You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரோஹிஞ்சா: ஊடகவியலாளர்களின் தண்டனையை நியாயப்படுத்தும் ஆங் சான் சூச்சி
மியான்மரில் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய இரு ராய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி ஆதரித்துள்ளார்.
இந்த இரு ஊடகவியலாளர்களுக்கு ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களைபெற்றது.
வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய அந்த இரண்டு செய்தியாளர்களும் சட்டத்தை மீறிவிட்டதாக தெரிவித்த ஆங் சான் சூச்சி, இவ்விருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் எந்தவகையிலும் தொடர்பில்லை என்று கூறினார்.
ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் படுகொலை தொடர்பான போலீஸ் ஆவணங்களை வைத்திருந்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி மியான்மரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் இல்லையென்றாலும், அவ்வாறே உலகெங்குமிலும் பார்க்கப்படுகிறார்.
ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் பிரச்சனை தொடர்பாகவும், மிக அண்மையில் பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பாகவும் சர்வதேச அளவில் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தபோது யாங்கூன் நீதிமன்றத்தின் நீதிபதி யீ லின், "தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் அவர்களுக்கு இருந்தது மற்றும் தேசிய ரகசிய சட்டத்தை மீறியது நிரூபிக்கப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, ஊடக நெறிமுறைகளை பின்பற்றியே தாங்கள் பணிபுரிந்ததாக கூறி இருந்தார் வ லோன்.
"இங்கு நிலவும் நிலைமையின் அடிப்படையில் நாங்கள் உண்மையை சொல்ல முயன்றோம்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
தீர்ப்புக்குப் பின் வ லோன், "நான் இதற்கெல்லாம் அச்சப்படவில்லை" என்று கூறினார்.
மேலும் அவர், "நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு நீதியின் மீது, ஜனநாயகத்தின் மீது சுதந்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது." என்றார்.
சர்வதேச அளவில் பலரும் இந்த தண்டனைக்கு எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்த நிலையில், இது குறித்து இன்று (வியாழக்கிழமை) ஆங் சான் சூச்சி தனது மெளனத்தை கலைத்துள்ளார்.
சட்டத்தை இந்த தீர்ப்பு நிலைநிறுத்தியதாக தெரிவித்த அவர், விமர்சகர்கள் இந்த தீர்ப்பின் முழு விவரத்தையும் படிக்கவில்லை என்றும் கூறினார்.
இவ்விரு பத்திரிக்கையாளர்களுக்கும் ''இந்த தீர்ப்பு குறித்து முறையீடு செய்யவும், ஏன் இந்த தீர்ப்பு தவறு என்று வாதிடுவதற்கு உரிமையும் உண்டு'' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்