You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"சாதிய பத்தி கோலிசோடா-2ல் பேசியிருக்கோம்" - விஜய் மில்டன் பேட்டி
திரைப்பட ஒளிப்பதிவாளரும், கோலிசோடா, 'பத்து எண்றதுக்குள்ள' உள்ளிட்ட படங்களின் இயக்குநருமான விஜய் மில்டன் அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள கோலிசோடா2 படம் பற்றியும் அவரது பிற திரைத்துறை அனுபவங்கள் பற்றியும் பிபிசி தமிழ் உடனான பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார்.
பொதுவாக இரண்டாம் பாகம் என்று கூறப்படும் கதைகளில் முதல் பாகத்தின் தொடர்ச்சியையே படமாக எடுப்பார்கள். இந்தப் படத்தில் வேறு கதையை படமாக்கி இருக்கிறீர்களே?
"கோலிசோடா-2 கோலிசோடாவுடைய தொடர்ச்சி கிடையாது. இது கோலிசோடாவுடைய அடுத்த லெவல். முதல் பாகத்துல அனைவருக்கும் அடையாளம் வேணும்னு பேசியிருந்தோம். இந்த இரண்டாம் பாகத்தில் கிடைக்கும் அடையாளத்தை எப்படி காப்பத்திக்கிறது, பெருசு பண்ணிக்கிறது, அதுல என்னென்ன பிரச்சனைகள் வரும். அதை பசங்க எப்படி மோதி ஜெயிக்கிறது என்பத பேசியிருக்கோம். இதனால் உணர்ச்சிபூர்வமா முதல்பாகத்துடைய தொடர்ச்சிதான் கோலிசோடா 2".
கோலிசோடா, கடுகு, கோலிசோடா 2 ஆகிய படங்களில்விளிம்பு நிலை மக்களை பற்றி தொடர்ந்து படமாக்குகிறீர்களே? அதற்கு எதாவது காரணம் உண்டா?
கோலிசோடா 1, கோலிசோடா 2, கடுகு எல்லாமே சமூகத்துல நாம பாக்குற சாதாரண மக்களுடைய கதை. பத்து எண்றதுக்குள்ள, அழகாய் இருக்காய் பயமாய் இருக்கிறது ஆகிய இரண்டு படங்களும் நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள். எப்பவும் இயல்பான கதைகளை புதுமுகங்களை வெச்சு எடுக்கும்போது அது எளிதாக சென்று சேரும். அதோடு அவங்கதான் சரியா இருப்பாங்க. அவங்களதான் இயல்பான மனிதர்கள்னு ரசிகர்கள் நம்புவாங்க. நட்சத்திரங்களை வெச்சு படம் எடுத்தா அவங்க ஏற்கவே பல நடனமாடிருப்பாங்க, காதல் காட்சிகள்ள நடிச்சியிருப்பாங்க, வெளி நாடுகளில் பாடல் காட்சியில் நடித்திருப்பாங்க, பத்து பேர அடிச்சிருப்பாரு. அவங்களை வைத்து எதார்த்தமான படங்களை கொடுக்க முடியாது. என்னதான் பண்ணாலும் சினிமா மாதிரிதான் இருக்கும். அதனாலதான் எதார்த்தமான கதைகளை பண்ணும்போது புது நடிகர்காளை வெச்சு படம் பண்றேன்.
இந்த படத்தில் வசனங்கள் சமூக நோக்கத்துடனேயே எழுதப்பட்டுள்ளன. இப்போதைய சமுக நிலை பற்றிய உங்களின் கருத்து என்ன?
படம் வெளிய வந்துடுச்சி. வசனத்தை எல்லோரும் பாராட்டுறாங்க. எல்லா இயக்குனர்களுக்குமே ஒரு அரசியல் நிலைபாடு இருக்கும். நம்மல சுத்தி என்ன நடக்குதுங்கிற அக்கறை இருக்கும். அதை அப்படியே சொல்லனும்னு அவசியம் இல்ல. சில விஷயங்கள படத்துல இருக்கிற கதாபத்திரங்கள் மூலம் சொல்றோம். இந்த படத்துல என்ன அரசியல் நிலைப்பாடு இருக்கிறதோ அதுதான் என்னுடைய நிலைப்பாடு.
கோலிசோடா 2 கதையை முன்னணி நடிகர்களை வைத்து எடுத்திருக்கலாம் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்ததா?
