You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமா விமர்சனம்: கோலி சோடா 2
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஒளிப்பதிவாளரான விஜய் மில்டனுக்கு இயக்குநராக ஓர் அடையாளத்தைக் கொடுத்த படம் 2014ல் வெளியான கோலி சோடா.
வலிமையற்ற சிறுவர்களை பலரும் துரத்த, அவர்கள் திரும்பி வெகுண்டெழும் கதையைக் கொண்ட அந்தப் படம் பெரும் வெற்றிபெற்றது.
அதனால், சில படங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பாணி கதைக்குத் திரும்பியிருக்கிறார் விஜய்.
வாழ்வில் மேலே வரத் துடிக்கும் மூன்று இளைஞர்கள். துறைமுகத்தில் ஒரு பெரிய தாதாவிடம் அடியாளாக வேலைபார்க்கும் மாறன் (பாரத் சீனி), காதலிக்காக அடிதடியை விட்டுவிட்டு வேறு வேலை பார்த்து முன்னேற நினைக்கிறான்.
ஒரு சிறிய ஹோட்டலில் வேலை பார்க்கும் ஒளி (இசக்கி பரத்), பெரிய கூடைப்பந்து வீரராகி ஒரு தொழிற்சாலையில் பணியாற்ற விரும்புகிறான்.
ஆட்டோ டிரைவரான சிவா (வினோத்), பணம் சம்பாதித்து கார் வாங்கி ஓட்ட விரும்புகிறான். இவர்கள் மூவருக்கும் நண்பர் முன்னாள் காவலரான நடேசன் (சமுத்திரக்கனி).
இந்த மூன்று இளைஞர்களுக்கும் வெவ்வேறு தீய சக்திகளால் பிரச்சனை ஏற்பட, நடேசனின் உதவியோடு எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே படம்.
நடேசனை, காவல்துறையினர் தூக்கிவந்து விசாரிப்பதில் இருந்து துவங்குகிறது படம். விசாரணை அதிகாரி ராகவனாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். காணாமல்போன மூன்று பேரைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார் ராகவன்.
அவர்கள் ஒவ்வொருவர் கதையாக நடேசன் சொல்ல ஆரம்பிக்க மெல்ல மெல்ல சூடுபிடிக்கிறது படம். ஒவ்வொருவரின் லட்சியம், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை என்று கதை சுவாரஸ்யமாகவே பின்னப்படுகிறது.
ஆனால், இரண்டாவது பாதியில்தான் பிரச்சனை. கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ளும் மூவரும் ஒன்று சேர்ந்து மூன்று வில்லன்களையும் அவர்களது ஆட்களையும் பிற்பாதியில் அடித்துக்கொண்டேயிருக்கிறார்கள் அல்லது அடிவாங்கிக்கொண்டேயிருக்கிறார்கள். அதனால், எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்கிறது படம்.
மூன்று இளைஞர்களின் லட்சியங்கள், அவர்கள் பிரச்சனை எல்லாவற்றையும் கிட்டத்தட்ட முதல் பாதியிலேயே சொல்லி முடித்துவிட்டதால், இரண்டாம் பாதியில் அந்த வில்லன்களை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டிய பகுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது. அதுவும் அடிதடியாகவே நகர்வதால், முழு படமும் பலவீனமாக காட்சியளிக்கிறது.
சமுத்திரக்கனியின் பாத்திரம்தான் மூன்று இளைஞர்களையும் இணைக்கிறது. நடேசனின் பின்னணி, அவருக்கு சிவாவின் தாயுடன் (ரேகா) இருக்கும் காதல் ஆகியவையும் போகிறபோக்கில் சொல்லப்படுவது நன்றாகவே இருக்கிறது.
ஆனால், படம் நெடுக குடித்துவிட்டு சமுத்திரக்கனி பேசும் தத்துவங்கள் பெரிய வதை. மற்றபடி, இந்தப் படத்தின் கதாநாயகன் சமுத்திரக்கனிதான்.
படத்தில் இளைஞர்களாகவும் அவர்களது காதலிகளாகவும் வரும் புதுமுகங்களின் நடிப்பில் எந்தப் பிரச்சனையும் இல்லை. சில காட்சிகளிலேயே வரும் கௌதம் மேனன் வசீகரிக்கிறார்.
பின்னணி இசை, ஒலிப்பதிவு ஆகியவை படத்தின் பிற பலவீனங்கள். பல இடங்களில் வசனங்கள் புரிவதில்லை.
நல்ல கதை, சுவாரஸ்யமான திரைக்கதையை வைத்துக்கொண்டு, சுமாரான படத்தை அளித்திருக்கிறார் விஜய் மில்டன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்