You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹாத்ரஸ் வழக்கு: சாட்சிகளின் பாதுகாப்பு விவரத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவையே உலுக்கிய உத்தர பிரதேச ஹாத்ரஸ் மாவட்டத்தில் கூட்டுப் பாலியல் நடந்ததாக கூறப்பட்ட பெண் உயிரிழந்த வழக்கில் சாட்சியம் அளிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை அடங்கிய விவரத்தை தாக்கல் செய்யுமாறு அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அந்த சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேச அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் ஹாத்ரஸ் பெண் உயிரிழந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னெள கிளையால் தாமாக விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் எவ்வாறு விரிவாக விசாரிக்க முடியும் என்பதை விவரிக்குமாறு இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் கேட்டனர்.
அப்போது துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் இளம் பெண் இறந்ததற்கான காரணத்தை விவரித்து பல விதமான கதைகள் உலாவருகின்றன. எனவே, சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்படுவதை உறுதிப்படுத்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி பல்வேறு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதங்களை நீதிமன்றத்தின் பார்வைக்கு வழக்கறிஞர் கீர்த்தி சிங் கொண்டு சென்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் தொடர்புடைய உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு தொடர்பான விவரத்தை உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை சரியாக செல்வதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தும். மனு மீதான விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டனர்.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்தது.
அதில், இந்த சம்பவம் தொடர்பாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் "விடாமுயற்சியுடன் விசாரித்த போதிலும்" சில ஊடகங்கள் அவதூறாக செய்தி வெளியிடுவதுடன், சில அரசியல் காட்சிகள் நய வஞ்சகமான பிரசாரத்தை மேற்கொள்வதாகவும், இந்த சம்பவத்துக்கு மதம் மற்றும் சாதிரீதியிலான சாயத்தை பூச அவர்கள் முற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதை நீதிமன்றம் அவ்வப்போது கண்காணிக்க வேண்டுமென்றும், இதன் மூலம் தவறான கதைகள் உருவாவதை தடுப்பதுடன், விசாரணையை சுதந்திரமாக நடத்த முடியும் என்றும் உத்தர பிரதேச அரசு தனது பிராமண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது பட்டியலின பெண்ணை நான்கு பேர் கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்து கடுமையாகத் தாக்கிய சம்பவத்தில் 14 நாட்களாக உயிருக்குப் போராடியவர் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியிலுள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
நள்ளிரவில் எரியூட்டப்பட்டது ஏன்?
ஹாத்ரஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் நள்ளிரவில் உத்தர பிரதேச மாநில காவல்துறையினரே எரியூட்டிய சம்பவம் சர்ச்சையை எழுப்பியிருந்தது.
இந்த நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள உத்தர பிரதேச அரசு, "இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக வன்முறைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலை பெற்று அவர்களின் முன்னிலையிலேயே எரியூட்டப்பட்டது" என்று விளக்கம் அளித்துள்ளது.
"இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வந்தபோதிலும், அதுகுறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. இதை தவிர்க்கும் வகையிலேயே, உத்தர பிரதேச மாநில அரசு நியாயமான, பக்கச்சார்பற்ற மற்றும் நடுநிலையான விசாரணையை நடத்தும் நோக்கத்தில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது" என்று அந்த பிராமண பத்திரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: