You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பழங்கால தமிழர்கள் கோயில் கோபுர கலசங்களில் தானியம் வைத்தது ஏன்? - தமிழர் பண்பாட்டு வரலாறு
- எழுதியவர், விக்னேஷ். அ
- பதவி, பிபிசி தமிழ்
(இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி 'Myth Buster' எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. இதன் 6 பாகங்கள் 2020இல் வெளியாகின. ஏழாம் பாகம் இது.)
வரலாற்றுக் காலங்களில் தமிழர்களால் கட்டப்பட்ட கோயில்களின் கோபுர கலசங்களில் தானியத்தை அடைத்து வைக்கும் வழக்கமிருந்தது.
இப்போதும் புதிதாகக் கட்டப்படும் கோயில் கோபுர கலசங்களில் தானியங்களை அடைத்து வைக்கும் இந்த வழக்கம் தொடர்கிறது.
கோயில் கோபுரத்தின் கலசம் மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால் அந்த தானியங்கள் மிகவும் பத்திரமாக இருக்கும் என்றும், இயற்கைச் சீற்றங்கள், படையெடுப்பு, பஞ்சம் உள்ளிட்ட காலங்களில் இவை வேளாண்மை செய்ய பயன்படுத்தப்பட்டு, மக்களின் பசிப்பிணியைப் போக்க உதவும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்குப் பின்னர் இந்தக் கூற்று மிகவும் பரவலானதாகிவிட்டது.
இது வரலாற்று ரீதியாக எந்த அளவுக்கு உண்மை, நீண்ட நாட்களாக அதிக வெப்பத்தில் சேமித்து வைக்கப்படும் அந்த தானியங்கள் முளைத்து வளர்வதற்கு அறிவியல் ரீதியாக எந்த அளவுக்கு சாத்தியம் உள்ளது என்பதை பிபிசி தமிழ் ஆராய்ந்து. முதலில் இதன் வரலாற்றுப் பின்புலத்தை பார்ப்போம். கலசத்துக்குள் இருக்கும் தானியம் முளைக்குமா என்று இக்கட்டுரையின் இரண்டாம் பாதி விளக்குகிறது.
'தானியங்கள் - செழிப்பின் அடையாளம்'
கோயில் கோபுர கலசங்களில் தானியங்களை அடைத்து வைக்கும் பழக்கம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன்.
"ஒருவர் இறந்து விட்டால் இறந்த உடலின் அருகே 'நிறை நாழி' (படி நிறைய நெல் வைப்பது) வைக்கும் பழக்கம் இன்றும் பல வேளாண் சமூகங்களிடையே உள்ளது. இது அவர் இறந்த பின்னும் செழிப்புடன் இருக்க வேண்டும் எனும் நோக்கில் வைக்கப்படுவது. திருமண வீடுகளிலும் நெல்லையில் மணமக்கள் தலையில் தூவி வாழ்த்தும் முறை இருந்தது. இது சங்ககால இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மணமக்கள் செழிப்புடன் வாழ வேண்டும் நோக்கத்தில் செய்யப்படுவது. தானியங்கள் தமிழ்ச் சமூகத்தால் செழிப்பின் அடையாளமாக பார்க்கப்பட்டது. மதங்கள் நிறுவன மையம் ஆனபோது சடங்குகள் உருவாக்கப்பட்டன. அதன்போது தெய்வத்துக்கும் செழிப்பை சேர்க்கும் நோக்கத்துடன் கோயில் கோபுரங்களில் தானியங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம். செழிப்பை குறிக்கும் நோக்கிலேயே இந்த சடங்குகள் பின்பற்றப்பட்டன" என்கிறார் சிவசுப்பிரமணியன்.
அவர் எழுதிய 'மந்திரமும் சடங்குகளும்' எனும் நூலில் இது குறித்து மேலும் விரிவாக எழுதியுள்ளார்.
பழங்கால தமிழர்கள் தானியங்களை எப்படி சேமித்தனர்?
பழங்காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள், கோட்டைகள் ஆகியவற்றில் நெற்களஞ்சியங்கள் இருந்தன. இயற்கைச் சீரழிவு, முற்றுகை, பஞ்சம் உள்ளிட்ட காலத்தில் அந்த நெற்களஞ்சியங்களில் இருந்து மக்களுக்கு தானியங்களை கடனாக கொடுத்து இருக்கிறார்கள். இதற்கான கல்வெட்டு ஆதாரங்களும் இருக்கின்றன.
"பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான கோயில்களில் நெற்களஞ்சியங்கள் இருந்தன. அவற்றின் மதில் சுவர்கள் மிக உயரமாக அமைக்கப்பட்டு இருந்ததற்கான காரணம், எதிரிகளால் முற்றுகையிடப்படும்போது மக்கள் கோயில்களுக்குள் அடைக்கலம் புகுந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், கோயில்களில் இருக்கும் தானியங்கள் பாதுகாக்கப்படவுமே ஆகும்."
"பெரிய நெல் களஞ்சியங்களை அமைக்கும் பழக்கம் இருந்த காலகட்டத்தில் அவ்வளவு உயரத்தில் வைக்கப்பட்டுள்ள கோபுர கலசங்களில் இருக்கும் தானியங்கள் எந்த அளவுக்கு மக்களுக்கு உதவியாக இருந்திருக்கும், அப்படி இருந்தாலும் வெயில், மழையை மீறி நல்ல நிலையில் இருந்திருக்குமா?" என்று கேள்வி எழுப்புகிறார் சிவசுப்பிரமணியன்.
கலசத்துக்குள் வைத்தால் விதைகள் முளைக்குமா?
விதைகளை சேமித்து வைக்கும்பொழுது நிறைய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக விதையினுள் இருக்கும் ஈரப்பதம் மிக முக்கியமான ஒன்று.
"விதைகளை சேமித்து வைக்கும்பொழுது ஈரப்பதம் 13 சதவீதத்திற்கும் கீழ் (நெல் 13%, சோளம் 12%, கம்பு 12%, தக்காளி கத்தரி போன்ற காய்கறிகளுக்கு 8%) இருக்குமாறு பார்த்துக்கொள்வர். ஏனெனில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் மிக விரைவிலேயே பூஞ்சைகளும், பூச்சிகளும் தாக்கும் அபாயம் உள்ளது, அதே சமயத்தில் ஐந்து சதவீதத்துக்கும் கீழ் குறையும் பட்சத்தில் அந்த விதைகள் முளைக்காமல் போவதற்கும் நிறைய வாய்ப்புள்ளது," என்கிறார் புது டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ள ஜீ.கே. தினேஷ்.
"மாதங்கள் செல்ல செல்ல சுற்றுப்புறத்தின் வானிலையை பொருத்து விதையின் ஈரப்பதமும் குறைந்துக் கொண்டே வரும். அதனால் விதையினுள் இருக்கும் ஈரப்பதம் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதேபோல விதை சேமித்து இருக்கும் இடம் சற்று காற்றோட்டமான இடமாகவும், அதே சமயத்தில் நேரடி வெயில் படாத, வெப்பத்தின் அருகில் இல்லாத இடமாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் காற்றோட்டமில்லாத ஓர் இடத்தில் நாம் விதைகளைச் சேமித்து வைக்கும் பொழுது இந்த விதையிலிருந்து ஆவியாகும் நீராவி, காற்றின் ஈரப்பதத்தை அதிகரித்து பூஞ்சை தாக்குதலை மிக விரைவில் ஏற்படுத்தும், நேரடி வெயிலிலோ அல்லது வெப்பமான பகுதியிலோ சேமிக்கும் போது மிக விரைவில் விதையின் ஈரம் ஆவியாகி மிக விரைவில் முளைக்கும் தன்மையை இழந்துவிடும்," என்கிறார் தினேஷ்.
செம்பு கலசத்துக்குள் விதைகள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்?
