தமிழ் சினிமாவை தாக்கும் கொரோனா வைரஸ்: சென்னையில் மேலும் ஒரு திரையரங்கு மூடல்

வடசென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கி வந்த அகஸ்தியா திரையரங்கம் தற்போது மூடப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் மூடப்படும் மூன்றாவது திரையரங்கு இது.
70 எம்.எம். திரையுடன் 1004 இருக்கைகளுடன் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இயங்கிவந்த அகஸ்தியா திரையரங்கம் வடசென்னையின் மிகப் பெரிய திரையரங்குகளில் ஒன்று. சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான கே. நஞ்சப்ப செட்டியாரின் எண்ணத்தில் உதித்த இந்தத் திரையரங்கு 1967ல் திறக்கப்பட்டது.
இந்தத் திரையரங்கில் வெளியிடப்பட்ட முதல் திரைப்படம் கே. பாலச்சந்தர் இயக்கிய 'பாமா விஜயம்'. எம்.ஜி.ஆர்., சிவாஜி துவங்கி ரஜினி, கமல் ,விஜய், அஜித் வரை அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களும் இந்தத் திரையரங்கில் வெளியாகி, வெற்றிநடை போட்டிருக்கின்றன.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான 'காவல்காரன்' திரைப்படம்தான் அகஸ்தியாவில் 100 நாட்கள் ஓடிய முதல் திரைப்படம். எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்ட பிறகு வெளியான திரைப்படம் என்பதால் அந்தப் படத்தைச் சுற்றி பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்த்ததைப் போலவே படமும் சூப்பர் ஹிட்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

பட மூலாதாரம், AFP
இதற்குப் பிறகு, எம்.ஜி.ஆரின் 'உழைக்கும் கரங்கள்', சிவாஜி கணேசன் நடித்த 'சிவந்த மண்', 'நீதி', விஜய் நடிப்பில் வெளியான 'ரசிகன்' போன்ற படங்கள் நூறு நாட்களை கடந்து இத்திரையரங்கத்தில் ஓடியிருக்கின்றன.
'காவல்காரன்' படத்தில் கதாநாயகியாக நடித்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, இந்த படத்தின் வெற்றி விழாவில் இந்த திரையரங்கத்தில் நடந்தபோது இங்கு வந்து பேசியுள்ளார் என நினைவுகூர்கிறார் இந்தத் திரையரங்கில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் மேலாளர் வெங்கட்ராம்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நுழைந்தவுடன் வாகனங்களை நிறுத்துவதற்கான மிகப் பெரிய காலி இடத்துடன் ரசிகர்களை வரவேற்ற இந்தத் திரையரங்குதான், வடசென்னையில் முதன் முதலில் 'டால்ஃபி அட்மோஸ்' என்ற தொழில்நுட்பம் பொறுத்தப்பட்ட முதல் திரையரங்கு.

டால்ஃபி அட்மோஸ் தொழில்நுட்பத்துடன் பதிவுசெய்யப்பட்ட குருதிப் புனல் திரைப்படம் இங்கு வெளியானபோது, ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
ஆனால், குளிர்சாதன வசதி இல்லாதது இந்தத் திரையரங்கின் மிகப் பெரிய பலவீனமாக இருந்தது. ஏ.சி. வசதி செய்ய வேண்டுமென்றால், திரையரங்கின் உயரத்தைக் குறைக்க வேண்டியிருந்தது. ஆனால், அகஸ்தியாவின் மிகப் பெரிய கவர்ச்சியே பிரம்மாண்டமான திரைதான் என்பதால், அதனைச் செய்ய உரிமையாளர்கள் விரும்பவில்லை.
1990களிலும் 2000த்திலும்கூட ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் நடைபோட்ட இந்தத் திரையரங்கு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தள்ளாடத்துவங்கியது. சினிமாக்களை மட்டுமே ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளின் வருகை நிலைமையை மிகவும் மோசமாக்கியது.
கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக இந்தத் திரையரங்கில் கடைசியாக ஓடிய திரைப்படம் எம்.ஜி.ஆரின் ரகசிய போலீஸ் 115. 1968ல் இந்தப் படம் அகஸ்தியாவில்தான் வெளியாகி நூறு நாட்களைத் தாண்டி வெற்றிநடை போட்டது. ஆனால், இப்போது மீண்டும் திரையிடப்பட்டபோது, ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது.
கொரோனா பரவலையடுத்து மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், எப்போது மீண்டும் திறக்கப்படும் என்று தெரியாத நிலை நீடிப்பதால், அகஸ்தியாவை மூடுவதற்கு உரிமையாளர்கள் முடிவெடுத்திருக்கின்றனர்.
இந்த கொரோனா காலகட்டத்தில் இப்படி சென்னையில் மூடப்படும் திரையரங்கு அகஸ்தியா மட்டுமல்ல. அகஸ்தியாவிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்திருக்கும் மகாராணி, வடபழனியில் ஏ.வி.எம். வளாகத்தில் செயல்பட்டுவந்த ஏ.வி.எம். ராஜேஸ்வரி ஆகிய திரையரங்குகளும் மூடப்பட்டிருக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