கோலிசோடா 2 நூறு சதவீதம் புதியவர்களை வெச்சுதான் பண்ண முடியும். ஏற்கனேவே உள்ள நடிகர்களை நடிக்க அது சரியா வராது. ஏன்னா பல படங்கள்ளல அவங்கள ரசிகர்கள் பர்த்திருப்பாங்க. நாம இந்த படத்துல பத்தாயிரம் ரூபாய்க்கு பிரச்சனை இருக்கு, அவனால பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியிலனு சொல்லும்போது புது நடிகர்கள் என்றால்தான் பாவம் அவன், அவனால அந்த பணத்த சம்பாதிக்க முடியலனு ரசிகர்கள் நம்புவாங்க.
பெரிய பரிச்சயம் இல்லாத நடிகர்களோடு வேலை செய்வது உங்களுக்கு வசதியாக உள்ளதா?
புது நடிகர்களோடு வேலை செய்யும்போது சாதக பாதகம் ரெண்டுமே இருக்கும். சினிமா மட்டுமில்லை, வாழ்க்கையின் பல விஷயத்துலயும் சாதக பாதகம் கலந்துதானே இருக்கும். அதுல எது அதிகமா இருக்குன்னு நாம பார்த்து பயண்படுத்திக்க வேண்டும். புதிய நடிகர்களை வெச்சு படம் பண்ணும்போது சாதகம் என்னனா, முதல்ல தேதி பிரச்சனை இல்லை. ரெண்டாவது நாம சொல்லக்கூடிய விஷயம் ரசிகர்கள்குள்ள இறங்கிடும். ரசிகர்களை நம்ப வைப்பது எளிது.
குறைந்த பட்ஜெட் படங்கள் உங்களுக்கு பொருத்தமாக உள்ளதா? இல்லை பெரிய பட்ஜெட் படங்களா?
குறைந்த பட்ஜெட், பெரிய பட்ஜெட் ஒரு பிரச்சனையே இல்லை. நாம வேலை செய்யக்கூடிய விதம், பிரச்சனை, போராட்டங்களும் ஒன்னுதான். அதுல நடிக்கிறது யாரு? அவங்களுடைய சம்பளம் எவ்வளவு அப்படிங்கிறதுலதான் படத்துடைய பட்ஜெட் நிர்ணமாகுது. ஒரு படத்துடைய பட்ஜெட்ல 80 சதவீதம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளத்துலயே போகுது. மீதம் இருக்க 20 சதவீதம்தான் புரெடெக்ஷன்குள்ளே வருது. அதனால பெரிய பட்ஜெட்டா இருந்தாலும் சின்ன பட்ஜெட்டா இருந்தாலும் புரொடெக்ஷனுக்குள்ளே வருவது ஒன்னுதான்.
கோலி சோடா 2 படத்தில் அதிக இயக்குநர்களை நடிக்க வைத்துள்ளீர்கள். இதன் பின்னணி என்ன?
கோலிசோடா 2ல் சரவண சுப்பையா, சமுத்திரகனி, கவுதம் மேனன், வின்செண்ட் செல்வா, ரோஹினி, நகுலன் உள்ளிட்ட எட்டு இயக்குனர்கள் நடிச்சிருக்காங்க. இயக்குநர்களோடு வேலை செய்வது ரொம்ப ஈஸி. சொல்ற விஷயத்தை எளிமையா உள்வாங்கிக்குவாங்க. ஒரே துறையை சேர்ந்தவங்களோடு வேலை செய்வது எளிது. ஒரே மொழி ஆட்கள் பேசிக்கொள்வது போன்றது.
படத்தில் சாதி சார்ந்த வசனங்கள் அதிகம் இருப்பது போல் தோன்றுகிறதே?
சாதிய பத்தி படத்துல பேசியிருக்கோம். இந்த ஜாதி வேண்டாம், அந்த ஜாதி வேண்டாம்னு சொல்லல. ஜாதியே வேண்டாம்னுதான் சொல்லியிருக்கோம். அந்த அமைப்பே தப்புனுதான்னு சொல்லியிருக்கோம். அது நல்லாவே வந்திருக்கு.
இதற்கு மேல் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் எண்ணம் இருக்கிறதா?
பெரிய நடிகர்களை வெச்சு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருக்கு..
ஓர் இயக்குநர் தயாரிப்பாளராகவும் இருப்பதில் என்ன சாதக பாதகங்கள் உள்ளன?
பதில் - ஒரு இயக்குநருக்கு கிரியேட்டிவ் விஷயங்கள்தான் மனசுல இருக்கனும். எத்தன கார் வந்திருக்கு, அதுக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பது இருக்க கூடாது. ஆனா இயக்குநரே தயாரிப்பாளரா இருக்கும்போது இந்த பிரச்சனை வரும். இருந்தாலும் அந்த விஷயங்களைக் கையாள என்னுடைய தம்பி இருக்கான். அவன் எல்லா விஷயங்களையும் பாத்துக்குவான். அதனால் அந்த கவலை எனக்கு இல்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்