில் அளிக்க முடியவில்லை.
வடமாவட்டங்களில் என்ன நடந்தது?
இதுதவிர, வட மாவட்டங்களில் எல்லாம் 75 சதவிகிதம், 80 சதவிகிதம் என வாக்குகள் பதிவாகியுள்ளன. `அங்கு என்ன நடந்திருக்கும்... வாக்குகள் எந்தவகையில் பிரிந்திருக்கும்?' என்ற கேள்விக்கும் சிலரால் பதில் சொல்ல முடியவில்லை. இதுதவிர, வாக்குப் பதிவு நாளன்று பல தொகுதிகளில் மதியம் 3 மணிக்கு மேல் பிரச்னை ஏற்பட்டது. திருவள்ளூர், அரியலூர், கடலூர் உள்பட பல மாவட்டங்களில் பூத்துகளைக் கைப்பற்றும் வேலைகளில் ஆளும்கட்சி தீவிரம் காட்டியது. இதனை தி.மு.க நிர்வாகிகள் சரியாக எதிர்கொள்ளவில்லை என்ற வருத்தமும் தலைமைக்கு ஏற்பட்டது" என்கிறார்.
மேலும், "வாக்குப் பதிவுக்குப் பிறகு ஐபேக் நிர்வாகிகளோடு ஸ்டாலின் பேசியுள்ளார். அவர்களோ, `170 முதல் 180 இடங்களில் தி.மு.க கூட்டணி வெல்லும்' எனக் கூறியுள்ளனர். `170 முதல் 180 என்றால், மீதமுள்ள 60 தொகுதிகளில் சரியாக வேலை பார்க்காமல் விட்டுவிட்டார்களோ?' என்ற எண்ணம் அறிவாலய நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்கு அடிப்படையாக, `நாங்கள் கூறிய வேட்பாளர்களை நியமிக்கவில்லை, அதே வேட்பாளர்களை அப்படியே போட்டுவிட்டனர்' என்றெல்லாம் குரல்கள் எழுந்தன. என்.ஆர்.இளங்கோ தலைமையில் இயங்கிய 25 வழக்கறிஞர்கள் அடங்கிய வார் ரூம் குழுவினர் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்தனர். இவ்வளவையும் தாண்டி கடைசி நாளில் வெளியிடப்பட்ட தி.மு.கவுக்கு எதிரான விளம்பரங்களை ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை.
ஆ.ராசா பேச்சால் பாதிப்பா?
ஒரு கட்சி தனது ஆட்சியின் சாதனை விளம்பரங்களைக் கொடுத்து பார்த்திருக்கிறோம். `தி.மு.க ஏன் ஆட்சிக்கு வரக் கூடாது?' எனக் கொடுத்த விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை முறியடிக்கும் வகையில் தி.மு.க தரப்பில் எதையும் முன்னெடுக்கவில்லை. சமூக ஊடகங்களில் மட்டுமே விவாதப் பொருளாக மாறியது. கூடவே, `தேர்தலில் எந்த குரூப்பும் சரியாக வேலை பார்க்கவில்லை. உள்கட்சிப் பூசலை சரிசெய்யவில்லை. ஊராட்சிக்குப் பத்து கிளை செயலாளர்களை நியமித்தும் ஒன்றிய நிர்வாகிகளோடு ஒத்துப் போகவில்லை. பல தொகுதிகளில் பூத் கமிட்டிகளில் நியமிக்கப்பட்ட 5-6 பேரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஏதோ பெயரளவுக்கு நியமிக்கப்பட்டனர்' என ஏராளமான புகார்களும் கிளம்பின.
கூடவே, `ஆ.ராசாவின் முதல்வர் குறித்த பேச்சு களத்தில் எந்தளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும்?' என தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர் கேட்டபோது, `ராசா பேச்சால் எந்த விளைவுகளும் ஏற்படவில்லை. மக்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை' எனப் பதில் வந்துள்ளது. ஆனால், தலைமைக்கு வந்த அறிக்கையில், `ஆ.ராசாவின் பேச்சால் கொங்கு மண்டலத்திலும் பெண்கள் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், `கலப்புத் திருமணத்துக்கு ஊக்கத் தொகை' எனக் குறிப்பிட்டு `இருவரில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டதை எதிர்த் தரப்பு ஓர் ஆயுதமாக எடுத்துக் கொண்டது.
கொதிப்பில் ஸ்டாலின்?
`இதற்குப் பதிலடி கொடுங்கள்' என ஐ.டி விங்கிடம் கேட்டபோது, `அதெல்லாம் கொடுத்துவிட்டோம். நாமே ஊதிப் பெரிதாக்க வேண்டாம்' எனப் பதில் கொடுத்துள்ளனர். இறுதியில், இந்த விவகாரத்தைப் பெரிதாக்கிய பெண்மணி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, "வாக்குச் சாவடி மையங்களில் ஜாமர் கருவியை பொருத்த வேண்டும். காரணம், இ.வி.எம் இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் எனக் கூறி தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தார். ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.கவுக்குச் சாதகமாக எந்த உத்தரவையும் பெற முடியவில்லை. மேலும், கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு சில தொகுதிகளில் உள்ள நிர்வாகிகள் சரிவர வேலை பார்க்கவில்லை என்ற தகவலும் அறிவாலயத்துக்கு வந்தது. இதனால் மிகுந்த கொதிப்பில் தலைமை இருக்கிறது" என்கிறார் ஆதங்கத்துடன்.
"அ.தி.மு.க தரப்பில் 6 சிலிண்டர்கள், 1,500 ரூபாய், இலவச வாஷிங்மெஷின் ஆகிய வாக்குறுதிகளை எல்லாம் மக்களிடம் சேர்க்கும் வேலைகளை அக்கட்சியினர் தீவிரமாக செய்தனர். தி.மு.க தரப்பிலோ, `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற ஸ்டிக்கரை வீட்டுக்கு வீடு ஒட்ட வைத்தனர். அதுவும், பல தொகுதிகளுக்குச் சென்று சேரவில்லை. தி.மு.கவின் தேர்தல் அறிக்கையும் பெரிதாக எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இவையெல்லாம் 10 கேள்விகளாக உருமாறி ஸ்டாலின் மேசையில் அமர்ந்துவிட்டது. இவை அனைத்தையும் தாண்டி பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் உறுதியாக நம்புகிறார்" என்கிறார் அறிவாலயத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர்.
200 தொகுதிகளில் வெற்றி!
`வாக்குப் பதிவு சதவிகிதத்தை எப்படி எடுத்துக் கொள்வது?' என தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "சென்னையைப் பொறுத்தவரையில் வாக்குப் பதிவு சதவிகிதம் குறைவாக இருப்பதற்குக் காரணம், கொரோனா தொற்றுதான். இதன் காரணமாக, தொழில் நிறுவனங்களும் பெரிதாக இயங்கவில்லை. பலரும் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். `170 தொகுதிகளில் வெற்றி என்றால், ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஐபேக் நிறுவனம் வேலை செய்யவில்லை' எனக் கூறப்படுவதெல்லாம் யூகத்தின் அடிப்படையில் பேசப்படுபவை. `அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.கவின் கட்டமைப்பு வலுவாக உள்ளது' என்பதை ஐபேக் நிர்வாகிகளே உணர்ந்தனர்.
இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவால் ஐம்பது தொகுதிகளில்கூட வெல்ல முடியாது. எங்களைப் பொறுத்தவரையில் 200 தொகுதிகளில் உறுதியாக வெல்வோம். அப்படியானால், மற்ற தொகுதிகள் எல்லாம் பலவீனமாக உள்ளதா என்ற அர்த்தம் இல்லை. வேட்பாளரின் சொந்த செல்வாக்கு, அமைச்சர்களின் தொகுதிகள், பணப்பட்டுவாடா உள்பட பல்வேறு காரணிகள் உள்ளன. வாக்குப் பதிவு அதிகரித்தற்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்" என்கிறார்.
தென்மாவட்ட நிலவரம்!
தொடர்ந்து பேசுகையில், "தற்போது வாக்குப் பதிவு அதிகம் எனச் சொல்லப்படும் தொகுதிகளில் இதற்கு முந்தைய தேர்தல்களிலும் அதிகப்படியாக வாக்குகள் பதிவாகியுள்ளன. தென்மாவட்டங்களில் உள்ள ஆண்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் பணிபுரிவதால், பெண்களின் வாக்கு சதவிகிதம் அதிகரிப்பது வழக்கம். கொங்கு பகுதிகளில் மக்கள் எப்போதும் ஆர்வத்துடன் வாக்களிப்பது இயல்பு. தி.மு.கவை பொறுத்தவரையில் இப்போது பதிவாகியுள்ள அதிகப்படியான வாக்கு சதவிகிதம் என்பது எங்களுக்கு விழுந்த வாக்குகளாகத்தான் பார்க்கிறோம். வாக்கு எண்ணிக்கை முடிவில் உண்மை நிலவரம் தெரியவரும்" என்கிறார்.
ஐபேக் சொன்ன 160...!
தி.மு.க நிர்வாகிகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஐபேக் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தி.மு.க தலைமைக்கு நாங்கள் தெரிவித்த தகவலில், `உதயசூரியன் சின்னம் மட்டும் 160 இடங்களில் வெல்ல வாய்ப்புகள் உள்ளன. மீதமுள்ள 13 இடங்களில் கடும் போட்டி இருக்கும். மேலும், 10 தொகுதிகளில் இழுபறி நீடிக்கலாம்' எனத் தெரிவித்துள்ளோம். கூட்டணிக் கட்சிகளின் நிலவரம் பற்றி நாங்கள் கூற முடியாது. வாக்குப் பதிவு நிறைவடைந்த பிறகு எக்ஸிட் போல் எடுத்துள்ளோம். இன்னும் சில நாள்களில் இதுதொடர்பான விரிவான அறிக்கை எங்களுக்கு வந்துவிடும். அதைப் பற்றி நாங்கள் எதுவும் பேசக் கூடாது. தி.மு.க தரப்பில் கேட்டுக் கொள்ளுங்கள். இதுதவிர, வேறு எதற்கும் பதில் சொல்ல விரும்பவில்லை" என்றதோடு முடித்துக் கொண்டார்.
