You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புவியின் எதிர்காலம் உங்கள் கையில் - இதனை செய்வீர்களா?
"இப்போது செயலாற்றுங்கள். அல்லது மோசமான பிரச்சனையை எதிர்க்கொள்ளுங்கள்.!"
இந்த எச்சரிக்கையானது வெப்பமயமாதல் குறித்து ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உலகின் தலைசிறந்த பருவநிலை ஆய்வாளர்களிடமிருந்து வந்துள்ளது.
பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை நோக்கி அனைத்து நாடுகளும் பயணிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், இப்போது அதற்கு எதிராக புவி வெப்பம் அதிகரிப்பதாக எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது புவி வெப்ப அதிகரிப்பு 3 டிகிரி செல்சியஸ் அளவை நோக்கி செல்வதாக கூறுகிறார்கள்.
பருவநிலை மோசமாக பாதிப்படையாமல் இருக்க வேண்டுமென்றால் புவி வெப்ப அதிகரிப்பு 1.5 செல்சியஸுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இப்போதுள்ள சூழ்நிலை தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். ஆனால், இப்போதும் இதிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
மூன்றாண்டு ஆய்வுக்குப் பின் பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் (IPCC) விஞ்ஞானிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை தென்கொரியாவில் நடந்தது. இதற்குப் பின் 1.5 செல்சியஸ் வெப்ப அதிகரிப்பு பருவநிலையில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்குமென சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.
வெப்பம் இதே அளவு தொடர்ந்தால் கடுமையான வறட்சி, காட்டுத்தீ, வெள்ளம் ஏற்படும். இதன் காரணமாக மோசமான உணவு பற்றாக்குறை ஏற்படலாம், லட்சக்கணக்கானவர்கள் பஞ்சத்தில் சாக நேரிடலாம்.
சரி சாமான்யனாக நாம் என்ன செய்யலாம்? வெப்பத்தை குறைக்க, கட்டுக்குள் வைக்க என்ன மாதிரியான முயற்சிகளை எடுக்கலாம்?
அது குறித்து இக்கட்டுரை விவாதிக்கிறது.
என்ன செய்யலாம்?
ஏராளமான பொது அறிவு செயல் திட்டங்கள் இருப்பதாக கூறுகிறார் அரோமர் ரெவி. பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழு ஆய்வறிக்கையை தயாரித்தவர்களில் முதன்மையானவர் இவர்.
சாமானியர்கள் மற்றும் நுகர்வோர்கள்தான் உலகம் வெப்பமயமாவதை தடுப்பதில் முக்கிய பங்குவகிக்கப் போகிறார்கள் என்கிறார் அரோமர் ரெவி.
தினசரி வாழ்க்கையில் நம்மால் செய்ய முடிந்த சில விஷயங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்
வாய்ப்பிருந்தால் நடந்து செல்லுங்கள், மிதிவண்டியில் செல்லுங்கள். கூடுமானவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள். இது உடல்நலத்திற்கும் நல்லது, சுற்றுச்சூழலுக்கும் நல்லது.
பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழு ஆய்வறிக்கையை தயாரித்த குழுவில் மற்றொரு முக்கிய நபரான டெப்ரா, "நகரங்களில் நம் போக்குவரத்தை நாம் முடிவு செய்ய முடியும். நமக்கு பொது போக்குவரத்து இல்லாதபட்சத்தில், பொது போக்குவரத்தை உறுதி செய்யும் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுங்கள்".
அதுபோல, மின்சார வாகனங்களை தேர்ந்தெடுங்கள். விமான போக்குவரத்தை விட, தொடர்வண்டி போக்குவரத்தே சால சிறந்தது.
இயன்றால் உங்களது வணிக பயணத்தை ரத்து செய்துவிட்டு, காணொளி காட்சி மூலமாக கூட்டத்தை நடத்துங்கள்.
ஆற்றலை சேமியுங்கள்
இரண்டாவது மிக முக்கியமான விஷயம் ஆற்றலை சேமிப்பது. அதாவது இயன்றவரை மின்சாரத்தை பயன்படுத்துவதை குறையுங்கள். தேவையற்றபோது மின்விசிறியை பயன்படுத்தாமல் இருப்பது முதல் வாஷிங் மிஷன் பயன்படுத்துவது வரை மிக கவனமாக திட்டமிடுங்கள்.
இது உங்களுக்கு சாதாரணமான விஷயமாக தோன்றலாம். ஆனால், இந்த சிறு விஷயங்கள்தான் வியத்தகு விளைவுகளை தரும்.
ஹூம்... சொல்ல மறந்துவிட்டேன். அடுத்த முறை மின்சாதன பொருட்களை வாங்க செல்லும் போது, மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தி நிறைவாக வேலை செய்யும் மின்சாதன பொருளா என்று பாருங்கள். அதனை நிச்சயம் அந்த பொருட்களின் அட்டையில் குறிப்பிட்டு இருப்பார்கள்.
மற்றொரு யோசனையும் இருக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy)-க்கு மாறுங்கள். தண்ணீர் சூடேற்றும் சாதனம் முதல் உங்கள் மொபைல் சார்ஜர் வரை சூர்ய ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாமிசம் உண்பதை குறைத்துக் கொள்ளுங்கள்
நம்புவதற்கு கடினமாகதான் இருக்கும், அதீத விவசாய உற்பத்தியும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.
கறிகோழிகள் வளர்ப்பது, தண்ணீர் அதிகம் உறிஞ்சும் பணப்பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வது பசுமை இல்ல வாயுவை வெளியேற்றும். புவியை வெப்பமாக்கும்.
பாரிஸ் பருவநிலை மாற்ற சந்திப்பில், 119 நாடுகள் விவசாயத்தினால் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுவை குறைப்பதாக உறுதி அளித்தன. அந்த நாடுகள் எவ்வாறு அதனை செய்யும் என்று நமக்கு தெரியாது. ஆனால், நாம் மனது வைத்தால் நிச்சயம் முடியும்.
ஏற்கெனவே சொல்லியது போலதான், நம் உணவு பழக்கத்தை கொஞ்சம் மாற்ற வேண்டும். மாமிசம் உண்பதை குறைத்து, அதற்கு ஈடாக காய்கறி, பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், உங்கள் பகுதியில் எது விளைகிறதோ, அதனை உண்ணுங்கள்.
குறைப்பு மற்றும் மறுபயன்பாடு
மறுசுழற்சி குறித்து நமக்கு முன்பே தெரியும். பள்ளிக் காலத்திலிருந்தே பலர் நமக்கு அது குறித்து வகுப்பெடுத்து இருக்கிறார்கள். ஆனால், துரதிருஷ்டம் என்னவென்றால், மறுசழற்சிக்கு பயன்படும் பொருட்கள்கூட வெப்பமயமாதலுக்கு ஒரு காரணிதான்.
சால சிறந்தது என்னவென்றால், நம் நுகர்வை குறைத்துக் கொள்வது மற்றும் பொருட்களை தூக்கி எறியாமல் கூடுமானவரை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதுதான்.
இது தண்ணீருக்கும் பொருந்தும்.
கற்பியுங்கள்
உங்களுக்கு தகவலை பெறும் வசதி இருக்கிறது. உங்களால் பருவநிலை மாற்றம் குறித்தான செய்திகளை தெரிந்துக் கொள்ள முடியும். ஆனால், இது குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் உரையாடுங்கள். இந்த விஷயத்தை கொண்டு சேருங்கள்.
வளங்குன்றா வாழ்வு குறித்து விருப்பமுடையவர்கள் ஒன்றிணையுங்கள்.
நாளைய தலைமுறைக்கு இந்த புவி மிச்சம் இருக்க வேண்டுமென்று நினைத்தால் நாம் இதனை செய்ய வேண்டும். "இப்போது செயலாற்றுங்கள். அல்லது மோசமான பிரச்சனையை எதிர்க்கொள்ளுங்கள்.!" என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். நாளைய தலைமுறை மோசமான பிரச்சனையை எதிர்கொள்ள இந்த தலைமுறை செய்த தவறுகள் காரணமாக அமைந்துவிட வேண்டாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :