பாலியல் குற்றங்கள்: "அறுத்து வீசுங்கள், நடு ரோட்டில் தூக்கிலிடுங்கள்" - ஹாத்ரஸ் சம்பவத்தில் நடிகை மதுபாலா ஆவேசம்

பாலியல் குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று மிகவும் ஆவேசமாகப் பேசியிருக்கிறார் பிரபல தமிழ் மற்றும் ஹிந்தி நடிகை மதுபாலா.

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸில் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக கூறப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்த நிலையில், அந்த வழக்கை உச்ச நீதிமன்ற கண்காணிப்புடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கோரியிருக்கிறது.

இதற்கிடையே, ஹாத்ரஸ் சம்பவம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாலியல் வல்லுறவு குற்றங்கள் தொடர்ந்து பதிவாகி வருவது, பல துறைகளில் உள்ளவர்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் வரிசையில் பிரபல தமிழ் மற்றும் ஹிந்தி நடிகை மதுபாலா, அசாதாரணமான வகையில் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வழக்கமாக சிவப்பு நிற லிப்ஸ்டிக், மேக் அப் ஒப்பனைகளுடன் திரையில் தோன்றுவதை கவனமாகக் கொண்டிருக்கும் மதுபாலா, இம்முறை ஒப்பனையின்றி நிஜ தோற்றத்துடன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் உணர்ச்சி பொங்கப் பேசியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் மக்கள் எதிர்மறை தாக்கத்தை கூட சாதமாக எதிர்கொண்டு வாழப் பழகியதை பற்றி சில நிமிடங்கள் பேசிய அவர், பிறகு பாலியல் வல்லுறவு குற்றவாளிகளின் செயல்பாடு குறித்தும் விரிவாகப் பேசி அவர்களை சட்டமியற்றும் இடத்தில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அக்டோபர் 1ஆம் தேதி அந்த காணொளியை நடிகை மதுபாலா வெளியிட்டிருந்தாலும், அது சமூக ஊடக தளங்களில் பெரிதாக ஈர்க்கப்படாத நிலையில், நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு சுந்தர் அவரது காணொளி இடம்பெற்ற பக்கத்தை தமது டிவிட்டர் பக்கத்தில் இருந்து ரீ-டிவீட் செய்ததும் அது வைரலாகி வருகிறது.

ஏழு நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காணொளியில் ஆங்கிலத்தில் மதுபாலா பேசியதன் தமிழாக்கத்தை இங்கே வழங்குகிறோம்.

ஹேப்பிடெமிக் என்றால் என்ன?

ஹாய், நான் மது. ஹேப்பிடெமிக்கில் இது எனது முதலாவது பதிவு.

எனது டிரேட் மார்க் ஆன சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளாமல், கண் மை வைக்காமல் நானே எனது ஷூட்டிங்கை நடத்திக் கொண்டிருக்கிறேன். வியர்வை சொட்டச்சொட்ட தலைமுடியை சீவாமல் இப்போது நான் இருக்கிறேன். நம்முடைய முகத்தில் கறை இருந்தால் பரவாயில்லை, மனதில்தான் எந்தக் கறையும் இருக்கக் கூடாது.

ஏனென்றால் ஹேப்பிடெமிக் என்பது பளபளப்பான தோலோ. கவர்ச்சிகரமான தோற்றமோ கிடையாது. அது உருவமற்ற ஆன்மா. அதுதான் நமக்குத் தேவை. ஹேப்பிடெமிக் உலகில் அதுவே தேவை.

"பேண்டமிக்" எனப்படும் பெருந்தொற்று காலத்தில்தான் ஹேப்பிடெமிக் என்ற வார்த்தையை நான் அறிந்தேன். ஏனென்றால் நாம் காணும் இந்த பெருந்தொற்று மிக எளிதாகவும் வெகு விரைவாகவும் பரவுகிறது. அது எல்லா வகையான வலியையும் தருகிறது.

அதனால் நான் தொற்று போல பரவக்கூடிய நமது புன்னகையும் அன்பும் நிறைந்த ஹேப்பிடெமிக் உலகை உருவாக்க நான் விரும்புகிறேன். இதுதான் ஹேப்பிடெமிக்கின் அர்த்தம்.

இந்த ஹேப்பிடெமிக்கை தூய்மையான எவ்வித வடிகட்டலுமின்றி எவ்வித மூடி மறைத்தலுமின்றி நான் பரப்புகிறேன். பாசாங்கு செய்யாமல் பொய் இல்லாமல் இதை செய்ய விரும்புகிறேன்.

இங்கே கொரோனா வைரஸ் பரவலாக காணப்பட்டாலும் கூட, அதை நமது மனித இயல்பு, சாதகமான போக்குடனேயே அணுகி வருகிறது. இதை விட சிறப்பான காலம், இனிதான் வரப்போகிறது என்று நாம் நம்புகிறோம்.

உண்மையிலேயே மிகவும் சிக்கலான இந்த நேரத்தில் கூட சிறந்த ஒன்று வரும் என நாம் அறிந்திருக்கிறோம். வாழ்வின் எதிர்மறையான கட்டத்தில் கூட சாதகமாக பயணம் செய்வது எப்படி என்பதை அறிந்திருக்கிறோம். கொரோனா வைரஸ் காலத்தில் பணம், பொருள், உறவுகள் என மனிதராக பலதையும் இழந்து வருகிறோம். ஆனாலும், இந்த கொரோனா வைரஸ், பெருந்தொற்று, லாக்டவுன், தனிமைப்படுத்துதலுக்கு மத்தியில் சாதகமான நல்லவற்றை காண நாம் பழகி வருகிறோம்.

மாசுபாடு இல்லாத தெளிவான வானம், நீர், கடல், இடம்பெயர்ந்து வரும் பறவைகள், குடும்ப உறவுகளுக்கு இடையிலான பந்தத்தின் உணர்வுகளை பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். குறைவாக இருந்தாலும் அதில் நிறைவைக் காண பழகியிருக்கிறோம். பயனற்ற அதீத தேவைக்கு பின்னால் ஓடியவர்கள் இப்போது அப்படி செய்யாமல் நின்றிருப்பதை காண்கிறோம். மொத்தத்தில் புதிய வாழ்க்கை முறைக்கு பழகியிருக்கிறோம். மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது என கண்டறிந்திருக்கிறோம்.

கெட்டதை நல்லதாக பார்க்க பழகினோம்

சமூக ஊடகத்தின் மாயாஜாலத்தை கண்டறிந்தோம். அது ஒரு வரம் போல உறவுகளுடன் இணைவதை சாத்தியமாகியிருக்கிறது. இந்த கடினமான நேரத்திலும் குதூகலிப்பது எப்படி என்பதை சாதகமான பார்வையுடன் கண்டறிந்தோம்.

பூமி புதிய சக்திக்கு மாறி வருவதாக நாம் கூறுகிறோம். அது நமது தேவைக்கான ஆற்றல் மாறுவதை காட்டுகிறது. சிறந்தவை நமக்கு முன்னே உள்ளதை அது உணர்த்துகிறது. எனவே ,மிகவும் சிக்கலான இந்த காலகட்டத்தில் கூட எப்படி சாதகமாக பிரச்னையை அணுகுவது என்பதை நாம் காணத்தொடங்கியிருக்கிறோம். அந்த கடினமான நிலை நம்மிடையே தங்கி விடாமல் எதிர்க்கப் பழகியிருக்கிறோம். மாறும் சூழ்நிலைக்கு நம்மை மாற்றிக் கொள்ள பழகியிருக்கிறோம்.

மனிதர்களான நாம்தான் இந்த பூமியிலேயே மிகவும் வலிமையானவர்கள் என்று நாம் கூறிக்கொள்கிறோம். ஆனால், அப்படியான ஒரு நிலையை, பாலியல் வல்லுறவு என வரும்போது நம்மை அப்படித்தான் அழைத்துக் கொண்டு பெருமிதப்படுகிறோமா...?

ஒரு பாலியலை நம்மால் நியாயப்படுத்த முடியுமா? இந்த பாலியல் வல்லுறவு நல்லதுக்குத்தான் நடந்தது, இதை விட சிறந்தது வரப்போகிறது அல்லது இதை விட நல்லது நடக்கப்போகிறது என்று நம்மால் கூற முடியுமா?

பாலியலை குற்றத்தை நியாயப்படுத்துவீர்களா?

2012இல் நிர்பயா சம்பவம் நடந்த பிறகு தீர்ப்பு வந்ததும் இந்தியாவில் பாலியல் வல்லுறவு நின்று போனதா? இது எப்படி செல்லப் போகிறது? எப்படி ஒரு மனிதன், இன்னொரு மனிதனுக்கு தீங்கு செய்கிறான்?

இது ஒரு ஆண், ஒரு பெண்ணுக்கு இழைக்கும் குற்றம். நாம் ஒரே இனம். இதை விட வேறொன்று நல்லது வரும் என்று நம்மால் கூற முடியுமா? இன்றைக்கு இது கொடூரமான பாலியல் வல்லுறாக பார்க்கப்பட்டாலும், இதை விட, நாளை நன்றாக இருக்கும் என்று நம்மால் அனுதாபப்பட்டு, இது ஏதோ மூளை தொடர்புடைய பிரச்னை என்று கூற முடியுமா?

இதை நியாயப்படுத்த முடியுமா? இது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று நாம் அனுதாபத்தோடு அணுக முடியுமா? ஆனால், அதை மட்டுமே வைத்துக் கொண்டு, சமூகத்தின் முன் சென்று நான் இப்படி செய்கிறேன் என்று பேச நாம் அனுமதிக்கப்படுவோமா?

ஒரு குடிகாரனாக இருப்பவர் கூட, மறுவாழ்வு மையத்துக்குச் சென்றதுமே, நான் ஒரு குடிகாரன் என்று தன்னைத்தானே முதலில் அறிவித்துக் கொள்கிறார். அதன் பிறகு அவருக்கான சிகிச்சை தொடங்குகிறது.

அதேபோல, பாலியல் வல்லுறவு எண்ணம் கொண்டவர், தான் சரியில்லாத நிலையில் இருப்பதாக உணர்ந்தால், நான் ஒரு ரேப்பிஸ்ட், என்று தன்னைத்தானே அறிவித்துக் கொள்ள வேண்டும். . எனக்குள் அந்த உணர்வு ஏற்படுகிறது என்று சட்டத்தின் முன் தோன்றிப் பேசி, என்னை சிறையில் அடைத்து விடுங்கள் என்று கூறும் நிலை வர வேண்டும். அவரால் அதை செய்ய முடியாதா?

எனவே, பாலியல் வல்லுறவில் ஈடுபடும் முன்பாக, அந்த நபர் தனது எண்ணம் சரியில்லை, எனக்கு பாலியல் வல்லுறவு உணர்வு வருகிறது. என்னை சிறையில் அடையுங்கள் என்று முதலில் அந்த நபர் கூற வேண்டும்.

குற்றவாளியை தூக்கில் போடுங்கள்

சட்டத்தை இயற்றுபவர்களும் அரசாங்கமும் பழைய நடைமுறைகளை ஓரங்கட்டி வையுங்கள் என்று வலியுறுத்துகிறேன். ஒரு பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட நபரை பிடித்தால் அவனை சாலையின் மத்தியில் தூக்கிலிடுங்கள், உறுப்பை ஊனமாக்குங்கள். அந்த காட்சியை எல்லா தொலைக்காட்சிகளிலும் காட்டுங்கள். அவனுக்கு அளிக்கப்படும் தண்டனையை காண்பவர்கள் மனதில் நடுக்கம் ஏற்பட வேண்டும்.

ஒவ்வோரு முறையும் பாலியல் வல்லுறவு சிந்தனை மனதில் தோன்றும்போது, அதை நாம் செய்யலாமா என எண்ணத்தோன்றும்போது, பொதுவெளியில் தூக்கிலிடப்படும் காட்சிகள் மனதுக்குள் தோன்றி, அந்த செயலை செய்யாமல் தடுக்க வேண்டும்.

எந்த வயதிலும் உள்ள எல்லா பெண்ணையும் கேளுங்கள். அவர் அருவருக்கத்தக்க உணர்வை அவர் எதிர்கொண்டால், உங்களுக்கு என்ன தோன்றுகிறது, உங்களுடைய ஆன்மா என்ன நினைக்கிறது என்று கேட்டுப்பாருங்கள்.

அது நெரிசலான இடத்திலோ பொதுப்போக்குவரத்து பேருந்திலோ தேவையற்ற தோள் உரசலாக இருந்தாலும் கூட, அது என்ன உணர்வைத் தருகிறது என அவர்களிடம் கேளுங்கள்,

அப்படி உரச நினைப்பவர்களின் குலை நடுங்க வேண்டும், ஆன்மா நடுங்க வேண்டும்.

அதுபோலத்தான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உருவம் சிதைக்கப்பட்டு பிறகு ஒரு பெண் கொல்லப்படும் போதும் அதை செய்தது ஒரு சக மனிதர் என நம்பும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என யோசியுங்கள்.

நமது சிறுமிகளுக்கோ பெண்களுக்கோ அதிகாரமளித்து விட்டு, நாம் அத்தகைய குற்றத்துக்கு எதிராக நிற்கிறோம் என்று நின்று கொண்டால் மட்டும் போதாது.

ஆணையும் பெண்ணையும் சிறுவனையும் சிறுமியையும் இந்த விவகாரத்தில் பிரித்து விடாதீர்கள்.

நாம் சிறுவன், சிறுமி என்பதற்கு முன்னால் நாம் ஒரு மனிதப்பிறவி. ஆண், பெண்ணுக்கு ஒரே மாதிரியாக அதிகாரமளியுங்கள். மனிதத்துக்கு அதிகாரமளியுங்கள். ஒன்றாக வாழ்வது எப்படி என்பதை எங்களுக்கு சொல்லிக்கொடுங்கள். அவர்களுக்கும் அது பற்றி சொல்லிக்கொடுங்கள்.

அன்பார்ந்த சிறார்களே, ஆண்களே, சகோதரர்களே, தந்தைகளே, கணவர்களே, காதலர்களே... பெண்கள் இல்லாமல் எப்படி உங்களால் வாழ முடியும்? உங்களுடைய வலது கை, உங்களுடைய இடதுகையை வெட்டிக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?

பெண்களை பாதுகாக்க கற்றுக்கொடுங்கள்

நீங்கள் இல்லாது நாங்கள் முழுமை பெறாதது போலவே, நாங்கள் இல்லாமல் உங்களுடைய வாழ்வும் முழுமை பெறாது. ஒவ்வொருவரின் பரஸ்பர ஆதரவின்றி நம்மால் பயணம் செய்ய முடியாது. எனவே, தயவு செய்து நிறுத்துங்கள். எந்த வழியிலாவது, எப்படியாவது இதை நிறுத்துங்கள். அரசாங்கம், எம்.பி, எம்எல்ஏக்கள், தாய்மார்கள், யாராக இருந்தாலும், இதில் தலையிட்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். நமது சிறுமிகளைக் காப்பாற்றுங்கள். பெண்களை காப்பாற்றுங்கள்.

புலிகள், முதலைகள், பாண்டாக்கள் போல நாங்களும் (பெண்கள்) அழிவின் விளிம்பில் உள்ள இனம். சிறுமிகளை காப்பாற்றுங்கள். பெண்களை காப்பாற்றுங்கள். ஆனால் சிறார்களே, நீங்களும் எங்களில் ஒரு அங்கம்தான் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே உங்களுடைய வாழ்வின் மறுபக்கத்தை, வாழ்வின் மறுபாதியை தயவு செய்து காப்பாற்றுங்கள் என்று மதுபாலா பேசியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: