You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செளதி அரேபியா அமெரிக்கா முரண்பாடு: எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?
அண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார் டிரம்ப்.
துருக்கி அதிகாரிகள் செளதிதான் ஜமாலை கொன்றுவிட்டது என குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், செளதி இதனை பொய் என மறுக்கிறது. எங்கள் மீது மேற்குலகம் நடவடிக்கை எடுத்தால் அதனைவிட கடுமையான பதில் நடவடிக்கை எடுப்போமென எச்சரித்துள்ளது.
ஒருவேளை அமெரிக்கா - அரேபியா இடையேயான முரண் அதிகமானால் விளைவுகள் என்ன மாதிரியாக இருக்கும்? எது மாதிரியான தாக்கங்களை செலுத்தும்?
எண்ணெய் விலை
பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு கணக்குப்படி, செளதியிடம்தான் உலகின் 18 சதவீத எண்ணெய் வளம் உள்ளது. அந்நாடுதான் உலகின் மிகப்பெரிய பெட்ரோல் ஏற்றுமதியாளர்.
இதன் காரணமாக எரிசக்தி துறையில் செளதி காத்திரமான பங்கை வகிக்கிறது.
ஒரு வேளை செளதி மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டால், செளதி தன் எண்ணெய் உற்பத்தியை குறைக்கும். பிற ஏற்றமதி நாடுகள் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காதபட்சத்தில் உலக சந்தையில் எண்ணெய் விலை கடுமையாக உயரும்.
செளதி அரசுக்கு சொந்தமான அல் அரேபியா பொது மேலாளர் துருக்கி அல்தாகில், எங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டால், மோசமான பொருளாதார சூழல் உலகத்தையே பாதிக்கும் என்று கூறி இருந்தார்.
ராணுவ ஒப்பந்தங்கள்
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பின் கணக்கீட்டின்படி, 2017 ஆம் ஆண்டு பாதுகாப்புக்காக அதிக நிதி ஒதுக்கும் நாடுகளில் செளதி மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
அமெரிக்காவுடன் 110 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தை கையொப்பமிட்டுள்ளது. பத்து ஆண்டுகளில் 350 பில்லியன் டாலர் அளவுக்கு இது உயரும். அமெரிக்க வராலாற்றில் வெள்ளை மாளிகை கையெழுத்திட்ட மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தம் இது.
செளதிக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் பிற நாடுகள் பிரிட்டன், பிரான்ஸ், மற்றும் ஜெர்மனி.
ஒரு வேளை செளதி மீது பொருளாதார தடை விதிக்கப்படும்பட்சத்தில் அந்நாடு ஆயுதங்களை சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்கின்றன செளதி ஊடகங்கள்.
பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு
மத்திய கிழக்கில் பயங்கரவாதத்தை கட்டுக்குள் வைக்க மேற்கத்திய சக்திகள் செளதியை பெரிதும் நம்பி இருக்கின்றன.
ஏமனில் போர் குற்றங்கள் புரிந்ததாக செளதி மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பிரிட்டன் பிரதமர் செளதிக்கு ஆதரவாகவே இருந்தார்.
இஸ்லாத்தின் பிறப்பிடமாக செளதி இருந்தாலும், ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போரில் அமெரிக்கா பக்கமே இருக்கிறது.
ஜமால் தொடர்பாக செளதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மேற்குக்கும் செளதிக்கும் இருக்கும் உறவு பாதிக்கப்படும் என்கிறார் துருக்கி அல்தாகில்.
உறவுகள் மாறும்
இரானின் ஆதிக்கத்தை கட்டுக்குள் வைக்க அமெரிக்காவுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறது செளதி.
ஷியா, சுன்னி அதிகார சண்டையும் மத்திய கிழக்கில் கடந்த பல தசாப்தமாக இருக்கும் பிரச்னைகளுக்கு காரணம்.
சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கு செளதி ஆதரவளித்தது. ஆனால், இரான், ரஷ்யா அந்நாட்டு அரசுக்கு ஆதரவளித்தன.
செளதி மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டால் இந்த கணக்குகள் எல்லாம் மாறும். ரஷ்யாவுடன் செளதி இணையும். இதன் காரணமாக இரானுடன் கூட செளதி கை கோர்க்கலாம் என்கிறார் அல்தாகில்.
வணிகமும், முதலீடும்
செளதி சந்தையை அமெரிக்கா இழக்க நேரிடலாம் என குறிப்பிடுகிறார் அல் அரேபியா பொதுச் செயலாளர் அல்தாகில்.
செளதியில் அமெரிக்க சந்தை 2017 ஆம் ஆண்டும் 46 பில்லியன் டாலர் என்ற மதிப்பில் இருக்கிறது. இரண்டு தரப்புக்கும் இடையேயான வணிகம் காரணமாக 165,000 வேலைவாய்ப்புகள் 2015 ஆம் ஆண்டு உருவானது. இவை பாதிக்கப்படலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்