கொரோனாl: தமிழக சிறைகளில் பாதிப்பு அதிகரிக்கிறதா? - கள நிலவரம் என்ன?

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழக சிறைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சிறைகளில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை எனவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது தமிழக சிறைகளில்?

14,505 கைதிகள்

தமிழ்நாட்டில் 9 மத்திய சிறைகள் உள்பட 138 சிறைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் தண்டனை சிறைவாசிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் எனப் பலதரப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைகளில் 23,592 கைதிகளை அடைக்கக் கூடிய அளவுக்கு வசதிகள் உள்ளன. ஆனால், தற்போது 14,505 கைதிகள் உள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கத் தொடங்கியதும், கைதிகள் தங்களின் உறவினர்களைச் சந்திப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு தொடர்பாக கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள காயின் பூத் மூலமாகவே கைதிகள் தங்களின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் பேசி வருகின்றனர். தங்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க வாய்ப்பில்லாததால், கைதிகள் பலரும் மனநலரீதியாக பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் கடந்த 17 ஆம் தேதி வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், சிறைக் கைதிகள் தொடர்பான விவகாரம் ஒன்றை முன்வைத்தார்.

அவர், "கொரோனா தொற்று பரவல் தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அளவில் சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் செயலர், உள்துறை செயலர், சிறைத்துறை டி.ஜி.பி ஆகியோர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த 2020 ஆம் ஆண்டு அமைத்தது.

அச்சமூட்டும் கொரோனா பரவல்!

இந்தக் குழுவானது, சிறையில் இருக்கும் கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த உயர்மட்டக் குழுவுக்கு கடந்த 7 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, சிறையில் இருக்கும் கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உயர்மட்டக் குழுவுக்கு தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்," என்றார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலரை கொண்டு தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக்குழு, சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். இதற்காக இந்தக் குழு ஆலோசனை நடத்தி கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்" எனவும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவால் சிறைக் கைதிகளின் குடும்பத்தினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையடுத்து, தமிழக அரசுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைவாசியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு கொரோனா தொற்றை கணக்கில் கொண்டும், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், நீண்ட விடுப்பை வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "சிறைகளில் பரவி வரும் கொரோனா கிருமி தொற்றும் மரணங்களும் மிகுந்த அச்சத்தைத் தருகிறது. ஏற்கெனவே, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அறிவுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது என சிறைத்துறை மருத்துவர்கள் அறிக்கை அளித்துள்ளனர். உச்ச நீதிமன்றமும் 90 நாள்கள் விடுப்பு வழங்கலாம் என 7 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனப் பதிவிட்டுள்ளார்.

வார்டன்கள் மூலம் பரவுகிறதா?

"சிறைகளில் அச்சமூட்டும் அளவுக்கு கொரோனா பரவுகிறதா?" என சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் பா.புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``ஆமாம். சிறைகளுக்குள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. முதல் அலை பரவும்போது, அனைத்து மாநிலங்களிலும் குழு ஒன்றை அமைத்து, `7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர்களை பரோலில் விடலாம்' எனத் தெரிவித்தனர். ஆனால், தமிழக அரசு பரோலில் விடுவிக்கவில்லை. இரண்டாம் அலையில் ஏராளமான கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பல கைதிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைக்கு (18 ஆம் தேதி) உமர் பாரூக் என்ற கைதி புழல் சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்சிஜன் படுக்கை வசதி செய்து தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. வேலூர் சிறையில் இருந்து நேற்று நளினி பேசும்போது, `கொரோனா இங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. பிளாக்கை விட்டு வெளியே வர முடியவில்லை' என்றார்.

சிறை வார்டன்கள் வெளியே சென்று வருவதால் அவர்கள் மூலமாக எளிதில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. சிறையில் லாக்அப் முதல் அன் லாக்அப் வரையில் வார்டன்கள்தான் பணியில் ஈடுபடுகின்றனர். சிறைக்கு வரும் கைதிகளுக்கு இருமல், காய்ச்சல் இருந்தாலே அவர்களைத் தீவிரமாக கவனிக்க வேண்டும். முதல் அலையின்போது சிறையில் இருந்த 55 பேருக்கு கொரோனா பரவியது. மிகவும் கடுமையாக முயற்சி எடுத்ததன் காரணமாகத்தான் அவர்களைக் காப்பாற்ற முடிந்தது," என்கிறார்.

தேவையின்றி கைது செய்யக் கூடாது!

தொடர்ந்து பேசுகையில், "தற்போது நீதிபதி ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் இறந்து விட்டதால் கீழமை நீதிமன்றங்களுக்கு வழக்கறிஞர்களோ, கைதிகளோ செல்லக் கூடாது எனக் கூறிவிட்டனர். `ரிமாண்ட் மட்டும் செய்ய வேண்டும். அதிலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய வழக்குகளுக்கு மட்டுமே ரிமாண்ட் செய்ய வேண்டும்," என நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.

சாதாரண அடிதடி, பெட்டி வழக்குகளில் சிறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை' எனவும் கூறிவிட்டனர். `கைது செய்யாமல் வழக்கை மட்டும் நடத்தலாம்; ஒருவேளை கைது செய்ய வேண்டியது வந்தால் அதற்குரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. `இதையும் மீறி தேவையின்றி கைது செய்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை பாயும்' எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் வசதி எங்கே?

தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிக் கொண்டிருப்பதால் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரப்பனின் அண்ணன் மாதையன் 35 வருடங்களாக சிறையில் இருக்கிறார். இவரைப் போல நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களையெல்லாம் பாகுபாடு காட்டாமல் அரசு விடுதலை செய்ய வேண்டும். எந்தெந்த வழக்குகளுக்கெல்லாம் பிணை கொடுக்க முடியுமோ, அதையெல்லாம் உடனே செயல்படுத்த வேண்டும்" என்கிறார்.

`சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இருக்கிறதா?' என கேட்டோம்.

"இல்லை. புழல் சிறையில் ஒரே ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் மட்டுமே உள்ளது. இதன்மூலம் இரண்டு கைதிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். புழல் சிறையிலேயே இந்த நிலைமை என்றால் மற்ற சிறைகளின் நிலையை புரிந்து கொள்ளலாம்," என்கிறார்.

792 பேருக்கு கொரோனா.. ஆனால்?

அதேநேரம், சிறைத்துறை தொடர்பான வழக்குகளைக் கையாண்டு வரும் வழக்கறிஞர் வீ.கண்ணதாசன், பிபிசி தமிழுக்காக பேசுகையில், "தமிழக சிறைகளில் தண்டனை சிறைவாசிகளில் 4,314 பேர் உள்ளனர். விசாரணை கைதிகளில் 8,331 பேர் உள்ளனர்.

இதுதவிர, தடுப்புக் காவலில் ஏராளமானோர் உள்ளனர். தற்போது வரையில் சிறைகளில் 792 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 686 பேர் குணமடைந்துவிட்டனர். இதில், இரண்டு பேர் இறந்துவிட்டனர். அதில் ஒருவர் கொரோனா தொற்றுடன் சிறைக்குள் வந்தவர்" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், "கொரோனா முதல் அலையின்போது கைதிகளை ஜாமீனில் விடும் வேலைகள் நடந்தன. தற்போதும் இடைக்கால ஜாமீன் வழங்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெளியில் உள்ள தொற்றைவிட சிறைக்குள் தொற்று பரவல் குறைவுதான். இதன்மூலம் சிறைத்துறை சிறப்பாகச் செயல்படுவதை அறியலாம். சிறைத்துறை பணியாளர்கள்தான் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காவல் துறையைப்போல இவர்களையும் முன்களப் பணியாளர்களாக அரசு அறிவிக்க வேண்டும்," என்கிறார்.

தேவையற்ற வதந்தியா?

`சிறைக் கைதிகள் மத்தியில் கொரோனா அதிகரிக்கிறதா?' என சிறைத்துறையின் தலைமையக டி.ஐ.ஜி முருகேசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "சிறைக் கைதிகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். மருத்துவர்களின் பரிந்துரைப்படி, கபசுர குடிநீர், சத்தான உணவுகள் உள்பட போதுமான வசதிகளை செய்து தருகிறோம். சிலர் தேவையற்ற வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்," என்கிறார்.

`புழல் சிறையில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதாகக் கூறப்படுகிறதே?' என புழல் சிறையின் கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``அப்படியெல்லாம் எதுவும் இல்லை. உமர் பாரூக் என்பவர் குணமடைந்துவிட்டார். அவர் தனது பிளாக்குக்கு போக வேண்டும் என்றுதான் கூறி வருகிறார். பொதுவாக, கைதிகளை மருத்துவமனையில் அனுமதித்தாலே 3 நாள்கள் கண்காணிப்பில் வைப்போம். அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். தற்போது புழல் சிறையில் 2 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை எடுத்து வருகின்றனர்" என்கிறார்.

கைதிகளுக்கான சிறப்பு உணவுகள் என்னென்ன?

தொடர்ந்து பேசுகையில், "மருத்துவர்களின் பரிந்துரைப்படி, கைதிகளுக்கு காலை 6.30 மணியளவில் கபசுர குடிநீர் கொடுக்கிறோம். எலுமிச்சை தண்ணீர், பச்சை மிளகாய், சீரகம் கலந்து கொடுக்கிறோம். நிலவேம்புக் கசாயமும் கொடுக்கிறோம். அதன்பிறகு கடலை பருப்பு சாதம், பொங்கல், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் கொடுக்கிறோம். 11 மணிக்கு அன்னாசி பழச் சாறு கொடுக்கிறோம். மதியம் சாம்பாருடன் சாதம், புதினா சாதம், முட்டை கொடுக்கிறோம். மாலை நேரத்தில் சுண்டல் வழங்கப்படுகிறது.

பின்னர், முருங்கைக் கீரை உள்பட பல்வேறு சூப் வகைகளைக் கொடுக்கிறோம். பிறகு வாழைப்பழம், சப்பாத்தி போன்றவற்றை இரவு உணவாகக் கொடுக்கிறோம். கடந்த கொரோனா அலையின்போது அனைத்து கைதிகளுக்கும் இதுபோன்ற உணவு வகைகளைக் கொடுத்தோம். இப்போது தேவைப்படுகிற கைதிகளுக்கு மட்டும் இந்த உணவை வழங்கி வருகிறோம்.

இது தவிர, சானிடைசர், கைகைகளைக் கழுவ தனி பைப்புகள், முக்கிய நுழைவாயிலில் வெப்பத்தை சரிபார்க்கும் இயந்திரம், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் போன்றவற்றை வைத்துள்ளோம். தினசரி பூச்சிக்கொல்லி மருந்து அடித்து வருகிறோம். இதற்காக ஒரு நபரை நியமித்துள்ளோம். கைதிகளுக்கு கையுறை, முகக்கவசம் போன்றவற்றையும் கொடுத்துள்ளோம். இவ்வளவுக்கும் மத்தியில் புழல் சிறையில் கொரோனா பரவுவதாக கூறப்படும் தகவல் பொய்யானது," என்கிறார்.

`சிறை வார்டன்கள் மூலமாக பரவலாம் என்கிறார்களே?' என்றோம். `` அவர்களுக்கும் வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளோம். அவர்கள் வெளியில் செல்வதை தவிர்த்துவிட்டனர். இங்கு கொரோனாவால் எந்தவித மரணங்களும் இல்லாமல் பார்த்து வருகிறோம். எங்களால் எளிதில் சமாளிக்கும் வகையில் போதுமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கடந்த அலையின்போது கொரோனா அலை வேகமாக பரவியது. எந்தவித பாதிப்பும் இல்லாமல் கையாண்டோம். யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்," என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :