சபரிமலை: 'கோயிலுக்குள் பெண்கள் நுழைய சரியான நேரம் எதுவுமில்லை'

இந்தியாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரளாவில் இருக்கும் சபரிமலைக் கோயிலில், 10 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது மாதவிடாய் ஏற்படும் வயதில் இருக்கும் பெண்கள், அங்கு செல்ல அனுமதி கிடையாது.

பாலின சமத்துவத்தை அடிப்படையாக கொண்டு 2006ஆம் ஆண்டு, பெண் வழக்கறிஞர்கள் சிலர் இது தொடர்பாக மனுதாக்கல் செய்தனர். இந்து மதத்தின்படி மாதவிடாயின்போது பெண்கள் அசுத்தமானவர்கள் என்று அவர்கள் கோயில்களில் நுழைய தடை இருந்து வருகிறது.

முன்னதாக இது குறித்து பேசிய அக்கோயில் அதிகாரிகள், ஐயப்ப சுவாமி 'பிரம்மச்சாரி' என்பதால் இந்த வழக்கத்தை பின்பற்றி வருவதாக தெரிவித்தனர்.

சபரிமலையில் பெண்கள் நுழையக்கூடாது என்பதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், இந்த வழக்கம் நீண்ட நாட்களாக இருந்து வருவதாக வாதிடுகின்றனர்.

சபரிமலைக் கோயிலுக்கு ஐயப்ப வழிபாட்டிற்காக செல்பவர்கள், 41 நாட்கள் விரதம் இருந்து செல்ல வேண்டும். உடலியல் காரணங்களால் மாதவிடாய் இருக்கும் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

2006ஆம் ஆண்டே இதனை எதிர்த்து வழக்கு போடப்பட்டாலும், 2016ல்தான் இது விசாரிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விசாரணையில், அரசியல் அமைப்பு வழங்கியுள்ள பாலின சமத்துவத்துக்கு எதிராக இந்த வழக்கம் இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோயிலுக்குள் நுழைய பெண்கள் என பாரபட்சம் காட்டப்படுவதாகவும் , அவர்கள் வழிபடும் உரிமைகளுக்கு எதிராக இது இருப்பதாகவும் வாதிடப்பட்டது.

2016ஆம் ஆண்டு, இதனை கேரள அரசு எதிர்த்தாலும், சமீபகால விசாரணைகளில் மனுதாரர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக நடந்து கொண்டது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், சபரிமலைக் கோயிலில் பின்பற்றப்படும் வழக்கம், ஒரு மனத்தடை என்றும், பெண்களை அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த, அதாவது இந்த வழக்கம் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளதா அல்லது இது "அத்தியாவசிய மத நடைமுறையா" என்பதை விசாரிக்க 2017ஆம் ஆண்டு அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்தது.

யாரும் எந்த மதத்தையும் பின்பற்ற சுதந்திரம் உள்ளது என அரசியல் சாசன பிரிவு 25 கூறுகிறது.

சபரிமலைக் கோயிலின் முக்கியத்துவம் என்ன?

இந்தியாவில் உள்ள இந்து வழிபாட்டு தளங்களில் சபரிமலை மிக முக்கியமான ஒன்று. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவது வழக்கம்.

இந்த கோயிலுக்குள் நுழைய, யாத்ரீகர்கள் 18 புனித படிகள் ஏற வேண்டும். சபரிமலைக் கோயிலின் இணையதளத்தின்படி, இந்த 18 படிகளும் மிக புனிதமானவை. 41 நாட்கள் கடும் விரதம் இருக்காமல் இதனை ஏற முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலுக்கு செல்லும் முன், சில சடங்குகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும். கருப்பு மற்றும் நீல வண்ண உடை மட்டுமே அணிய வேண்டும். 41 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு முடியும் வரை அவர்கள் சவரம் செய்யக்கூடாது. நெற்றியல் சந்தனம் வைத்திருக்க வேண்டும்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கோரி பிரசாரம்

2016ஆம் ஆண்டு, சபரிமலையில் பின்பற்றப்படும் வழக்கத்திற்கு எதிராக பெண்கள் பிரசாரம் மேற்கொண்டனர். கோயில் தலைவர் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலடியாக இது மேற்கொள்ளப்பட்டது.

மாதவிடாய் இல்லாமல் சுத்தமாக இருக்கிறார்களா என்பதை அறிய ஒரு கருவி கண்டுபிடித்த பிறகுதான், பெண்களை அனுமதிப்பேன் என்று தலைவர் ப்ரயர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

"சபரிமலைக் கோயிலில் பெண்களை ஆண்டு முழுவதும் அனுமதிக்கக் கூடாது என்று மக்கள் கூறும் நேரம் வரும்" என்றும் அவர் கூறியிருந்தார்.

"இப்போது மனிதர்களின் உடலில் ஏதேனும் ஆயுதங்கள் உள்ளதா என்பதை அறிய கருவி வந்துவிட்டது. பெண்கள் கோயிலுக்குள் நுழைய இது 'சரியான நேரமா' என்பதை கண்டுபிடிக்கவும் விரைவில் ஒரு கருவி கண்டுபிடிக்கப்படும். எப்போது அந்த கருவி கண்டுபிடிக்கப்படுகிறதோ, கோயில்களுக்குள் பெண்கள் நுழைய அனுமதி வழங்குவது குறித்து பேசுவோம்" என்றார்.

கோபாலகிருஷ்ணனின் இந்த கருத்துகள், பெண்களுக்கிடையே பெரும் கிளர்ச்சியை கிளப்பியது. இதனையடுத்து, #HappyToBleed என்ற பிரசாரம் ஃபேஸ்புக்கில் தொடங்கப்பட்டது.

இந்த பிரசாரத்தை தொடங்கிய நிகிதா அசாத் பிபிசியிடம் பேசியபோது, கோயிலுக்குள் நுழைய "சரியான நேரம்" என்ற ஒன்று கிடையாது. "எப்போது வேண்டுமோ எங்கு வேண்டுமோ" அங்கு செல்ல பெண்களுக்கு உரிமை உள்ளது என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :