You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரோஹிஞ்சா: ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா
மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளது.
மியான்மரில் ரோஹிஞ்சா சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த, முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மரில் மக்களாட்சியை நிறுவ மேற்கொண்ட முயற்சிகளுக்காக ஆங் சான் சூச்சிக்கு 1991இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ரோஹிஞ்சா இன மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைகள் தொடர்பாக மியான்மர் ராணுவ அதிகாரிகளை விசாரணை செய்ய வேண்டும் என்று ஐ.நா கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலமாக மியான்மரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் இதுவரை சுமார் ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரை விட்டே வெளியேறியுள்ளனர்.
சூச்சி இன்னும் கௌரவ குடியுரிமைக்குத் தகுதியானவராக உள்ளாரா என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேள்வி எழுப்பிய மறு நாளே ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவையின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் மியான்மரில், நாடற்ற ரோஹிஞ்சா இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் சூச்சிக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ குடியுரிமையை ரத்து செய்வதால் நிற்கப்போவதில்லை என்றும் ட்ரூடோ கூறியிருந்தார்.
2007இல் ஆங் சான் சூச்சிக்கு கனடா கௌரவ குடியுரிமை வழங்கியது. இவ்வாறு கௌரவிக்கப்பட்ட ஆறு பேரில் சூச்சியும் ஒருவராக இருந்தார்.
கனடா நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுத் தீர்மானம் மூலமே கௌரவக் குடியுரிமை வழங்கப்படுகிறது. அதே போன்றதொரு கூட்டுத் தீர்மானம் மூலம் மட்டுமே அதை திரும்பப்பெற முடியும் என்று கனேடிய அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளனர்.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை என்று லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ லெஸ்லி, வியாழன்று நடந்த வாக்கெடுப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த மாதத் தொடக்கத்தில் ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை இனப்படுகொலையாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஒரு மனதாக நிறைவேற்றியது.
மியான்மரில் மக்களாட்சி மீண்டும் நிறுவப்பட்டபின் அந்நாட்டு நிர்வாகத்தின் செயல்முறைத் தலைவராக 2015இல் ஆங் சான் சூச்சி பொறுப்பேற்றார்.
மியான்மர் ராணுவம் கொடூரமான வன்முறையில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்படும் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் சூச்சிக்கு தொடர்ந்து சர்வதேச அழுத்தம் இருந்தாலும், வன்முறைகள் நடக்கவில்லை என்று அவர் மறுத்து வருகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :