You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிப்பு சம்பவம் - நடந்தது என்ன?
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று மாலை குறைந்த தீவிரம் கொண்ட வெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து, நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியின் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சாலையில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. தூதரகத்துக்கு வெகு அருகாமையில் நிகழ்ந்த இந்த வெடிப்பில், அருகில் இருந்த பல கார்களின் முகப்பு கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
குடியரசு தின விழா நிறைவுற்றதை குறிக்கும் வகையில், நேற்று மாலை வீரர்களின் பாசறை திரும்பும் விழா நடந்த விஜய் சௌக் பகுதி இந்த சாலைக்கு அருகில்தான் உள்ளது. அந்த விழாவில் இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தீவிரம் குறைந்த இந்த வெடிப்பு நிகழ்ந்த உடனேயே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சம்பவ இடத்தை ஆய்வு செய்த பின் கருத்துத் தெரிவித்த டெல்லியின் காவல்துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா, "இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறப்புப் படை மூலம் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. எனினும், இதுகுறித்து உடனடியாக எதுவும் கூற முடியாது" என்று கூறினார்.
மக்களிடையே பதற்றத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் இந்த தீவிரம் குறைந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
என்ன சொல்கிறது இஸ்ரேல்?
நேற்று (ஜனவரி 29, வெள்ளிக்கிழமை) மாலை சரியாக 5:05 மணியளவில் டெல்லியின் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சாலையில் உள்ள ஜிண்டால் ஹவுஸின் முன்பு இந்த தீவிரம் குறைந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த இடம், இஸ்ரேல் தூதரகத்தில் இருந்து வெறும் 150 மீட்டர் தூரத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நிகழ்விடத்தை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அதனுடன் தொடர்புடைய எந்த மின்கலமோ (பேட்டரி) அல்லது மின்னணு பொருளோ கிடைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலர் வளையம் ஒன்றிற்குள் வைக்கப்பட்ட வெடிப்பொருளை ஓடும் வாகனத்தில் இருந்து மர்ம நபர்கள் வீசியிருக்க கூடுமென்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சம்பவம் நடந்த நேரத்தில், அருகிலுள்ள ஒளரங்கசீப் சாலையை கடந்து சென்ற வாகனங்களை கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு ஆராயும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தீவிரம் குறைந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இஸ்ரேல் தூதரகத்துடன் தொடர்புடைய கடிதம் ஒன்றை கைப்பற்றிய காவல்துறை அதிகாரிகள் இதற்கும் சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தலைநகர் டெல்லியிலுள்ள முக்கிய இடங்கள் மட்டுமின்றி நாடுமுழுவதும் உள்ள விமான நிலையங்கள், அரசு அலுவலகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த வெடிப்பு சம்பவத்தின் காரணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேற்குவங்க பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேல் தூதரகம், இந்த நிகழ்வால் தங்களது ஊழியர்களுக்கோ, சொத்துக்களுக்கோ எவ்வித காயமோ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
"எங்களது ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் பாதுகாப்பாக உள்ளனர். இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளையும் நோக்கத்தையும் கண்டுபிடிக்க இந்திய அதிகாரிகளுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான ராஜீய உறவுகள் தொடங்கியதன் 29ஆம் ஆண்டு நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விசாரணை தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் ஒத்துழைத்து பணியாற்றி வருகின்றனர்" என்று இந்தியாவுக்கான இஸ்ரேலின் தூதர் ரான் மல்கா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: