பிணவறையில் உடலை கடித்து குதறிய எலிகள்: மனித உரிமைகள் ஆணையம் தலையீடு

முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணைய பக்கங்களில் வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - பிணவறையில் எலிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்துள்ள ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). கொத்தனார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வேலையில் இருந்த போது மின்சாரம் தாக்கி மாடியில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ஆறுமுகத்தின் உடல் பிணவறையில் இருந்தபோது அவரது மூக்கு மற்றும் கால் பகுதியை எலிகள் கடித்து குதறி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஆறுமுகத்தின் உடலை எடுத்து செல்லாமல் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து உடலை உறவினர்கள் எடுத்து சென்றனர்.

இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து விசாரித்தார்.

பின்னர், இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் இயக்குநர், கள்ளக்குறிச்சி இணை இயக்குநர் ஆகியோர் இரண்டு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

இந்து தமிழ் திசை - காந்தி எழுதிய கடிதம் ஏலம்

பெங்களூருவைச் சேர்ந்த மருதர் ஆர்ட்ஸ் என்ற ஏல நிறுவனம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்கள் சிலவற்றை ஏலத்தில் விற்பனை செய்துள்ளது.

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் தண்டி சத்யாகிரக போராட்டத்தை தொடங்குவதற்கு முன் 1930ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காங்கிரஸ் கமிட்டி செயலாளருக்கு கைப்பட எழுதிய கடிதம் ரூ.2.5 லட்சத்துக்கு விற்பனை ஆனது.

மேலும் நவாநகர் குமார் ரஞ்சித் சிங்குக்கு காந்தி எழுதிய கடிதம் ரூ.2.25 லட்சத்துக்கும், காந்தி கையெழுத்திட்ட புகைப்படம் ஒன்று ரூ.1.7 லட்சத்துக்கும் விற்பனை ஆனது. இந்த ஏலத்தில் 1969-ல் வெளியிடப்பட்ட சிறப்பு எண்களைக் கொண்ட ஒரு ரூபாய் நோட்டுகளும் ஏலம் விடப்பட்டன. 100000, 111111, 222222, 444444 என எண்களைக் கொண்ட இந்த ஒரு ரூபாய் நோட்டுகள் தலா ரூ.50 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.

தினமணி: "ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவும்"

கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் என்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்திருப்பதாக அனைத்திந்திய வர்த்தகக் கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 9-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனைத்திந்திய வர்த்தகக் கழகம் எழுதிய கடிதத்தில், ரூபாய் நோட்டுகள் வாயிலாக கொரோனா வைரஸ் உள்பட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பரவுமா என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இந்தக் கடிதத்தை மத்திய நிதியமைச்சகம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்திருந்தது. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் பதிலில், ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் உள்பட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், முடிந்த அளவுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருப்பதாக அனைத்திந்திய வர்த்தகக் கழகம் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: