You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சபரிமலை: பக்தர்களுடன் கலந்துவிட்ட போராட்டக்காரர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்
கேரளாவில் சபரிமலையை நோக்கிச் செல்லும் பெண்களைத் தடுத்துப் போராடிவந்த போராட்டக்காரர்கள், பக்தர்களுடன் கலந்து விட்டதால், யார் போராட்டக்காரர்கள், யார் பக்தர்கள் என கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பம்பையைத் தாண்டியே, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முடியும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு முதல் முறையாக கோயில் நடை புதன்கிழமையன்று திறந்தபோது உச்சநீதிமன்ற தீர்ப்புபடி பெண்கள் உள்ளே நுழையக்கூடாது என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களையும் பாஜக ஆதரவு போராட்டக்காரர்கள் தாக்கியதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்நிலையில் இன்று அப்பகுதி முழுவதும், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை போராட்டம் எதுவும் நடைபெறவில்லை என்றும் எந்தப் பெண்களும் வரவில்லை என்றும் பம்பையில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் பக்தர்களுடன் ஒன்றாக கலந்திருப்பதால், யாரையும் தடுத்த நிறுத்தி சோதனை செய்தால் பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், அங்கு செய்தி சேகரிக்க சென்ற நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் சுஹாசினி ராஜ், தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். அவரை யாரேனும் தாக்கக்கூடும் என்பதினால், போலீஸார் அவரை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளனர்.
நேற்று செய்தி சேகரிக்க வந்த வாகனங்களை தாக்கிய போராட்டக்காரர்கள், செய்தியாளர்களையும் அவதூறாக பேசியுள்ளனர்.
செய்தியாளர்களும், காவல்துறையினருமே போராட்டக்காரர்களின் இலக்காக உள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலைக்கு செல்லும் சிலர், 'சேவ் சபரிமலா' என்ற பதாகைகளை கழுத்தில் ஏந்தி செல்கின்றனர்.
இன்று காலையில் இருந்து போராட்டம் ஏதும் நடைபெறவில்லை என்றாலும், அப்பகுதி முழுவதிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பத்து முதல் ஐம்பது வயது வரையுள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு பலஆண்டுகளாக தடை இருந்துவந்தது. இந்த தடையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நீக்கிவிட்டாலும், சபரிமலைக்கு செல்லும்வழியில் உள்ள இந்த நிலக்கல் கிராமத்தில், கடந்த ஒரு வாரகாலமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடந்துவந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்