'வாக்குப் பதிவு சதவிகிதத்தை முன்வைத்து நடக்கும் கணிப்புகள் சரியா?' என மூத்த பத்திரிகையாளர் என்.அசோகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "தேர்தலுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கைக்கு நிறைய நாள்கள் இருக்கும் நிலையில், `யாருக்கு வெற்றி கிடைக்கக்கூடும்?' என்பதை பலரும் கணிக்க முயல்வார்கள். வாக்குப் பதிவு சதவிகிதத்தை வைத்துச் சொல்லப்படும் கணிப்புகள் எதுவும் ஊர்ஜிதமானவை அல்ல. ஆனால், ஒரு வாக்களிக்கும் சமூகமாக நாம் வெட்கிக் குனியவேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம் என்பது மட்டும் உண்மை. அந்த அளவுக்கு சகட்டுமேனிக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்றே பல்வேறு தொகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள், வேட்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
முடிவுகளை மாற்றுமா அ.ம.மு.க, ம.நீ.ம, நா.த.க?
`இப்போதெல்லாம் 200 ரூபாயை கொடுத்தால்கூட வாங்க மாட்றாங்க. ஐநூறா கொடுங்க என்கிறார்கள்' என்பதே வேட்பாளர்கள் தரப்பு பேச்சாக இருக்கிறது. குறிப்பிட்ட கட்சி தோற்றுவிடும் என்ற நிலையில் இருந்த பல தொகுதிகளில் வாக்குப் பதிவுக்குப் பின் பணப்பட்டுவாடாவை வைத்து, `அக்கட்சி வென்றுவிடும்' என்ற கருத்துகள் உலவ ஆரம்பித்துள்ளன" என்கிறார்.
தொடர்ந்து விவரித்த என்.அசோகன், "தி.மு.க சார்பில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டது. தேர்தல் பரப்புரையிலும் மாநில உரிமைகள், கடந்த பத்தாண்டு அ.தி.மு.க ஆட்சியின் தவறுகள் ஆகியவை முன்வைக்கப்பட்டன. அ.தி.மு.கவோ, பத்தாண்டுக்கு முந்தைய தி.மு.க ஆட்சியின் குறைகளை பிரதானமாக முன்வைத்தது. பா.ஜ.க உடன் அ.தி.மு.க வைத்த கூட்டணியால் பலன் உண்டா என்ற கேள்விக்கு சந்தேகமே பதிலாக உள்ளது.
ஆ.ராசாவின் பேச்சு, பெண்களைக் கவரும் இலவசங்கள் ஆகியற்றை அ.தி.மு.க பயன்படுத்தியது. இதனால் தேர்தலில் சம அளவில் மோதல் நிலவியதாக பலரால் நம்பப்படுகிறது. தினகரனின் அ.ம.மு.க கூட்டணி, கமல் கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஏற்படுத்தும் விளைவுகள் பல தொகுதிகளில் முடிவுகளை மாற்றி அமைக்கலாம்" என்கிறார்.
மேலும், "அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் ஜெயலலிதா, கலைஞர் இல்லாத நிலை என்பது பலவீனமே. ஆனாலும் கட்சித் தொண்டர்கள் அளவில் ஊக்கப்படுத்தி எழுச்சியுடன் பணிபுரிந்த கட்சிக்கு வாய்ப்புகள் சற்று அதிகமாக இருக்கும். பணப்பட்டுவாடா எந்த அளவுக்கு ஒரு மாநிலத் தேர்தல் முடிவை மாற்றி அமைக்க முடியும் அல்லது முடியாது என்பதை அறியும் வகையில் தேர்தல் முடிவுகள் விளக்கும்" என்கிறார் உறுதியான குரலில்.
பொதுத்தேர்வு எழுதிவிட்டுக் காத்திருக்கும் மாணவனைப் போல, பொதுத்தேர்தல் முடிவுகளுக்காகப் பதற்றத்துடன் அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. இன்னும் 17 நாள்களுக்குப் பிறகு எந்தக் கணக்குகளையும் வகுக்க வேண்டிய அவசியம், அரசியல் கட்சிகளுக்கு இருக்கப் போவதில்லை. அதுவரையில் பொறுத்திருப்போம்.
பிற செய்திகள்:
- இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிப்பு: அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு
- எகிப்தின் "தொலைந்துபோன தங்க நகரம்" கண்டுபிடிப்பு: பொக்கிஷங்களைத் தேடும் ஆய்வாளர்கள்
- தமிழ்நாடு தேர்தல் 2021: வேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தலுக்கு உத்தரவு
- மகாராஷ்டிராவில் ஏப்ரல் 14 முதல் முழு பொது முடக்கம் - 15 நாட்களுக்கு 144 தடை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: