You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்கள் காரணமில்லை என்கிறார் டொனால்ட் டிரம்ப்
பருவ நிலை மாற்றம் தொடர்பான விஞ்ஞானிகளுக்கு அரசியல் திட்டம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன் புவியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்களின் நடவடிக்கைகள்தான் காரணம் என்று சொல்வதில் தமக்கு சந்தேகம் இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு புவியின் வெப்பநிலை அதிகரிக்கிறது என்ற வாதம் ஒரு புரளி என்று பேசி வந்த டிரம்ப் தற்போது புவியின் வெப்பநிலை அதிகரிக்கிறது என்பது புரளி அல்ல என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.
"வெப்பநிலை அதிகரிக்கிறது என்பது புரளி என்று நான் நினைக்கவில்லை. வெப்பநிலை வேறுபாடு இருக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் இது மனிதர்களால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பல்லாயிரம் கோடி டாலர்களை இதற்காக செலவிடவோ, பல பத்து லட்சம் வேலை வாய்ப்புகளை இதற்காக இழக்கவோ நான் தயாரில்லை. பாதக நிலைக்கு என்னை ஆளாக்கிக்கொள்வதும் எனக்கு உடன்பாடில்லை," என்று செய்தியாளர் லெஸ்லீ ஸ்டல்-லிடம் தெரிவித்துள்ளார் டிரம்ப்.
"புவி வெப்ப நிலை குறையும்" என்று கூறிய அவர், அது எப்படி குறையும் என்றும் கூறவில்லை.
பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு (ஐபிசிசி) சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கை உலகின் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது. உயரும் வெப்பநிலையைத் தடுக்க நடவடிக்கை தேவை என்ற இறுதி எச்சரிக்கையையும் அந்த அறிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிக்கை வெளியான ஒரு வாரத்தில் சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார். தாம் பதவியேற்ற பிறகு உலகில் பெரும்பான்மை நாடுகள் பங்கேற்றிருக்கும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கினார் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கையிலேயே வெப்ப நிலையில் நிலவும் ஊசலாட்டத்தை மனித நடவடிக்கைகள் மேலும் மோசமாக்கியுள்ளதாக கூறியுள்ள விஞ்ஞானிகள், தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு இருந்ததைவிட தற்போதைய வெப்ப நிலை 1 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்திருப்பதற்கு இந்த நடவடிக்கைகளே காரணம் என்று கூறியுள்ளனர்.
தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய நிலையைவிட வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியசுக்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதற்கு அதிவேகமான, வரலாறு காணாத, நீண்டகால மாற்றங்களை செய்யவேண்டியது அவசியம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
2010ம் ஆண்டு உலகம் வெளியிட்ட கார்பன்டை ஆக்சைடு அளவைவிட 2030ம் ஆண்டு 45 சதவீதம் குறைவாக அந்த வாயுவை வெளியிடும் அளவில் கடுமையான மாற்றங்கள் தேவை என்றும், நிலக்கரி பயன்பாட்டை கிட்டத்தட்ட கைவிடவேண்டும் என்றும், 70 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் எரிபொருள் உற்பத்திக்கான பயிர்களை சாகுபடி செய்யவேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்