You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின் விடுதலை
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்குப் பிறகு இன்று (10) புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது.
சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவொன்றை மையப்படுத்தி இரத்தினபுரியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் வாழ்த்துச் செய்தியொன்று பேஸ்புக்கில் பதியப்பட்டுள்ளது. தினேஸ் குமார் என்ற இளைஞனே குறித்த சர்ச்சையான பதிவை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பதிவை லைக் செய்ததாகவே விதுசன் என்ற இளைஞனும் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
விதுசனுக்கு பிணை வழங்க வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்த மீளாய்வு மனுவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகீ ராஜரத்ன இன்று புதன்கிழமை ஆராய்ந்தார். இறுதியாக விதுசனுக்கு பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி, முன்னாள் இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஒரே நாளில் பிணை வழங்க முடியுமெனில், லைக் செய்த இந்த இளைஞனை 10 மாதம் தடுத்துவைத்திருந்தது எவ்வகையில் நியாயம் என நீதிபதி வினவியுள்ளார்.
சர்ச்சைக்குரிய வாழ்த்துச் செய்தியை பதிவிட்ட குற்றச்சாட்டில் கைதான தினேஸ் குமார் என்ற இளைஞருக்கு பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அவருக்கு பிணை பெறுவதில் சிக்கல் இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
வாழ்த்துச் செய்தியில் என்ன இருந்தது?
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படமும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இலச்சினையும் அந்தப் பதிவில் இருந்ததாக முறையிடப்பட்டுள்ளது. நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த ஒரு பதிவை தனது பேஸ்புக்கில் விதுசன் என்ற இளைஞர்,லைக் செய்து, ஷேர் செய்துள்ளார் என குற்றசம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னதாக இரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. பின்னர் இந்த விவகாரம் தேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளது.
விதுசன் கைதுசெய்யப்படும்போது அவருக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. எனவே அவர் சிறுவர் நன்னடத்தை மையத்தில் கடந்த ஜூலை மாதம் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 18 வயது பூர்த்தியான பின்னர் (09.07.2018) கொழும்பு விளக்கமறியலில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார்.
என்ன நடந்தது என்பது குறித்து கைதுசெய்யப்பட்ட இளைஞர் விதுசனின் தயார் விவரித்தார்.
''குடும்பத்தில் கஷ்டம். மகன் சின்ன வயசுலே வேலைக்குப் போனாரு. நானும் நோயாளி. இன்னும் இரண்டு பிள்ளைகள் இருக்கு. வீட்டுக் கஸ்டத்தைப் பார்த்து மகன் வேலைக்குப் போனாரு. அவருக்கு 17 வயசு தான் ஆகிறது. மகனே வேலைக்குச் சென்று குடும்பத்தைப் பார்த்தார். இதன் போதுதான் பேஸ்புக்கில் லைக், ஷேர் செய்த சம்பவம் நடந்துள்ளது.
அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து வீட்டிற்கு வந்தனர். 2018 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி கொழும்பிற்கு அழைத்துவந்து நாமே எமது பிள்ளையை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம்.
அவர் தப்பு பண்ணிதாகக் கூறியே சிறையில் அடைத்துள்ளார்கள். 10 மாதங்களாக மகன் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அறியாமையினால் மகன் இதனைச் செய்துள்ளார். ஆனால் மகனை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே சிலர் அவருக்கு எதிராக முறையிட்டுள்ளனர்.'' என்று அவர் பி.பி.சி. தமிழிடம் கூறினார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் புகைப்படத்துடன், அந்த அமைப்பின், இலட்சினையுடன் புதுவருட வாழ்த்து, பேஸ்புக்கில் காட்சிப்படுத்தல், பகிர்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவ்விரு இளைஞர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் இந்த செயல் அமைந்ததா என்பது குறித்து தேடப்படுகிறது. 2007ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ICCRC சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய குறித்த பதிவு லைக் செய்யப்பட்டிருந்தால் அது குற்றமாகாது எனவும், ஷேர் செய்திருந்தால் அது குற்றத்தின் கீழ் வரும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்றில் விதுசன் பிணை மனு மீதான விசாரணைகளின் போது சட்டமா அதிபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அரச வழக்கறிஞர் ஒருவர் கூறியிருந்தார்.
சர்ச்சைக்குரிய பதிவு ஷேர் செய்யப்பட்டுள்ளதா, லைக் பண்ணப்பட்டுள்ளதா? ஷேர் செய்யப்பட்டிருந்தால் எவ்வளவு தூரம் பேஸ்புக் மூலம் பரவியிருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்குமாறு பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- சபரிமலை: கல்வீச்சு, தடியடி- தீவிரமடையும் போராட்டம்
- செளதி அரேபியா - அமெரிக்கா முரண்: எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?
- ஐம்பொன் சிலையில் தங்கம் எவ்வளவு? சோமாஸ்கந்தர் சிலை வழக்கின் பின்னணி என்ன?
- பாகிஸ்தான் சிறுமி வல்லுறவு-கொலை: தூக்கிலிடப்பட்டார் குற்றம்சாட்டப்பட்டவர்
- #MeeToo விவகாரம் - இலங்கையில் சர்ச்சைக்குள்ளான பாரதிராஜாவின் பேச்சு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்