இந்திய அரசாங்கம் தேசிய விதைகள் நிறுவனத்தை 1963யில் ஆரம்பித்து, 1968யில் விதைகளுக்கான விதிகளை விதித்து ஒழுங்குமுறைப்படுத்தி வருகிறது. சான்றளிக்கப்பட்ட விதைகளுக்கு முளைக்கும் திறனின் அளவு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
"அதன்படி நெல்லுக்கு முளைக்கும் திறனின் அளவு 80%, சோளத்திற்கு 80%, கம்புக்கு 75% என முக்கியமாக பயிர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் தற்போது கிடைக்கும் பெரும்பாலான நாட்டு ரக விதைகளின் முளைப்பு திறன் சான்றளிக்கப்பட்ட விதைகளை விட 20% குறைவாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட விதைகளைத்தான் நாம் குடமுழுக்கின் போது கலசத்தினுள் வைக்கிறோம். பெரும்பாலான கோயில் கலசங்கள் செம்பால் வடிக்கப்பட்டிக்கும், அவை வெப்பத்தை நன்கு கடத்தி, தக்க வைத்துக்கொள்ளும். அப்படிப்பட்ட கலசத்தில் நாம் விதைகளை சேமித்து வைக்கிறோம், அவைகளுக்கு மூன்று ஆண்டுகள் கழித்து எவ்வளவு முளைப்பு திறன் இருக்கும் என நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள்," என்கிறார் அவர்.
"பொது மக்கள் நினைப்பது போல கலசத்தினுள்ள விதைகளை எடுத்து வறட்சி காலத்தில் வெள்ளாமை செய்ய வேண்டிய தேவை எல்லாம் இனி இந்த அறிவியல் யுகத்தில் இல்லை, ஏனெனில் ஆண்டு ஒன்றுக்கு பல கோடிகளை செலவு செய்து சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் விதை சேமிப்பு வங்கிகளும், மரபணு வங்கிகளும் இயங்கி வருகின்றன. ஆக, கலசத்திற்கும் விதை சேமிப்புக்கும் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை, அறிவியல் ஆராய்ச்சி அறிக்கைகளும் இல்லை," என்று கூறி முடித்தார் அவர்.
கோபுர கலசத்துக்குள் இருக்கும் விதைகள் ஊருக்கே போதுமா?
இந்தக் கேள்விக்கு பின்வருமாறு பதில் தருகிறார் தினேஷ்.
"சாதாரணமாக நமது கிராமத்திலிருக்கும் கோயிலில் இருக்கும் ஒரு கலசத்தின் கொள்ளவு அதிகப்பட்சம் 2 கிலோ வரை பிடிக்கும். பெரிய கோயில்களில் உள்ள கலசத்தின் கொள்ளளவு 5-8 கிலோ வரை இருக்கும், பொதுவாக கோயிலில் ஒற்றை படை எண்களில் வைக்கப்படும் கலசங்கள் கோயில்களுக்கு கோயில் மாறுப்படும், அவை 1 முதல் 9 வரை இருக்கும். அப்படி கணக்கில் எடுத்துக் கொண்டால் பெரிய கோயிலில் அதிகப்பட்சம் 50 கிலோ வரை இருக்கலாம்."
"ஒரு எக்டேருக்கு பாரம்பரிய நெல் பயிரை விதைக்க 30-45 கிலோ வரை தேவைப்படும், இப்படி ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு விதை வீதம் (Seed rate) இருக்கின்றது, கலசத்தில் 9 வகை தானியங்களை சேர்ப்பர், அப்படி பார்த்தால் நெல் விதை மட்டும் அதிகப்பட்சமாக 10 கிலோ இருக்கலாம். இந்த 10 கிலோவை வைத்து 500 பேர் உள்ள கிராமத்திற்கு எப்படி நெற்பயிரை நட்டு அறுவடை செய்து உணவளிக்க முடியும், அதுவும் இயற்கை பேரிடர் காலங்களில். இதற்கு சாத்திய கூறுகளே இல்லை. அடிப்படையும் இல்லை."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: