ஐபிஎல் 2020 RCB vs DC: பெங்களூரை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி அணி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே துபாயில் நேற்று (திங்கட்கிழமை) நடந்த டி20 போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இது ஐபிஎல் 2020 தொடரின் 19வது லீக் ஆட்டமாகும்.

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி டெல்லி அணியை முதலில் பேட் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

டெல்லி அணியின் ஸ்டொய்னிஸ் பேட்டிங் மூலமும் ரபாடா பௌலிங் மூலமும் பெங்களூரு அணியை நிலைகுலையச் செய்தனர்.

டெல்லி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 196 ரன்கள் எடுத்திருந்தது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா 23 பந்துகளில் 42 ரன்களும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான தவான் 28 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தனர்.

டெல்லி அணிக்காக அதிகபட்சம் ரன்களை குவித்த ஸ்டொய்னிஸ் 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெல்லி அணி இழந்த 4 விக்கெட்டுகளில் இரண்டை கைப்பற்றியவர் பெங்களூரு அணியின் சிராஜ்.

197 ரன்கள் எனும் இலக்கை நோக்கி தொடங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் ஒன்றும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை.

தொடக்க ஆட்டக்காரர்கள் தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் 4 மற்றும் 13 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி மட்டும் மிடில் ஓவர்களில் நிலைத்து நின்று ஆடி 39 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ஆனால் அவருக்கு சரியான கூட்டணி கிடைக்கவில்லை.

டி வில்லியர்ஸ் 9 ரன்களிலும் மொயின் அலி 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பவர் பிளே ஓவர்களிலேயே ஆர்சிபி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தியதாலும், சேசிங் செய்ய பெங்களூரு அணி திணறியதாலும் நேற்றைய போட்டி ஒன்றும் பார்க்க அவ்வளவு சுவரசியமானதாக இல்லை.

டெல்லி அணிக்காக பந்துவீசிய ரபாடா 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து பெங்களூரு கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட நால்வரின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

நோர்ட்ஜீ மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தமிழக வீரர் அஸ்வின் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார்.

20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் 5 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்றுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: