செங்கோட்டை: 450 ஆண்டுகளுக்கும் மேல் அதிகார மையமாக இருக்கும் சின்னம் - முகலாய, பிரிட்டிஷ் இந்திய வரலாறு

    • எழுதியவர், ஜெய்தீப் வசந்த்
    • பதவி, பிபிசி குஜராத்தி

இந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தன்று, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் செங்கோட்டையில் நுழைந்து, இந்த வரலாற்று நினைவுச் சின்னமான இடத்தில் அதிகாரத்தை அடையாளப்படுத்தும் வகையில் `நிஷான் சாஹிப்' கொடியை ஏற்றினர்.

டெல்லி காவல் துறையின் தோல்வியைக் காட்டுவதாக இந்தச் சம்பவம் உள்ளது என்று குறிப்பிடப்படுகிறது. இப்போது, ஜனவரி 26ஆம் தேதி தலைநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வன்முறைகள் குறித்து குற்றப் பிரிவு காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

வரலாற்றுச் சின்னம் என்ற முக்கியத்துவத்தையும் தாண்டி, 450 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகார மையத்தின் அடையாளமாக செங்கோட்டை இருந்து வருகிறது. ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் இந்திய பிரதமர் அங்கு கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமாக உள்ளது.

முகலாயப் பேரரசர் ஷாஜஹான் 1649-ல் செங்கோட்டையைக் கட்டினார். ஏழாவது முறையாக டெல்லி நகரம் நிர்மாணிக்கப்பட்டது, அதன் மையமாக செங்கோட்டை இருந்தது.

முகலாயப் பேரரசுகளின் பொற்காலத்தையும், அதே ஆட்சியின் மறைவையும் டெல்லி செங்கோட்டை சந்தித்திருக்கிறது. இந்த சாம்ராஜ்யத்தின் கலாசார அடையாளத்தின் உதாரணமாக அது இருக்கிறது செங்கோட்டை.

அரசியல் சதிகள், காதல், பேராசை, பேரரசுகளின் வீழ்ச்சி ஆகியவற்றை செங்கோட்டை பார்த்திருக்கிறது. 1857-ல் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான கலகத்தின் அங்கமாகவும் இருந்தது.

கிலா-இ-முபாரக்

City of my heart என்ற புத்தகத்தில் ரானா சாஃப்வி பின்வருமாறு எழுதியுள்ளார்: ``1628 பிப்ரவரியில் தன் தாத்தா மற்றும் தந்தையைப் போல ஆக்ராவில் அரியாசனத்தில் ஷாஜஹான் அமர்ந்திருந்தார். ஆனால் ஆக்ரா கோட்டை சிறியதாக உள்ளதாக அவருக்குத் தோன்றியது. எனவே யமுனை நதிக்கரை அருகே டெல்லியில் புதிய கோட்டையைக் கட்ட அவர் முடிவு செய்தார். ஆக்ரா கோட்டையைவிட இரண்டு மடங்கு பெரியதாக, லாகூர் கோட்டையைவிடவும் பெரியதாக இந்தக் கோட்டையை உருவாக்க அவர் முடிவு செய்தார்'' என்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அன்புக்குரிய தன் மனைவி மும்தாஜ் இறந்த பிறகு, ஆக்ரா மீதான பற்று ஷாஜஹானுக்கு குறைந்துவிட்டது என்று சிலர் கருதுகின்றனர். `பாட்ஷாநாமா' என்ற தலைப்பிலான பேரரசரின் சுயசரிதையை மேற்கோள் காட்டும் சாஃப்வி, ``இந்து ஜோதிடர்கள் மற்றும் முஸ்லிம் ஹக்கீம்களின் ஆலோசனைகளின்படி - பெரோஸ் ஷா கோட்லாவுக்கும் சலீம்கருக்கும் இடையில் இடம் தேர்வு செய்யப்பட்டது'' (16 ஆம் நூற்றாண்டில் இஸ்லம்ஷா சூரி கட்டிய கோட்டை) என்று கூறுகிறார்.

செங்கோட்டையைக் கட்டும் பணிகளை 1639 ஏப்ரல் 29ஆம் தேதி ஷாஜஹான் தொடங்கி வைத்தார். அதே ஆண்டு மே 12ஆம் தேதி பணிகள் தொடங்கின. அதே காலக்கட்டத்தில், ஷாஜஹானாபாத் என்ற புதிய நகரை நிர்மாணிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

தன் மனைவியர் மற்றும் பிள்ளைகள் வீடுகள், மசூதிகள், தோட்டங்களை அந்த நகரில் கட்டுவதற்கு அவர் ஊக்கப்படுத்தினார். சாந்தினிசௌக் பஜாரை அவரது மகள் ஜஹான் ஆரா கட்டினார். அப்போது புதிதாக வருபவர்களுக்காக உருவாக்கப்பட்ட பேகம் சராய் தெரு, இப்போது டெல்லியின் டவுன் ஹாலாக உள்ளது. ஷாஜஹானின் மகன் தாரா ஷிகோஹ் வீடு நிகாம் போத் காட் பகுதியில் கட்டப்பட்டது.

1648 ஜூன் 15ஆம் தேதி பாதுஷா `கிலா-இ-முபாரக்' -இல் நுழைந்தார். பதேபூர் சிக்ரியில் இருந்து ஆற்று வழியாக செம்மண் கற்கள் கொண்டு வரப்பட்டன. கோட்டையைக் கட்டுவதற்கு செம்மண் கற்கள் பயன்படுத்தப் பட்டதால் அது செங்கோட்டை என அழைக்கப் படுகிறது.

பேரரசராக ஷாஜஹான் இருந்த காலம், முகலாய ஆட்சியாளர்களின் பொற்காலம் என்று குறிப்பிடப் படுகிறது.

தாஜ்மஹாலை வடிவமைத்துக் கொடுத்த அஹமது லஹோரி, ஷாஜஹானாபாத் வடிவமைப்பிலும் பங்களிப்பு செய்தார்.

இந்தக் கட்டமைப்பில் இஸ்லாமிய, முகலாய, பார்சி மற்றும் இந்து கட்டடக் கலை அம்சங்களைப் பார்க்க முடியும். பிறகு அதுதான் ராஜஸ்தான், ஆக்ரா, டெல்லியில் கட்டடங்கள் உருவாகவும், சில பூங்காக்கள் உருவாகவும் உத்வேகம் தருவதாக இருந்தன.

திவான்-இ-ஆமில், சாமானிய மக்களை பாதுஷா சந்தித்து, குறைகளைக் கேட்பார். திவான்-இ-காஸ் இல் அமைச்சர்கள் மற்றும் பெருங்குடி மக்களை சந்திப்பார். ஷாஜஹானின் மூத்த மகன் தாரா சிகோ. ஷாஜஹானுக்குப் பிறகு அவர்தான் அரியணைக்கு உரியவர். அவர் மீது ஷாஜஹான் அதிக பாசம் கொண்டிருந்தார். மற்ற மகன்களை தொலைதூர பகுதிகளை ஆட்சி செய்ய அனுப்பி வைத்த அவர், தாரா சிகோவை தனக்கு அருகில் வைத்துக் கொண்டார். ஆண்டுக்கு 2 கோடி ரூபாயை அவருக்கு அளித்து வந்தார்.

அரசியல் சதிகளின் சாட்சி

தன்னை `சிறந்த மன்னராக' உருவாக்கிக் கொள்வதற்காக பல்வேறு மதங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களைப் புரிந்து கொள்ள, மதங்களின் சுவடிகளை மொழி பெயர்ப்பு செய்ய வைப்பதில் தாரா சிகோ அதிக நேரத்தை செலவிட்டார். இதற்கிடையில் முகலாயர் அரியணையைக் கைப்பற்ற ஔரங்கசீப் தயாராகி வந்தார்.

1657-ல் ஷாஜஹான் நோயுற்ற போது, ஆட்சி நடத்த யாரும் இல்லாத நிலையில், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தன் சகோதரருக்கு எதிராக ஔரங்கசீப் சதி செய்தார் என்று பெர்க்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் முனிஸ் பாரூக்கி தெரிவித்தார். படை நிர்வாக விஷயங்களில் முடிவெடுக்கும் திறன் தாரா சிகோவுக்கு இல்லை என ஔரங்கசீப் நம்பினார். மதங்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பதால், நல்ல ஆட்சி நிர்வாகத்தைத் தரும் திறன் அவருக்கு இருக்காது என்று ஔரங்கசீப் கருதினார்.

சகோதரர்களுக்கு இடையிலான இந்தப் பிரச்சனை போராக வெடித்தது. 1659 ஜூன் மாதம் ஆக்ரா அருகே சாமுகடா என்ற இடத்தில் இரு சகோதரர்களின் படைகளும் மோதிக் கொண்டன. ஔரங்கசீப் கணித்திருந்தபடி தாரா சிகோ தோல்வி அடைந்தார்.

தாரா சிகோவை காப்பாற்றுவதாக உறுதி அளித்திருந்த அவருடைய ஆப்கன் தளபதி மாலிக், அவரை ஔரங்கசீப்பிடம் ஒப்படைத்தார்.

1659 செப்டம்பர் 8ஆம் தேதி செங்கோட்டைக்கு செல்லும் சாலையில் ஏராளமான கூட்டம் கூடியிருந்தது. தாரா சிகோவை பார்க்க மக்கள் கூடியிருந்தனர். அவரை சுற்றி முகலாய வீரர்கள் வந்தனர்.

அது வெற்றிப் பேரணி போல அல்ல. அது அவமானப்படுத்தும் செயலாக இருந்தது. தாராவும், அவரது மகன் மன்டலாவும் யானையின் மீது அமர வைக்கப்பட்டிருந்ததாக, இத்தாலியைச் சேர்ந்த பயணக் கட்டுரையாளர் நிக்கோலோ மச்சியாவெல்லி கூறியுள்ளார்.

``அவர் முத்து மாலை அணிந்திருக்கவில்லை. ராஜகுடும்ப தலைப்பாகையும் இல்லை. சாதாரண மக்களைப் போன்ற காஷ்மீரி சால்வையும் இல்லை. அவருக்குப் பின்னால் வாள் ஏந்திய ஒரு வீரர் நடந்து வந்தார். தப்பிச் செல்ல முயன்றால், தலையை வெட்டிவிடுமாறு அந்த வீரனுக்கு உத்தரவு தரப்பட்டிருந்தது'' என்று தனது புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.

ஒரு காலத்தில் மிகுந்த பண வளத்துடன், அதிகாரம் மிக்க இளவரசராக இருந்த தாரா சிகோ, மோசமான சூழ்நிலைகளில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஔரங்கசீப் நீதிமன்றத்தில் தாரா சிகோ நிறுத்தப்பட்டு, ஏறத்தாழ ஒருமனதாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மறுநாள் அவரது தலை துண்டிக்கப்பட்டு, தலையை ஔரங்கசீப்பிடம் கொடுத்தனர்.

தாரா சிகோவின் உடல் எந்தவிதமான மத நிகழ்ச்சிகளும் இல்லாமல் ஹுமாயூன் நினைவிட வளாகத்தில் ஏதோ ஓர் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் தாரா சிகோவின் மகன் சிபிருக்கு தனது மகள் ஜப்தாதுன்னிசனியை ஔரங்கசீப் திருமணம் செய்து வைத்தார்.

தாரா சிகோ புத்தகங்கள் படிப்பதில் விருப்பம் கொண்டவர். எனவே அவருக்காக ஒரு நூலகத்தை ஷாஜஹான் உருவாக்கிக் கொடுத்திருந்தார். புதிய டெல்லியில் கஷ்மீரி கேட் பகுதியில் அதைக் காணலாம்.

அதிகாரத்தின் மையம் மற்றும் அடையாளம்

மன்னர்களின் தினசரி செயல்கள் குறித்து வரலாற்றாளர் தேவஷிஸ் தாஸ் எழுதிய Red Fort: Remembering the magnificent Moghuls (செங்கோட்டை: சிறப்புக்குரிய முகலாயர்களை நினைவுகூர்தல்) என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

``ஷாஜஹான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கொள்வார். தான் நலமாக இருப்பதை மக்களுக்குத் தெரிவிப்பதற்காக ஜரோகா-இ-தரிசனத்துக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். பாதுஷாவை பார்த்த பிறகுதான் அன்றைய வேலைகளைத் தொடங்கும் ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் தர்சனீய் பிரிவினராகக் கருதப்பட்டனர். அது பாதியளவுக்கு இந்து மரபின்படியானதாக இருந்தது'' என்று புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.

ஔரங்கசீப் மரணத்துக்குப் பிறகு முகலாய சாம்ராஜ்யத்தின் மற்றும் செங்கோட்டையின் வீழ்ச்சி தொடங்கியது 1739 ஆம் ஆண்டில், ஈரான் மன்னர் டெல்லி மீது தாக்குதல் தொடுத்தார். மிகவும் விலைமதிப்பு மிக்க மயூராசனத்தையும், கோஹினூர் வைரத்தையும் அவர் எடுத்துச் சென்றுவிட்டார்.

ரோஹில்லா, மராட்டியர்கள், சீக்கியர்கள், ஆப்கானிஸ்தர்கள் மற்றும் பிரிட்டிஷார் தாக்குதல் நடத்தி டெல்லியை கொள்ளையடித்தனர். 1748-ல் ஆப்கான் ஊடுருவல்காரர் அஹமது ஷா அப்தாலியுடன் சர்ஹிந்த்தில் நடந்த போரில் முகமது ஷா ரங்கீலா உயிரிழந்தார்.

``முகமது ஷா மறைவுக்குப் பிறகு, அவருடைய மகன் அஹமது ஷா டெல்லியை ஆட்சி செய்தார். இருந்தாலும், தன் தாயாரின் நண்பர் ஜாவித் காத் சப்தார் சங் என்ற அவாத் நவாப்பின் கைப்பாவையாகவே அவர் செயல்பட்டார். அந்த காலக்கட்டத்தில், வட இந்தியப் பகுதிகளை மராட்டியர்கள் வசப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக சப்தர் ஜங் போரிட முடியவில்லை. தனது அவாத் மாகாணத்தை காப்பாற்றிக் கொள்ள மட்டும் அவர் விரும்பினார். எனவே முகலாயர்கள் சார்பில் மராட்டியர்களுடன் அவர் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி `வெளியில் இருந்து வந்தவர்கள்' (மராட்டியர்கள்) 50 லட்சம் ரூபாய்க்கு அப்தாலிக்கு எதிராகப் போரிட ஒப்புக் கொண்டனர்.''

அதே காலக்கட்டத்தில் முகலாய ஆட்சியில் உள்ளுக்குள் மோதல் இருந்து வந்தது. ஆனால், மராட்டியர்களுக்கு இதில் ஆர்வம் இல்லை. ஒப்பந்தத்தின்படி அவர்கள் டெல்லிக்குள் நுழையவில்லை. 1757 ஜனவரியில் முகலாயர்களுக்கு எதிராக அப்தாலி வெற்றி பெற்று டெல்லியை வசப்படுத்தினார். அலாம்கிரின் இரண்டாவது மகளுக்கும் தன் மகன் தைமூருக்கும் அஹமது ஷா திருமணம் செய்து வைத்தார். இரண்டு முகலாய இளவரசிகளை ஷா திருமணம் செய்து கொண்டார்.

அனைத்து பெண்கள், சேவகர்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களுடன் அவர் ஆப்கானிஸ்தான் திரும்பினார். இரண்டாவது அலம்கிரை அடுத்த முகலாய பேரரசராக அவர் அறிவித்தார்.

அவரது மூத்த மகன் ஷா அலாம் தன் தந்தை கொல்லப்பட்ட பிறகு தன்னையே ஷாஹென்ஷா என அறிவித்துக் கொண்டார்.

ஆப்கானிஸ்தானுக்கும், முகலாய உயர் தலைவரான இமாத்-உல்-முல்க் உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான சண்டையை பயன்படுத்திக் கொண்ட மராட்டியர்கள், டெல்லியைப் பிடித்தனர். 1788 முதல் 1803 வரையில் அவர்கள் ஆட்சி செய்தனர். பிரிட்டிஷ் படையினர் லார்டு லேக் தலைமையில் டெல்லியில் வெள்ளையர்களைக் குடியமர்த்தினர். மராட்டியர்களிடம் அடிமையாக சிக்கி வாழ்ந்து கொண்டிருந்தார் இரண்டாவது ஷா அலாம். அப்போது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியிடம் அதிகாரம் இருந்தது. அவர்களால் நியமிக்கப்பட்ட `கிலேதார்' என்ற அதிகாரிகள் மூலம் முக்கிய முடிவுகள் அனைத்தும் எடுக்கப்பட்டன.

1813-ல் அவருக்கு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்பட்டது. செங்கோட்டைக்கு உள்பட்ட பகுதியிலும், அதைச் சுற்றிய சில பகுதிகளிலும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த காலக்கட்டத்தில், டெல்லி ஓரளவுக்கு அமைதியாக இருந்தது. ஆனால் 1857-ல் டெல்லி மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது.

கடைசி முகலாய பேரரசர்

1837ஆம் ஆண்டு இரண்டாம் பகதூர் ஷா ஜாபர் முகலாய அரியணையில் ஏறினார். தன் முன்னோர்களைப் போல அவரும், ஜரோகா தரிசன நடைமுறையைத் தொடர்ந்தார். முஸ்லிம்களும், இந்துக்களும் சம அளவில் அவருக்கு மரியாதை அளித்தனர். இருந்தாலும், அவர் பிரிட்டிஷ் பிரதிநியின் சன்மானம் பெறுபவரை விட மாறுபட்டவராக இருந்தது கிடையாது.

1857 ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்துக்கு எதிராக வங்காளத்தின் பாரக்பூரில் பிரிட்டிஷ் வீரர் மங்கள் பாண்டே புரட்சி செய்தார்.

அந்த வீரர்கள் மீரட் வழியாக டெல்லியை அடைந்தனர். செங்கோட்டையில் சிப்பாய் கலகம் பரவியதில், சில பிரிட்டிஷ் அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர், அவர்களுக்கு நம்பிக்கையான சேவகர்களும் கொல்லப்பட்டனர். மே மாதம் பகதூர் ஷா ஜாபர் அந்த வீரர்களிடம் சென்று, புரட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். இருந்தாலும் அதற்குத் தலைமையேற்கவில்லை. ஜான்சி, அவாத்,கான்பூர், பிகார், வங்காளத்தில் இருந்து புரட்சிக்கு ஆதரவு கிடைத்தது. ஆனால் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், சரியான தலைமை இல்லாத காரணத்தாலும் அது வெற்றி பெறவில்லை.

நான்கு மாத கால போராட்டத்திற்குப் பிறகு, செங்கோட்டையில் பிரிட்டிஷார் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டினர். இதனால் வீரர்கள் அதிக கோபம் அடைந்து, சூறையாடி, கொள்ளையில் ஈடுபட்டனர். அதன் பிறகு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்று பயந்து பலரும் டெல்லியை விட்டு வெளியேறினர். அவர்களுடன் பகதூர் ஷா ஜாபரும் வெளியேறினார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வன்முறையைத் தூண்டியது, பிரிட்டிஷ் தலைமையைக் கவிழ்த்தது, கிறிஸ்தவர்களைக் கொன்றது என்ற வழக்குகள் பகதூர் ஷா ஜாபர் மீது தொடுக்கப்பட்டன. அவர் மீதான வழக்கு திவான்-இ-ஆம் இல் விசாரிக்கப்பட்டது. அவர் ரங்கூனுக்கு (இப்போது யாங்கூன்) நாடு கடத்தப்பட்டார். அவரது அனைத்து மகன்களும் கொல்லப்பட்டனர்.

பிரிட்டிஷ் ஆட்சியின் மையம்

செங்கோட்டையை ராஜவம்ச குடியிருப்பு என்ற நிலையில் இருந்து, ராணுவ முகாமாக பிரிட்டிஷார்கள் மாற்றினர். அதற்காக, அந்தப் பகுதியில் பலவற்றை மாற்றினர். சில போர்களில் கோட்டை சேதம் அடைந்திருந்தது. சில புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு முன்னதாகவே தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன மேற்கூரைகள் காணாமல் போயிருந்தன. திவான்-இ-ஆம் வளாகம் வீரர்களுக்கான மருத்துவமனையாக மாறியது. திவான்-இ-காஸ் பகுதி ராணுவ வீரர்கள் குடியிருக்கும் பகுதியாக மாறியது.

1857 புரட்சிக்குப் பிறகு, கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசு ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொண்டது. 1877, 1903 மற்றும் 1911ஆம் ஆண்டுகளில் செங்கோட்டையில் அவர்கள் டெல்லி தர்பார் நடத்தினர். மன்னராட்சி மாகாணங்களிடம் இருந்து ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தை மாற்றித் தருவதைக் குறிப்பிடுவதாக அந்த நடவடிக்கை இருந்தது.

1911-ல் டெல்லி தர்பாரின்போது, கொல்கத்தாதான் தலைநகராக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அப்போது பிரிட்டனின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், மகாராணி மேரி ஆகியோர் முஸ்மாஹ பர்ஜ்ஜில் உள்ள ஜரோகா தர்ஷனில் இருந்து மக்கள் முன் தோன்றினர்.

சுதந்திரத்துக்கான குரல்

ரங்கூனில் பகதூர் ஷா ஜாபர் கல்லறை வளாகத்தில் சுபாஷ் சந்திரபோஸ் தனது இந்திய தேசியப் படை வீரர்களிடம் உரையாற்றினார். `சலோ டெல்லி' (டெல்லியை நோக்கி முன்னேறுவோம்) என்ற கோஷத்தை அங்கு அவர் வெளியிட்டார். செங்கோட்டையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கல்லறைகள் வழியாக செல்ல வேண்டும் என தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது இந்திய தேசிய ராணுவத்தால் எதுவும் செய்ய முடியாமல் போனது. ஜப்பான் தோற்கடிக்கப்பட்டது, நேதாஜியின் திடீர் மறைவு ஆகியவற்றால் அந்த இயக்கம் சிதைந்து போனது. மூன்று தளபதிகள் மேஜர் ஜெனரல் ஷாநவாஸ் கான், கர்னல் பிரேம் ஷெகல், கர்னல் குர்பாக்ஸ் சிங் தில்லனா ஆகியோர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு, செங்கோட்டையில் விசாரிக்கப்பட்டனர்.

இந்திய தேசிய ராணுவ தரப்பில் வாதாட காங்கிரஸ் ஒரு கமிட்டியை உருவாக்கியது. ஜவஹர்லால் நேரு, பூலாபாய் தேசாய், அசப் அலி, தேஜ் பகதூர் சப்ரூ, கைலாஷ்நாத் கட்ஜு (உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் தாத்தா) ஆகியோர் மூன்று தளபதிகளுக்காக வாதாடினர். 1945 மற்றும் 1946 மே வரை விசாரணை நடந்தது.

அந்த சமயத்தில் தேர்தல்கள் நெருங்கி வந்தன. எனவே அரசியல் ஆதாயங்களுக்காக அந்த நிகழ்வுகள் பெரிதாகப் பேசப்பட்டன. மூன்று தளபதிகளும் நாட்டில் மூன்று முக்கிய மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இதனால் நாடு ஒன்றுபட்டுவிடும் என்று பிரிட்டிஷ் உளவுத் துறையினர் கூறினர்.

வழக்கு விசாரணை நடந்தபோது ''40 crore logon ki awaaz- Sehgal, Dhillon, Shahnawaz'' என்ற முழக்கம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. அவர்கள் மூவரும் செங்கோட்டையில் சலீம்கர் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படும் அல்லது நாடு கடத்தப்படுவார்கள் என்று அப்போது கருதப்பட்டது. ஆனால் அவர்களை விடுதலை செய்வதாக பிரிட்டிஷ் ராணு தலைமை கமாண்டர் அறிவித்தார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, தேசியக் கொடியை செங்கோட்டையில் பண்டிட் நேரு ஏற்றினார். 2003 டிசம்பர் வரையில் இந்திய ராணுவத்தின் முகாமாக இந்தக் கோட்டை இருந்து வந்தது. இப்போது இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது. செங்கோட்டையை உலக கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடமாக 2007-ல் யுனெஸ்கோ அறிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: