You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சபரிமலை: பம்பையில் பெண்கள், பத்திரிகையாளர் மீது தாக்குதல், போராட்டக்காரர்கள் கைது #GroundReport
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கேரளாவில் சபரிமலை நோக்கி செல்லும் பெண்களை தடுத்துப் போராடிவந்த பாஜக ஆதரவு அமைப்பைச் சேர்ந்த பெண்களை போலீசார் நிலக்கல் கிராமத்தில் இருந்து அகற்றிய நிலையில் பெண் பக்தர்கள், பெண் பத்திரிகையாளர்கள் ஆகியோர் பம்பை வரை செல்லத் தொடங்கியுள்ளனர்.
பம்பையைத் தாண்டி செல்ல முயன்ற ஒரு தாயையும், மகளையும் அங்கே கூடியிருந்த 50 போராட்டக்காரர்கள் தடுக்க முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். ஆனால், அந்த தாயும் மகளும் பயந்துபோய் திரும்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் இருவரும் ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, முதல் முறையாக கோயில் நடை திறக்கும் நாளான இன்று (புதன்கிழமை) மலைக்கு வரும் பெண்களை தடுக்கும் நபர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்படும் என கேரள அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களையும் பாஜக ஆதரவு போராட்டக்காரர்கள் தாக்கியதாக செய்திகள் வெளியாகின்றன. தங்கள் நிறுவனத்தின் செய்தியாளர் சரிதா பாலன் தாக்கப்பட்டதாக நியூஸ் மினிட் தளத்தின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சபரிமலை அடிவாரத்தில் உள்ள நிலக்கல் கிராமத்தில் வாகனத் தணிக்கை செய்து, இளம் பெண்கள் இருந்தால் அவர்களை அங்கேயே இறக்கிவிட்டும் வந்த போராட்டக்காரர்கள் முன்னதாக அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் அமைத்திருந்த முகாம் பந்தலை போலீசார் அகற்றினர். இரவு முழுதும் பாட்டுப்பாடியும், பயணிகளை தடுத்து நிறுத்தியும் பெரிய அளவில் அமளியில் ஈடுபட்டுவந்த போராட்டக்காரர்கள் இப்போது அங்கு இல்லை.
அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தை ஆதரித்த ஜார்ஜ் எம்.எல்.ஏ.
பம்பைக்கு வந்த சுயேச்சை எம்.எல்.ஏ.வான பி.சி.ஜார்ஜ், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். "கோயிலுக்கு வரும் ஐந்து-ஆறு பெண்களுக்காக 2 கோடி பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறார்கள்" என்று குறிப்பிட்ட அவர், இங்கே நடப்பது போலீஸ் ராஜ்ஜியமா என்று கேள்வி கேட்டார்.
பம்பையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரில் இளம் பெண்களும் இருக்கிறார்கள்.
ஒரு குழு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டவுடன் வேறொரு போராட்டக்குழுவினர் அங்கு வந்துவிடுகிறார்கள்.
பத்து முதல் ஐம்பது வயது வரையுள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு பலஆண்டுகளாக தடை இருந்துவந்தது. இந்த தடையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நீக்கிவிட்டாலும், சபரிமலைக்கு செல்லும்வழியில் உள்ள இந்த நிலக்கல் கிராமத்தில், கடந்த ஒரு வாரகாலமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடந்துவந்தது.
செவ்வாயன்று, பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவுடன் செயல்படும் இந்து அமைப்பைச் சேர்ந்த பெண்கள் குழுவினர் சபரிமலைக்குச் செல்லும் வண்டிகளை அடிவாரமான நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி, அதில் இளவயது பெண்கள் இருந்தால், அவர்களை இறக்கிவிட்டு செல்ல நிர்ப்பந்தித்து வந்தனர்.
நிலக்கல் முகாமில் போராட்டம் நடத்திய பெண்கள் மற்றும் ஆண்கள் சுவாமி ஐயப்பன் புகைப்படம் ஒன்றை வைத்து, பூசை நடத்தி, பிரசாதம் வழங்கி, கோஷமிட்டனர். வண்டிகளை தடுத்து நிறுத்தும்போது சரண கோஷங்களை சொல்லி பெண்கள் இறங்க வேண்டும் என்று கூச்சலிட்டனர்.
சில வண்டிகளை தடுத்துநிறுத்தி கோஷமிட்ட அவர்கள் இளவயது பெண்கள் இருந்த மூன்று வண்டிகளை திருப்பி அனுப்பினார். காவல்துறையினர் சமாதானம் செய்துவைப்பதற்குள் அந்த வண்டிகளில் இருந்தவர்கள் அச்சத்தில் திரும்பிச் சென்ற காட்சிகளும் அரங்கேறின. பெண் பத்திரிகையாளர்களைக்கூட மலைக்கு அனுப்பப்போவதில்லை என போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துவந்தனர்.
ஆனால் செவ்வாயன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள அரசாங்கம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் என்றும் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு எந்த விதத்திலும் சிரமங்கள் ஏற்படாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோயிலுக்கு வரும் அனைத்துவயது பெண் பக்தர்க்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் கோயிலுக்கு செல்லும் வழியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்துபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இன்று நிலக்கல் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.
நிலக்கல்லில் போராட்டம் நடத்திவந்த நபர்கள் வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவித்து, போராட்ட பந்தலை அகற்றிவிட்டனர்.
புதன்கிழமை மாலை நடைதிறக்கப்படும் போது காவல்துறையின் பாதுகாப்புடன் பெண் பக்தர்கள் மலைக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்