இந்தியாவின் பரபரப்பான சில தகுதிநீக்க வழக்குகள்

டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படவிருக்கிறது.

இவ்வாறு தகுதி நீக்கம் தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளன.

தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

2015 மார்ச் மாதம் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தன் கட்சியைச் சேர்ந்த 21 சட்டமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றச் செயலர்களாக நியமித்தார். இவர்கள் இரு பதவிகளை வகிப்பதால் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென பிரசாந்த் பாடீல் என்ற வழக்கறிஞர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து, நாடாளுமன்ற செயலர் பதவியை, லாபம் தரும் பதவி என்ற வரையறையிலிருந்து நீக்கி தில்லி சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து வரும்போதே ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்தார். மீதமுள்ள 20 பேரையும் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது.

இதனை எதிர்த்து, ஆம் ஆத்மி தில்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது. 2018 மார்ச்சில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், தகுதி நீக்க நோட்டீஸை ரத்து செய்தது.

கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

கர்நாடகாவில் 2010ல் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது, 11 பா.ஜ.க. உறுப்பினர்கள் உட்பட 16 சட்டமன்ற உறுப்பினர்கள் எடியூரப்பாவுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து அக்டோபர் 12ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் எடியூரப்பாவிடம் கூறினார்.

ஆனால், அக்டோபர் பத்தாம் தேதியன்று இந்த 16 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகர் அறிவித்தார். இதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினர். உயர் நீதிமன்றம் சபாநாயகரின் முடிவு செல்லுமென அறிவித்தது. இதற்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் விளக்கமளிக்க தகுந்த கால அவகாசமளிக்கவில்லையெனக் கூறிய உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கத்தை ரத்துசெய்தது.

மேகாலயா தகுதி நீக்க வழக்கு

2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் தேர்தலில் வென்றதும் அப்போதைய மேகாலயா முதல்வர் முகுல் சங்மா 18 சட்டமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றச் செயலர்களாக பதவி பிரமாணம் செய்துவைத்தார். இவர்களில் சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் அந்தப் பதவியை ராஜினமா செய்தார். மீதமுள்ள 17 சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றச் செயலர்களாகவும் இருப்பதால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமெனக் கோரி, மதல் சுமேர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களை நாடாளுமன்ற செயலர்களாக பதவியில் நீடிக்க செய்யும் சட்டம் செல்லாதென அறிவித்தது. ஆனால், தகுதிநீக்கம் செய்யும் முடிவை ஆளுநர் எடுக்க வேண்டுமெனக் கூறியது. இந்தத் தீர்ப்பையடுத்து பத்து பேர் தங்கள் செயலர் பதவியை ராஜினாமா செய்தனர். பிறகு மீதமுள்ள 7 பேரும் ராஜினாமா செய்தனர்.

ஆனால், அவர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து மாநில ஆளுநர் கங்கா பிரசாத் தேர்தல் ஆணையத்திடம் கருத்தைக் கேட்டார். ஆனால், அதற்குள் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது.

பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

தமிழக சட்டப்பேரவையில் 2017 பிப்ரவரியில் எடப்பாடி கே. பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, அதற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். ஆனால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தி.மு.கவின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அ.தி.மு.கவின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் பன்னீர்செல்வம் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமெனக் கோரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், சபாநாயகர் என்ன செய்ய வேண்டுமென உத்தரவிட முடியாது என்றுகூறி தி.மு.கவின் மனுவை தள்ளுபடி செய்தது.

தெலங்கானா தகுதி நீக்க வழக்கு

தெலங்கானாவில் மார்ச் 14ஆம் தேதியன்று 2 காங்கிரஸ் உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். கோமதி ரெட்டி, சம்பத்குமார் ரெட்டி ஆகிய இரு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஆளுநர் உரையின்போது தங்களது ஹெட்போனைத் தூக்கி எறிந்து கலகம் செய்ததால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் மதுசூதனச் சாரி தெரிவித்தார். ஆனால், இந்த தகுதி நீக்க உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது.

உத்தராகண்ட் தகுதி நீக்க வழக்கு

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணா தலைமையில் 9 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் 27 பா.ஜ.க. உறுப்பினர்களும் ஆளுநரைச் சந்தித்து ஹரீஷ் ராவத் தலைமையிலான அரசை பதவிநீக்கம் செய்யும்படி கோரினர். ஆனால், தனக்கு போதுமான ஆதரவு இருப்பதாக முதல்வர் ஹரீஷ் ராவத் தெரிவித்தார். இந்தப் பிரச்சனைக்கு முன்பாக காங்கிரஸிடம் 36 சட்டமன்ற உறுப்பினர்களும் முற்போக்கு ஜனநாயக முன்னணியின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் இருந்தது.

பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஹரீஷ் ராவத்திற்கு ஆளுநர் உத்தரவிட்டார். இதையடுத்து 9 அதிருப்தி உறுப்பினர்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். மார்ச் 28ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில், சட்டமன்றம் முடக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :