You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகள்களை சினிமா துறைக்கு அனுப்ப அம்மாக்கள் தயங்குவது ஏன்?
- எழுதியவர், ரித்திகா காமனி
- பதவி, பிபிசி
இந்திய சினிமா தொழிலில் பாலியல் துஷ்பிரயோகம் நடப்பது சமீபத்திய காலங்களில் வெளிப்படையாக தெரியவந்திருக்கும் நிலையில் பல வளரும் கலைஞர்களின் அம்மாக்கள் இதுகுறித்து பிபிசியிடம் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
'' எனக்கு ஓரு கனவு இருந்தது, ஆனால் அதிலிருந்து நான் பின் வாங்கினேன்'' சினிமாவில் நடிக்க விரும்பிய பல இளம்பெண்களின் கருத்து இதுவாகத்தான் இருக்கிறது. பெற்றோரிடமிருந்து எதிர்ப்பு, பாதுகாப்பின்மை உள்ளிட்ட பல காரணங்களால் இளம்பெண்கள் இந்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
பொலிவுடன் காணப்படும் கவர்ச்சியான தொழிலானது ஆர்வத்தோடு நுழைய ஆசைப்படும் பல இளம்பெண்களுக்கு அவர்களது அம்மா போடும் தடைகளால் தொலைதூர கனவாகியுள்ளது.
கல்லூரி மாணவியான அனுஷா பெனகன்டி சினிமாவின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் அவரது பெற்றோர் அனுஷா சினிமாவை தனது வாழ்க்கைக்கான பிரதான தொழிலாக எடுத்துக்கொள்வதற்கு மறுத்ததால் சினிமா கனவை புதைத்துவிட்டார். பாலியல் நிர்பந்தங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் பாலியல் தொந்தரவு குறித்து தற்போது ஊடகங்களில் வெளிவரும் தொடர் செய்திகளால் தனது பெற்றோர்கள் தன்னை சினிமாவுக்கு அனுப்புவதில் அச்சமடைந்ததாக கூறினார்.
சினிமாவுக்கு தன்னை அனுப்புவதில் அவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை எனவே சினிமாவை தொழிலாக்கிக்கொள்ள தன்னை அனுமதிக்கவில்லை என அனுஷா கூறினார்.
மாடல் மற்றும் சில குறும்படங்களில் நடித்த ரூபியும் சினிமாவுக்குள் நுழைவதற்கு அவரது பெற்றோர்களின் மறுப்பைச் சந்தித்திருக்கிறார். சினிமா மீதான எனது ஆர்வத்தை நான் தெரிவித்ததும், இந்த ஆசையை நான் புதைக்காவிடில் எனக்கு திருமணம் செய்து வைத்துவிடுவதாக அதட்டினார்கள், மேலும் எனது படிப்பை நிறுத்தும் எல்லைவரை அவர்கள் சென்றார்கள் என்றார் ரூபி. ஊடகத்திடம் இது தொடர்பாக பேசுவதற்கு ரூபியின் அம்மா மறுத்துவிட்டார்.
பனிரெண்டாவது வகுப்பு படிக்கும் பிரத்யூஷாவுக்கு சில குறும்பட இயக்குனர்களிடம் இருந்து வந்த வாய்ப்பை அவளது பெற்றோர்கள் நிறுத்திவிட்டனர்.
பெரு நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் பிரத்யூஷாவின் அம்மா அனுராதா பேசுகையில் ''பொதுவாக அனைத்து பெற்றோர்களிடம் சினிமா துறை மீது எதிர்மறை எண்ணமே இருக்கிறது.அதுவே எங்களது குழந்தைகளை சினிமாவை அவர்களின் வாழ்க்கைக்கான பிரதான தொழிலாக எடுத்துக்கொள்ள நாங்கள் அனுமதிப்பதை தடுக்கிறது. நிஜ வாழ்க்கைக்கும் போலி வாழ்க்கைக்கும் இடையிலான வித்தியாசத்தை உணரும் அளவுக்கு இந்திய சமூகம் முதிர்ச்சியடைந்துவிட்டது என நான் நினைக்கவில்லை'' என்றார் அவர்.
''சினிமா தொழிலில் புகழ்பெறுவதைவிட ஒரு பெற்றோராக நாங்கள் எங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பான வாழ்க்கை அமையவேண்டும் என விரும்புகிறோம். ஒழுக்கம் மற்றும் மதிப்புகளை இழந்துதான் சினிமாவில் நிலைத்திருக்கமுடியம் என நாங்கள் உணர்கிறோம்'' என்கிறார் அனுராதா.
'' பல தொழில்களிலும் வேலைகளிலும் பாலுறவு நிர்பந்தங்கள் இன்னும் இருக்கலாம் ஆனால் சினிமா தொழில் உடல் சார்ந்ததாகவும் மேலும் சுரண்டலுக்கான கவர்ச்சியான வாய்ப்புகள் நிறைந்ததாகவும் உள்ளது. பெற்றோரின் ஏகப்பட்ட ஆதரவுடன் சில வெற்றி கதைகள் அங்கே இருக்கிறது எனினும் தனிப்பட்ட முறையில், நாங்கள் எங்களது குழந்தையை கவர்ச்சி உலகில் அனைத்து காயங்களை எதிர்கொள்ள விடுமளவிற்கு வலுவானவர்கள் அல்ல'' என அனுராதா முடிவாகச் சொன்னார்.
இருப்பினும், சில பெற்றோர்கள் தைரியமாக தங்களது மகள்களை அவர்கள் விரும்பிய சினிமா தொழிலில் ஈடுபட அனுமதித்தனர்.
மோனா ஜாவின் மகள் எஃப்டிஐ மாணவர்கள் தயாரித்த ஒரு திரைப்படத்தில் பிரதான கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொலிட்டிகள் சயின்ஸ் படிப்பில் அவர் மிகவும் திறமையானவர், இந்நிலையில் தனது மகள் சினிமாவில் நடிக்கும் முடிவை எடுத்துள்ளதை கேட்டபோது தனக்கு அதிர்ச்சியாக இருந்ததாக மோனா ஜா கூறுகிறார்.
'' ஆரம்பத்தில் அவளை நடிப்பதற்கு அனுப்ப நாங்கள் பயந்தோம் எனினும் அவளுடைய விருப்பத்தை நாங்கள் புரிந்துகொண்ட பிறகு தனது தொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்ள அவளை அனுமதித்தோம். ஒரு பெற்றோராக எங்களது முழு ஆதரவையும் அவளுக்கு வழங்கியுள்ளோம். எப்போது அவள் சினிமா தொழிலில் விரக்தி அடைகிறாளோ அப்போது அவள் தாராளமாக திரும்பிவருவாள்.
சினிமா தொடர்பான படிப்புகள் மற்றும் முறையான பயிற்சிகளை எடுத்துக்கொள்ளவும் மேலும் சினிமா துறை மீதான நிஜ நிலவரத்தை புரிந்துகொள்ளவும் நாங்கள் அறிவுறுத்தியிருக்கிறோம்.
சினிமா பின்னணி இல்லாத நிலையில் தனது மகள் சினிமாவுக்குள் நுழையப் போவதாக அறிவித்தபோது, அவள் அத்துறையில் வெற்றி அடைவாளா என்பதில் சந்தேகம் கொண்டதாக தெரிவித்துள்ளார் தென்னிந்திய திரைப்படங்களில் வெற்றிகரமான நடிகையாக கருதப்படும் திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன்.
இருப்பினும், த்ரிஷாவின் தந்தை தனது மகள் தான் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க ஒரு நிபந்தனையோடு அனுமதித்தார். திரைப்படங்களில் நடிப்பதில் தோல்வி அடைந்தால், நிச்சயம் திரும்பிவந்து படிப்பை தொடர வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. ஆனால் எனது மகள் திரும்பி வரவேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை என்கிறார் உமா.
''நாங்கள் எந்த சவால்களையும் சந்திக்கவில்லை மேலும் யாருடன் வேலை செய்கிறோம் என்பதில் கவனமாக இருந்தோம். சினிமாத்துறை தவறான இடமல்ல என நான் நம்புகிறேன். உங்களுடைய கடின உழைப்பு மற்றும் உங்களது திறன் ஆகியவையே உங்களுக்கு வெற்றியை தேடித் தரும். மேலும் முக்கியமான விஷயம் என்னவெனில் நாங்கள் எப்போதுமே அவளுடன் இருந்தோம், அவள் சுதந்திரமாக வெளியேவர முதுகெலும்பாக நாங்கள் இருந்தோம்.'' என்றார் த்ரிஷா தாயார்.
''சினிமா துறை ரோஜா படுக்கை என முடிவாக நான் சொல்லவில்லை ஆனால் ஒவ்வொரு துறையிலும் அதற்கென தனி போராட்டங்கள் உண்டு மேலும் ஒருவர் எப்போதுமே வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்பவராக இருக்கவேண்டும்'' என்றார் உமா. தனது மகள் திரைத்துறையில் வெற்றியடைந்ததற்கு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
பல தாய்மார்கள் திரைப்படத்துறை குறித்து கவலையுடன் இருப்பது குறித்து டோலிவுட்டின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தம்மாரெட்டி பரத்வாஜ் பேசியபோது இந்த தலைமுறையில் எத்தனை குழந்தைகள் திரைப்படத்துறையில் சேரக்கூடாது என அவர்களது பெற்றோர்கள் சொல்வதை கேட்கிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.
பாலியல் துன்புறுத்தல் என்பது சமூகத்தின் எல்லா பிரிவிலும் வியாபித்திருக்கிறது மேலும் சினிமா துறை அதில் ஒரு சதவீதம் மட்டுமே என்றார் அவர்.
பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் நிர்பந்தம் குறித்துச் சில உண்மைகள் பின்னணியில் இருப்பதை ஒப்புக்கொள்வதாக கூறிய அவர் வளர்ந்துவரும் இளம் நடிகைகள் போலியான நிறுவனங்களிடம் இரையாவதற்கு முன்னர் பாலியல் நிர்பந்த அழைப்புகள் குறித்து முறையாக விசாரிக்கவேண்டும். திரைத்துறை வர்த்தக சம்மேளனத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள எந்த நிறுவனமாவது பாலுறவுக்கு நிர்பந்திப்பது உட்பட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியுமென தம்மாரெட்டி உறுதியளித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்