You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சண்டக் கோழி 2 - சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
2005ஆம் ஆண்டில் விஷால் - ராஜ்கிரண் - லிங்குசாமி கூட்டணியில் வெளிவந்த சண்டக் கோழி படத்தின் இரண்டாம் பாகம் அல்லது தொடர்ச்சி என்று இந்தப் படத்தைச் சொல்லலாம்.
சண்டக் கோழி படத்தில் வரும் அதே ஊர். அந்த ஊரில் உள்ள பேச்சியின் (வரலட்சுமி) கணவனை தகராறில் ஒருவர் கொன்றுவிட அந்தக் குடும்பத்தை முழுவதுமாக அழித்து பழிவாங்கத் துடிக்கிறாள் அவள்.
இதனால் கோவில் திருவிழா 7 ஆண்டுகளாக நடக்காமல் போகிறது. இந்த ஆண்டு அதை நடத்த நினைக்கும் துரை அய்யா (ராஜ்கிரண்), இரு தரப்பிடமும் சமாதானம் பேசி திருவிழாவை நடத்தத் துவங்குகிறார்.
வெளிநாட்டிலிருந்து பாலுவும் (விஷால்) அந்தத் திருவிழாவுக்கு வருகிறான். பேச்சி பழிவாங்கத் துடிக்கும் அன்பு என்ற இளைஞனை காப்பாற்றுவதாக துரை அய்யாவும் பாலுவும் உறுதி ஏற்கிறார்கள்.
ஊர்த் திருவிழா முழுமையாக நடந்ததா, அன்பு காப்பாற்றப்பட்டானா என்பது மீதிக் கதை.
படம் முழுக்க கதாநாயகனின் வீடு, திருவிழா நடக்கும் மந்தை ஆகிய இரண்டு இடங்களில்தான் நடக்கிறது. படத்தின் டைட்டில் கார்டு போடும்போதே கதையும் துவங்கிவிடுகிறது.
ஆனால், திருவிழா முடியும்வரை அன்புவைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை வரிக் கதையை சுவாரஸ்யமாக எவ்வளவு நேரம்தான் கொண்டு சொல்ல முடியும்?
அன்புவுக்குப் பிரச்சனை வரும்போது ஒன்று பாலு வந்து காப்பாற்றுகிறார். அல்லது அவரது தந்தை வந்து காப்பாற்றுகிறார். இதுவே படம் நெடுக மாற்றி மாற்றி நடந்துகொண்டே இருக்கிறது.
இதற்கு நடுவில் தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான கிராமத்துப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ். சாவித்ரி படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றவருக்கு, இந்தப் படத்தில் கதாநாயகனைப் பார்த்தவுடன் காதலிக்க வேண்டிய பாத்திரம். முதல் பாதியில் அவர் பேசும் வசனங்களுக்கும் அவரது நடிப்பிற்கும் சுத்தமாகப் பொருந்தவில்லை.
எத்தனையோ படங்களில் பார்த்துப் பார்த்து சலித்த காட்சிகள் படம் நெடுக வந்துகொண்டேயிருக்கின்றன.
அதனால், படத்தில் யாராவது சீரியஸாக ஏதாவது சொன்னால், திரையரங்கில் விழுந்துவிழுந்து சிரிக்கிறார்கள்.
அதனால், காமெடிக்கென்று தனியாக யாரும் இல்லை. "ஐயா, உங்களை எங்கையெல்லாம் தேடுறது. இங்க என்னைய்யா பண்ணிக்கிட்டிருக்கீங்க?" என்ற வசனத்தை எத்தனை படங்களில் கேட்பது?
கதாநாயகியின் திருமணம் நின்று போக, அருகில் இருக்கும் கரும்பலகையில் 'வாரணம் ஆயிரம்' பாடல் எழுதப்பட்டிருப்பது, கணவனை இழந்த வில்லியின் பொட்டு மழை பெய்து அழிவது என குறியீட்டுக் காட்சிகள் வேறு.
பரியேறும் பெருமாள் படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் வெகுவாகக் கவர்ந்த சண்முக ராஜா இந்தப் படத்தில் சீரியஸாக படம் நெடுக வருகிறார். ஒரு காட்சிகூட நடிக்க வாய்ப்பில்லை.
மு. ராமசாமி, தென்னவன் ஆகியோருக்கு படம் நெடுக, "ஐயா, விடுங்கைய்யா நாங்க பார்த்துக்கிறோம்" என்று சொல்வதும் ராஜ்கிரணையும் விஷாலையும் புகழ்வதும்தான் வேலை.
இந்த வழக்கமான கமர்ஷியல் படத்தில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.
சண்டக் கோழியில் இருந்த புத்துணர்ச்சியும் உற்சாகமும் கச்சிதமான திரைக்கதையையும் எதிர்பார்த்துப் போகிறவர்களுக்குக் கிடைப்பதென்னவோ மிகச் சுமாரான ஒரு அடிதடி திரைப்படம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்