புற்றுநோய், செயற்கை எலும்பு - விண்வெளிக்கு தயாராகும் ஹேலி ஆர்சினோ - யார் இவர்?

    • எழுதியவர், ஜோஷ்வா நெவெட்
    • பதவி, பிபிசி

உலகில் முதல்முறையாக ஒரு எலும்பு புற்றுநோயாளியாக இருந்து மீண்ட ஒருவர் விண்வெளி வீராங்கனை ஆகப் போகிறார். அதோடு செயற்கை உடல் பாகங்களோடு விண்வெளியில் பறக்கப் போகும் முதல் நபர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரராகப் போகிறார். கடைசியாக பூமியைச் சுற்றி வரப் போகும் இளம் அமெரிக்கரும் இவரே.

இப்படி பல பெருமைக்குச் சொந்தக்காரராகப்ப் போகும் 29 வயது வீராங்கனையின் பெயர் ஹேலி ஆர்சினோ.

கடந்த ஜனவரி மாதம் தான், உதவி மருத்துவராக இருக்கும் ஹேலி ஆர்சினோவை உலகின் முதல் தொழில்முறை விண்வெளி வீரர்கள் இல்லாமல் பொதுமக்கள் மட்டுமே பங்கெடுக்கும் விண்வெளித் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்

ஆர்சினோ மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தார், ஆனால் இந்த விஷயம் குறித்து அவர் யாரிடமும் வாய் திறக்காமல் இருக்க வேண்டி இருந்தது.

"என் வாழ்கையின் மிகப் பெரிய ரகசியத்தை நான் ஒன்றரை மாத காலத்துக்கு யாரிடமும் கூறாமல் வைத்திருந்தேன். இப்போது நான் அதை உலகத்தோடு பகிர்கிறேன்" என பிபிசியிடம் கூறினார் ஹேலி ஆர்சினோ.

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் மெம்ஃபிஸ் எனுமிடத்தில் இருக்கும் புனித ஜூட் குழந்தைகளுக்கான ஆராய்ச்சி மருத்துவமனை தான் உலகின் முதல் தொழில்முறை விண்வெளி வீரர்கள் இல்லாமல் பொதுமக்கள் மட்டுமே பங்கெடுக்கும் விண்வெளித் திட்டத்துக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைக் குறித்து, கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.

ஒரு காலத்தில் இதே மருத்துவமனையில் புற்றுநோயாளியாக இருந்த ஹேலி ஆர்சினோ இன்று இதே மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஈலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம், ஃப்ளோரிடாவில் இருந்து இந்த ஆண்டுக்குள் விண்வெளிக்குப் புறப்படுவார் ஆர்சினோ.

"இந்த திட்டம் பலரையும், பல விதத்தில் ஊக்குவிக்கும் என நான் நினைக்கிறேன். எதுவும் சாத்தியம் தான் என்பதைக் அவர்களுக்குக் காட்டும்" என்கிறார் ஹேலி ஆர்சினோ.

இந்த பொதுமக்கள் மட்டுமே பங்கெடுக்கும் விண்வெளித் திட்டத்தில் தொழில்ரீதியிலான விண்வெளி வீரர்கள் இருக்கமாட்டார்கள்.

இந்த திட்டத்தில், ஹேலி ஆர்சினோ உடன், ஜரெட் ஐசக்மென் என்கிற பில்லியனர் & போட்டியில் வெற்றி பெறும் இரு வெற்றியாளர்கள் பங்கேற்க உள்ளனர். ஐசக்மென் தான் இந்த திட்டத்துக்குத் தேவையான முழு பணத்தைச் செலுத்துகிறார் என்பதைக் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தான் அறிவித்தார். இது அவருடைய அதிவிருப்பமான திட்டம்.

இந்தப் பயணத்தின் மூலம் புனித ஜூட் மருத்துவமனைக்கு 200 மில்லியன் டாலரைத் திரட்ட இலக்கு வைத்திருக்கிறார் ஐசக்மென். அதில் பாதியைத் தானே நன்கொடை வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மொத்தம் இருக்கும் நான்கு இருக்கைகளில், ஓர் இருக்கையை புனித ஜூட் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுவிட்டது.

"இந்த திட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே, அதன் ஊக்கம் & உற்சாகத்தையும், நம்பிக்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் ஒருவர் தேவைப்பட்டார். அந்தப் பொறுப்பை இட்டு நிரப்ப ஹேலி ஆர்சினோ தவிர வேறு யாரையும் என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை" என்கிறார் ஐசக்மென்.

நடக்கவே நடக்காது என ஆர்சினோ கருதியதைச் சாத்தியப்படுத்தும் ஒரு விஷயம் தான் இந்தப் பயணம். ஹேலி ஆர்சினோவுக்கு 10 வயதில் ஒரு புற்றுநோயாளியாக புனித ஜூட் மருத்துவமனையில் இருந்தார்.

அம்மருத்துவமனை சிகிச்சையின் ஒரு பகுதியாக, ஆர்சினோ கீமோதெரபியை மேற்கொண்டார். அதோடு அவரது காலில் இருக்கும் சில எழும்புகளை நீக்கி செயற்கை ப்ராஸ்தெடிக் எலும்புகளாக மாற்றும் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார்.

நாசாவின் கடுமையான மருத்துவக் கட்டுப்பாடுகள் மற்றும் தேர்வுகளால், ஆர்சினோவின் கனவு தகர்ந்தது. கால்களில் ப்ராஸ்தெடிக் செயற்கை எலும்புகளைக் கொண்டிருப்பதால், நாசாவில் விண்வெளி வீரராகி விண்வெளிப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்கிற கனவு நனவாகவில்லை.

ஆனால் தனியார் விண்வெளித் திட்டங்களின் வருகையால், இன்று நம்மில் பலரும் விண்வெளிப் பயணம் மேற்கொள்வதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது.

"இந்த திட்டம் வரும் முன்பு வரை நான் விண்வெளி வீரங்கனை அல்ல. என்னால் ஒரு விண்வெளி வீராங்கனை ஆகியிருக்க முடியாது. உடல் ரீதியாக மிகச் சரியாக இல்லாதவர்கள் கூட விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளும் சாத்தியக் கூறுகளை இத்திட்டம் திறந்து வைத்திருக்கிறது" என்கிறார் ஹேலி ஆர்சினோ.

கடந்த ஜனவரி 05-ம் தேதி, இத்திட்டத்தில் இணைகிறீர்களா எனக் கேட்ட போது, ஆர்சினோ டென்னஸியில் அவரது வீட்டில் இருந்தார். "ஆம், நிச்சயம் கலந்து கொள்கிறேன்" என உடனடியாகக் கூறினார். அவரது குடும்பத்தினரோடும் இந்தப் பயணம் குறித்து தெரிவிக்கப்பட்டு சம்மதம் பெறப்பட்டது.

வரும் மார்ச் மாதத்துக்குள், மீதமிருக்கும் இரண்டு இருக்கைகளுக்கான நபர்களைத் தேர்வு செய்து அறிவிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் ஐசக்மேன்.

ஸ்வீப் ஸ்டேக் என்றழைக்கப்படும் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ஓர் இருக்கை வழங்கப்படும். அவர் வெல்லும் பணம் முழுக்க புனித ஜூட் மருத்துவமனைக்கு நன்கொடையாகக் கொடுக்கப்படும்.

ஷிஃப்ட்4 என்கிற ஜரெட் ஐசக்மென்னுக்குச் சொந்தமான நிறுவனத்தின் மென்பொருளைப் பயன்படுத்தி, ஆன்லைன் ஸ்டோர்களை மிகச் சிறப்பாக வடிவமைத்து வெற்றி பெறுபவருக்கு நான்காவது இருக்கை வழங்கப்படும்.

இந்த திட்டத்துக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் கடுமையாக ஒரு மாத கால பயிற்சித் திட்டத்துக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் புவியீர்ப்பு சக்தி இல்லாமல் விண்வெளியில் பறக்கும் பயிற்சியும் அடக்கம்.

இந்த திட்டத்தில் மருத்துவ அதிகாரியான ஹேலி ஆர்சினோ ஏற்கனவே தன் விண்வெளி ஆடையை அணிந்து பார்த்துவிட்டார். "விண்வெளி ஆடை மிக அருகையாக இருக்கிறது, ஆனால் நான் எதிர்பார்த்ததை விட கணமாக இருக்கிறது" என்றார்.

ராக்கெட் ஃப்ளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட உடனேயே, ஆர்சினோ அதற்கு பழக்கப்பட்டு விடுவார். இந்த பயணம் 2021-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்படலாம்.

இவர்கள் பயணப்படும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் உலகைச் சுற்றி வரும் போது, ஆர்சினோ இந்த விண்வெளி ஆடையைத் தான் சில நாட்களுக்கு அணிந்து இருப்பார்.

உலகை எல்லாம் சுற்றி முடித்த பின், டிராகன் விண்கலம் புவியின் வளிமண்டலத்தில் நுழைந்து, அமெரிக்காவின் கிழக்கு கடற்பகுதியின் நீர் பரப்பில் தரையிறங்கும்.

ஆர்சினோவின் நரம்புகள் துடிக்கின்றனவா?

"எனக்கு பதற்றம் ஒன்றும் இல்லை. நான் இத்திட்டத்தின் முக்கியப் பொறியாளர்களைச் சந்தித்தேன். நான் அவர்களை நம்புகிறேன்" என்கிறார் ஹேலி ஆர்சினோ.

"புற்றுநோயாளிகள் மற்றும் அதிலிருந்து மீண்டு வந்தவர்களின் பிரதிநிதியாக இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன். கொஞ்ச காலம் முன்பு நானும் அவர்களுடைய நிலையில் தான் இருந்தேன்"

"நீங்கள் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுவருகிறீர்கள் என்றால், நீங்கள் அந்தந்த நாளுக்குத் தான் கவனம் செலுத்துவீர்கள். அது போன்ற நெருக்கடியான சமயத்தில் எதிர்காலத்தைக் குறித்து யோசிப்பது என்பது மிகவும் சிரமமாக இருக்கலாம். இந்த திட்டம் அவர்களின் எதிர்காலத்தைக் குறித்து யோசிக்க அனுமதிக்கும் என நான் நம்புகிறேன்" என்கிறார் பல சாதனைகளை ஒருங்கே படைக்கப் போகும் வீராங்கனை ஹேலி ஆர்சினோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: