அமேசான் பிரைம் தளத்தில் புதிய படம் - பொது முடக்க காலத்தில் தயாரிக்கப்பட்ட 'இந்தியாவின் முதல் திரைப்படம்' சி யு சூன்

பட மூலாதாரம், AMAZON PRIME VIDEO
- எழுதியவர், சுதா ஜி திலக்
- பதவி, பிபிசிக்காக
பொது முடக்கத்தின் காரணமாக இந்தியாவில் அனைத்து தொழில்களும், வாழ்க்கையும் முடங்கிப் போயிருந்த கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதியில், ஒரு இளம் இயக்குநர் தனது அடுத்த திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தார்.
அந்த சமயத்தில், இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. குறிப்பாக, இந்த இயக்குநர் வசிக்கும் கேரளாவில் மட்டும் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பு பணிகள் முடிந்தும், வெளியிடப்பட முடியாமல் காத்திருந்தன. ஆனால், இவை எதுவும் இயக்குநர் மகேஷ் நாராயணனை, அடுத்த படத்தை எடுப்பதில் இருந்து தடுக்கவில்லை.
38 வயதான இயக்குநர் மகேஷ், பொது முடக்க காலத்திலேயே தனது அடுத்த திரைப்படத்திற்கான கதையை எழுதி முடிக்க, அதை கேரளாவின் ஒரு முன்னணி நடிகர் தயாரிக்க ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து, படத்திற்காக மொத்தம் 50 நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

அதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த படமும் கேரளாவின் கொச்சின் நகரத்திலுள்ள ஒரு குடியிருப்பு வளாகத்திலுள்ள ஆறு தனித்தனி வீடுகளில் மூன்றே வாரங்களில் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளே திரைப்படத்தின் களமாக, அலுவலகமாக, தயாரிப்பு இடமாக மட்டுமின்றி நடிகர்கள் மற்றும் கலைஞர்களின் தங்குமிடமாகவும் அமைந்தன.
சமூக விலகல் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடித்து, பெரும்பாலும் ஐஃபோனில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை வெறும் 22 நாட்களிலேயே மகேஷ் முடித்துவிட்டார்.
'சி யூ சூன்' (C U Soon) என்ற இந்த திரைப்படம்தான், இந்தியாவில் "பொது முடக்க காலத்தில், முழுவதும் வீட்டிலேயே எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாக" இருக்கும் என்று அதன் இயக்குநர் மகேஷ் நாராயணன் கூறுகிறார்.
சென்ற வாரம் 'அமேசான் பிரைம் வீடியோ' என்ற காணொளி தளத்தில் பிரத்யேகமாக வெளியான இந்த திரைப்படம் பெரும்பாலான இந்திய திரைப்படங்களை ஒத்திருக்கவில்லை.
அதாவது, மற்ற இந்திய திரைப்படங்களை போலன்றி வெறும் 90 நிமிடங்களே ஓடக்கூடிய இந்த திரைப்படத்தில், பாடல்களோ, நடன காட்சிகளோ கிடையாது.

பட மூலாதாரம், Amazon Prime Video
இருப்பினும், இந்த திரைப்படம் விமர்சகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவே தெரிகிறது.
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய அமேசான் பிரைமின் இந்திய கிளையின் உள்ளடக்க பிரிவின் தலைவர் விஜய் சுப்ரமணியன், இந்த திரைப்படம், "விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து சிறந்த கருத்துகளை பெற்றதோடு, சமூக ஊடகங்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது" என்று கூறினார்.
கொரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட உள்ளூர் திரைத்துறையினருக்கு உதவுவதும் மகேஷ் நாராயணன் இந்த திரைப்படத்தை எடுத்ததற்காக காரணங்களுள் ஒன்று. ஏனெனில், கொரோனா பொது முடக்க காலத்தில், சில துணை இயக்குநர்கள் மற்றும் திரைப்பட கலைஞர்கள் வாழ்வாதாரத்துக்காக வீடுகளில் உணவை தயார் செய்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்னும் சிலரோ நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தாலும் மருத்துவமனையில் சேர்வதற்கோ அல்லது மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்கோ கூட பணமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
"கேரள திரையுலகம் பாலிவுட்டை போன்ற கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை. இங்கு பெரும்பாலான கலைஞர்கள் தினக்கூலி அடிப்படையிலோ அல்லது முழு திரைப்படமும் முடிவுற்ற பிறகோ ஊதியம் பெறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்களது மொத்த சேமிப்பும் கொரோனா பொது முடக்க காலத்தில் கரைந்துபோனது" என்று பிபிசியிடம் பேசிய மகேஷ் நாராயணன் கூறுகிறார்.
"சினிமாவை மட்டுமே ஒரே வருமான ஆதாரமாக கொண்ட ஒரு சில தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க இந்த படம் உதவியது" என்று இந்த திரைப்படத்தின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கான வழக்கமான விதிகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. இந்த திரைப்படத்தின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான ஃபஹத் பாசில் கொச்சியில் உள்ள தனது இரண்டு குடியிருப்புகளை அலுவலகமாகவும், படத்திற்கான செட்களாகவும் மாற்றியதுடன், மேலும் வளாகத்தில் உள்ள நான்கு குடியிருப்புகளை வாடகைக்கும் எடுத்தார். எனவே நடிகர்கள் மற்றும் திரைப்பட குழுவினர் வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. தயாரிப்பாளரின் வீட்டு சமையல்காரர் ஒட்டுமொத்த திரைப்பட குழுவினருக்கும் சமையல்காரராக மாறினார். மேலும், இந்த திரைப்படத்தை பொறுத்தவரை, நடிகர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்கோ அல்லது ஒப்பனை செய்வதற்கோ என தனியே எந்த உதவியாளரும் இல்லை.

பட மூலாதாரம், Amazon Prime Video
"வழக்கமான திரைப்படத் தயாரிப்போடு ஒப்பிடும்போது இந்த திரைப்படத்தில் கையாளப்பட்ட முறையால் கரியமில தடம் கணிசமாகக் குறைந்திருக்கும்" என்று மகேஷ் கூறுகிறார்.
சி யு சூன் வழக்கமான இந்திய திரைப்படங்களில் இருக்கும் காதல், உணர்ச்சி, குடும்பம் சார்ந்த கதைக்களத்தை கொண்டிருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் பொது முடக்க காலத்தில் நிலவிய சவால்களை மீறி புதுமையான யோசனைகள் மற்றும் வழிமுறைகளை முதலாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் பெரும்பகுதியை திறன்பேசிகள், மடிக்கணினிகள், பாதுகாப்பு கேமராக்கள், சமூக ஊடக தளங்கள், தேடுபொறிகள் மற்றும் முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையிலான மெய்நிகர் அரட்டை, காணொளி அழைப்புகள் ஆக்கிரமிக்கின்றன. பல்வேறு நாடுகளில் இருக்கும் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ளவற்றை கொண்டு ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்வதை மையமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
டேட்டிங் செயலியில் மலரும் காதல், ஃபேஸ்புக் குறுஞ்செய்திகள், ஜிமெயில் வரை தொடர்ந்த நிலையில், கடைசில் ஒரு கூகுள் தேடலின் கதையின் மர்மம் உடைகிறது. இந்த படத்திற்கு விமான நிலையங்கள் மற்றும் அலுவலகங்களின் சில வெளிப்புற காட்சிகள் தேவைப்பட்டபோது, மகேஷ் தனது முந்தைய படங்களிலிருந்து பயன்படுத்தப்படாத சில காட்சிகளை எடுத்துக்கொண்டதுடன், தனது நண்பர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டார்.
"இந்தியில் பயன்படுத்தப்படும் ஜுகாத் (இருப்பதை வைத்து புதுமையான வழியில் பிரச்சனையை தீர்ப்பது) என்ற வார்த்தைக்கு தகுந்தவாறு வீட்டிலிருந்தவாறே வேலை தொடர்வதை உறுதிசெய்தோம்" என்று இயக்குநர் மகேஷ் நாராயணன் மேலும் கூறுகிறார்.
இயக்குநரின் இந்த கணக்கு சரியாகி விட்டது போலிருக்கிறது.
பிற செய்திகள்:
- இலங்கை: மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகர பதவியேற்பை கண்டித்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு
- "பல ஆண்டுகள் சிகிச்சை எடுத்தும், அவள் கருத்தரிக்கவில்லை'' - ஒரு மருத்துவரின் கவலை அனுபவம்
- மும்பையில் கங்கனா ரனாவத்: "மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது" - ஆளும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நேரடி சவால்
- தி.மு.க - புதிய பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு தேர்வு
- தேசிய கொடி அவமதிப்பு: எஸ்.வி. சேகர் தெரிவித்த வருத்தத்தை ஏற்ற தமிழக அரசு
- "இந்திய பொருளாதாரத்தை பாதித்தது கொரோனா அல்ல, பொது முடக்கம்தான்"
- PUBG தந்த வருமானம் என்ன? நிறுத்தப்படுமா போட்டிகள் - அடுத்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












